Advertisement

பூச்சியினத்து விநோனதங்கள் சொல்கிறார் கார்த்திகேயன்

பூச்சியினத்து விநோனதங்கள் சொல்கிறார் கார்த்திகேயன்


போராட்டம் கொலை திருட்டு மோசடி அராஜகம் அநியாயம் என்று திரும்பிய பக்கம் எல்லாம் மனசை வலிக்கச் செய்யும் எதிர்மறை செய்திகள் உலாவும் இன்றைய காலகட்டத்தில் ஆறுதலாக இருக்கும் ஒரே விஷயம் நட்பு ஒன்றுதான்.
சாதி,மதம்,பணம்,பதவி பாராது துாய அன்பு பூத்திருக்கும் இடமும் அதுதான்

எதற்காக இவ்வளவு முகாந்திரம் என்றால் ராகுல் என்ற முகம் தெரியாத ஒருவர் விடாமல் தன் நண்பர் கார்த்திகேயன் சுப்பிரமணியனின் புகைப்பட திறமையைப்பற்றி சொல்லி அவரைப்பற்றி தினமலர்.காம் பொக்கிஷம் பகுதியில் எழுதும்படி சொல்லிக்கொண்டே இருப்பார்.
இவ்வளவிற்கும் ராகுலும் ஒரு போட்டோகிராபர்தான் ஆனால் தன்னைப்பற்றியோ தனது படத்தைப்பற்றியோ பேசாமல் தன் நண்பர் பற்றி மட்டுமே சொல்லிக்கொண்டு இருப்பார்.

அவர் அப்படிவிடாமல் குறிப்பிட்டுச் சொன்ன நண்பர் கார்த்திகேயன் சண்முகசுந்தரம் கோவை வீரகேரளம் பகுதியைச் சேர்ந்தவர். படித்துமுடித்துவிட்டு சினிமா கேமிராமேனாகும் ஆசையில் சென்னை வந்தார் டிஜிட்டல் கேமிரா துாக்கி பாடங்களும் படித்துமுடித்தார்,பணியாற்ற படங்கள் மட்டும் வாய்க்கவில்லை.

சினிமா கனவு கானல் நீர் போல தெரியவே கொஞ்சமும் தயங்காமல் தாய்மண்ணான கோவைக்கு திரும்பிவிட்டார்.போட்டோகிராபி படித்திருந்ததாலும் பிடித்திருந்ததாலும் வர்த்தக ரீதியான போட்டோகிராபராகிவிட்டார்.

திருமணம் உள்ளீட்ட விசேஷங்கள் இல்லாத போது வீட்டில் சும்மாயிருக்க பிடிக்காமல் இயற்கையை படம் எடுக்ககிளம்பினார்.இயற்கையை படம் எடுக்க போனவரை ஒரு எட்டுக்கால் பூச்சி திசைதிருப்பி அவரை ஒரு பூச்சியினங்களை படம் பிடிக்கும் போட்டோகிராபராக்கியது.
இவர் பார்த்த ஒரு சிலந்திப்பூச்சிக்கு எட்டுக் கால்கள் மட்டுமின்றி எட்டுக்கண்களும் இருக்கவே ஆச்சரியமடைந்து பூச்சியினங்களை பற்றி படிப்பதிலும் அவற்றை படம் எடுப்பதிலும் ஆர்வம் கொண்டார்.கடந்த எட்டு வருடங்களாக ஆயிரக்கணக்கான பூச்சியினங்களை படம் பிடித்துள்ளார், ஒரு ஆக்சனோடு பூச்சிகளை படம் எடுக்கவேண்டும் என்பது இவரது விருப்பம் ஒரு படம் எடுக்க இரண்டு நாட்கள் காத்திருந்திருக்கிறார், பறந்துவரும் குளவியை படம் எடுக்க ஆடாமல் அசையாமல் ஒரே இடத்தில் நான்கு மணி நேரத்திற்கு மேல் உட்கார்ந்து இருக்கிறார்.

காலை எட்டு மணிக்குள்ளும் மாலை ஐந்து மணிக்கு மேலும் பூச்சியினங்களை படம் எடுக்க உகந்த நேரம் அப்போது அவைகள் பெரும்பாலும் ஒய்வில்தான் இருக்கும் எவ்வளவு விஷம் நிறைந்த பூச்சிகளாக இருந்தாலும் அவைகளை தொந்திரவு செய்யாதவரை அவைகள் நம்மை தொந்திரவு செய்யாது என்று பூச்சியினங்களை படம் எடுக்கவிரும்புபவர்களுக்கு டிப்ஸ்ம் வழங்குகிறார்.

பட்டாம்பூச்சி,குச்சிப்பூச்சி என்று பலவித பூச்சியினங்களை படம் எடுத்தாலும் சிலந்தி பூச்சிதான் இவரது மனம் கவர்ந்த ஒன்று இந்தியாவில் உள்ள அனைத்து சிலந்தி இனத்து பூச்சிகளையும் படம் எடுக்கவேண்டும் என்று விருப்பம் கொண்டுள்ளார்.
ஒரு சிலந்தி பூச்சி இனத்தில் பெண் சிலந்திதான் பலம் வாய்ந்தது அது தனது இணையுடன் உறவு வைத்து முடித்ததும் அந்த ஆண் சிலந்தியானது அடுத்த சில வினாடிகளில் அந்த இடத்தில் இருந்து காணாமல் போய்விட வேண்டும் இல்லாவிட்டால் பெண் சிலந்தி அந்த ஆண் சிலந்தியை சாப்பிட்டுவிடும்.

இதே போல முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் குளவியானது தன் குஞ்சுகள் முட்டையைவிட்டு வெளியே வந்ததும் சாப்பிடுவதற்காக கம்பளிப்பூச்சிகளை கொண்டுவந்து கூட்டில் போடும் அப்படி கூட்டில் போடும் கம்பளிப்பூச்சிகள் இறந்துவிட்டால் அந்த உணவு ருசிக்காது என்பதால் குஞ்சுகள் சாப்பிடும்வரை கம்பளிப்பூச்சிகளை கோமா ஸ்டேஜிலேயே அதாவது மயக்க நிலையிலேயே வைத்திருக்கும்...
இப்படி பூச்சிகளை பற்றிய பல சுவராசியமான கதைகளை படங்களுடன் சுமந்து கொண்டு இருக்கும் கார்த்திகேயனின் திறமைக்கு இப்போது சர்வதேச அளவிலான பாராட்டும் பரிசுகளும் வந்து கொண்டு இருக்கிறது, இந்த பாராட்டுகளோடு நமது பாராட்டும் போய்ச் சேரட்டும்.அவரது எண்:9843344019.

எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement