Advertisement

எங்களை கண்ணீரில் மிதக்கவிட்டான்...

எங்களை கண்ணீரில் மிதக்கவிட்டான்...

மாணவர்கள் மாணவர்களைக்கொண்டே நடத்திய அந்த நாடகத்தில் இருந்து இன்னும் வெளிவர முடியவில்லை
சென்னை ஈஸ்வரி என்ஜீனிரிங் கல்லுாரி மாணவர்களின் அறம் அறக்கட்டளை சார்பாக சில நாட்களுக்கு முன்பாக நடத்திய 'நெய்தல்' நாடகம்தான் அது.

சரியாக சொல்லப்போனால் அது நாடகம் அல்ல மீனவர்களின் வாழ்வியல் என்றே சொல்லலாம்.
கன்னியாகுமரியை தாக்கிய ஒக்கி புயல் ஒரு செய்தியாக அனைவரது கவனத்தில் இருந்தது இப்போது ஏறக்குறைய அநேகருக்கு மறந்தே போயிருக்கும்.

ஆனால் அந்த நேரத்தில் கடலுக்குள் மீன்பிடி தொழிலுக்கு போன ஆயிரக்கணக்கான மீனவர்களைக் காணாமல் அந்த குடும்பங்கள் துடித்த துடிப்பும் அதற்கு இந்த சமூகத்தில் ஏற்பட்ட பிரதிபலிப்பும்தான் நாடகம்.
கந்தலான ஆடையும் தலைவிரி கோலமும் கொண்ட அபலைப் பெண் ஒருவர் ஒவ்வொரு சீனிலும் எட்டிப்பார்த்து ''ஐயா என் பிரச்னையை காது கொடுத்து கேளுங்கய்யா ''என்று கேட்கிறார் இல்லையில்லை கெஞ்சுகிறார்.

ஆனால் அவரை ஏறேடுத்தும் பார்க்க தயங்கும் அரசியல்வாதிகள் மாறாக துரத்து துரத்தென்று துரத்துகின்றனர்.
யாரையும் நம்பியும் பயனில்லை என்ற நிலையில் சில நெஞ்சுரமிக்க மீடியா நண்பர்களின் உதவியுடன் மீனவர்கள் போராட்டத்தில் இறங்குகின்றனர்.போராட்டத்தின் நோக்கம் தெரியாமல் போலீசார் அவர்களை அடித்து ஒடுக்குகின்றனர்.

கரையில் பிறந்து, ஒவ்வொரு நாளும் கண்ணீரில் மிதக்கும் மீனவனின் கவலை மாறவே மாறாதா?அவன் சோகம் எப்போதுமே தீராதா? என்ற கேள்வியோடு நாடகம் முடிகிறது.
மீனவர்களின் வலியை நுட்பமாகச் சொன்ன இயக்குனர் அரசியல்வாதிகளை ரொம்பவே துணிச்சலாகவே சாடியிருக்கிறார்.அரசியல்வாதிகள் வரும் ஆரம்ப கட்டங்களிலும், அவர்கள் நடத்தும் கோமாளித்தனங்களாலும் பேசும் வசனங்களாலும் அரங்கம் சிரிப்பால் அதிர்கிறது.

நகைச்சுவையாக ஆரம்பிக்கும் இந்த நாடகம் போகப்போக பார்வையாளர்களின் கண்களில் நீர் திரையிட வைக்கிறது.
...மீனவனா பிறந்தது எங்க தப்பாய்யா..கடலுக்கு ஏதுய்யா எல்லை அப்படியே போனாலும் நாங்க என்ன தீவீரவாதியா? எதுக்குய்யா எங்களை சுடறீங்க..கடலுக்குள்ள போன அப்பனோ மகனோ அண்ணனோ தம்பியோ திரும்பிவந்தாதான்யா நிச்சயம், ஒகிப்புயல்ல காணமா போனவர்களை கண்டுபிடிக்க முடியாத விஞ்ஞானம் என்னய்யா விஞ்ஞானம்...என்று அடுக்கடுக்காய் மீனவ பாத்திரங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில்தான் யாரிடமும் இல்லை.

மாணவர்கள் இன்றைய நாட்டு நடப்பு தெரியாமல் வாட்ஸ் அப்,சமூகவலைதளம்,சினிமா என்று முழ்கியுள்ளனர் என்ற குற்றச்சாட்டை இந்த நாடகம் சுத்தமாக துடைத்து போட்டுள்ளது.மாணவர்களின் சிந்தனையும் செயலும் வேகத்துடனும் விவேகத்துடனும்தான் செல்கிறது என்பதை நிரூபிக்கும் வகையில் அமைந்திருந்த இந்த நாடகத்தில் பங்களிப்பு செய்தவர்கள் அனைவருக்கும் பராட்டுக்கள்.
-எல்.முருகராஜ்

murugaraj@dinamalar.in

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • Ravichandran Narayanaswamy - chennai,இந்தியா

    கேவலம் ஒரு சிறிய நாடு இலங்கை - அது நம்ப நாட்டு மீனவர்களை ஆட்டிப்படைக்கிறது - நம்முடைய ஊழல் அரசியல்வாதிகள் மீனவர்களின் பிரச்சனைகளை தீர்க்கஉதவாமல் அதில் கட்சிக்கு ஏதாவது லாபம் இருக்குமா என்ற நோக்கோடு தான் திரிகிறார்கள் - நமக்கென கடற்படை கிடையாதா - அவர்கள் என்ன செய்கிறார்கள் - ஒருத்தன் வந்து நம்ப அல்ல கொள்கிறான் சிறை பிடிக்கிறான் - இவர்கள் பூவா பறித்துக்கொண்டிருக்கிறார்கள் - மத்திய அரசு இலங்கையை கண்டிக்கவேண்டும் - கான்-கிரேஸ் காரன் கொடுமை செய்து தமிழர்களை அழித்தான் - மத்திய அரசு இலங்கையின் தவறுகளை ஏறி மிதிக்காமல் மென்மையாக நடப்பது அதை வளர்பதுபோலாகிறது - இனியாவது இலங்கைக்கு ஒரு சூடு கொடுப்போம். மீனவர்களை காப்போம். ஜெய் ஹிந்த்

  • என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா

    அப்படியே போனாலும் நாங்க என்ன தீவீரவாதியா? , இந்தியாவில் இருந்து இலங்கைக்கு என்னென்ன பொருட்கள் கடத்தப்படுது என்று அறிந்து கொள்ளுங்க ப்ளீஸ், இங்கே செம்மரம் என்றால் அங்கேயும் சில பெரிய அளவு கடத்தல் நடக்குது, மீனவர் என்ற போர்வையில் நடக்கும் அராஜகத்தை நீங்க எல்லாம் புறக்கணிக்குறீங்க , அவங்களால தான் அப்பாவிகள் குண்டடிபடுறாங்க

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement