Advertisement

ஒரு ரஜினி ரசிகனின் கதைஒரு ரஜினி ரசிகனின் கதை

எம்ஜிஆர் சிலையை திறந்துவைக்க ரஜினி போய்க்கொண்டு இருக்கிறார்

கோயம்பேடு அருகே சாலையின் இருபக்கத்திலும் இருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூட்டத்தில் இருந்து ஒரு இளைஞர் மட்டும் அனைத்து கட்டுக்காவலையும் உடைத்துக்கொண்டு நடுரோட்டிற்கு வந்து ரஜினியின் காரை மறிக்கிறார்.

கார் கண்ணாடியை திறந்து என்ன என்பது போல அந்த ரசிகரை ரஜினி பார்க்கிறார்.

''தலைவா இன்னைக்கு நீங்க பேசுற பேச்சில திமுக கதறணும் அதிமுக அலறணும் என்கிறார்.''

சரி என்பது போல தலையாட்டி புன்னகைக்க ரசிகர் வழிவிடுகிறார் கார் பயணத்தை தொடர்கிறது.

அன்றைய பேச்சு ரசிகர் எதிர்பார்த்தது போலவே சூடாக சுவையாக சுவராஸ்யமாக பல கேள்விகளுக்கு பதில்தரும் வகையில் அமைந்திருந்தது

இதற்கு நிச்சயம் அந்த ரசிகர் காரணமில்லை என்றாலும் இவரைப்போன்றவர்கள்தான் ரஜினியின் பலம் என்பதை அந்த ரசிகரைத் தேடிக்கண்டுபிடித்து பேசியதில் இருந்து தெரிந்தது.

குட்டி சந்திரன் என்கின்ற சந்திரன்

முப்பது வயதாகிறது சென்னை தி.நகர் பகுதியில் உள்ள ஒட்டல் ஒன்றில் உணவு பரிமாறுபவராக பணி.மாதம் 12 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம்.

பத்து வயதாகும் போது அருணாச்சலம் படம் பார்த்திருக்கிறார் அப்போது முதல் அவரது ரசிகராகிவிட்டார்.

ரஜினியின் ஒவ்வொரு படத்தையும் முதல் நாள் முதல் ஷோவில் இருந்து கடைசி காட்சி வரை அது நான்கு காட்சியாக இருந்தாலும் சரி ஐந்து காட்சிகளாக இருந்தாலும் சரி பார்த்துவிடுவது இவரது பழக்கம்.

அதன்பிறகு எப்போது விடுமுறை மற்றும் வாய்ப்பு கிடைத்தாலும் மீண்டும் மீண்டும் ரஜினியின் அந்தப்படம் தியேட்டரைவிட்டு எடுக்கும் வரை பார்த்துக்கொண்டேயிருப்பார்.அப்படி இவர் சந்திரமுகி படத்தை 130 வரை பார்த்திருக்கிறார்.

நாளாக நாளாக ரஜினி மீதான பற்றும் பாசமும் அதிகமாகியிருக்கிறதே தவிர கொஞ்சமும் குறையவில்லை.சிவாஜி படம் வந்த போது மொட்டை போட்டு ஒற்றை தாடிவைத்திருந்தார்,எந்திரன் படம் வந்த போது அலுமினிய ட்ரஸ் ஹெல்மெட் போட்டு வலம் வந்தார் அண்ணாமலை படத்திற்கு பிறகு அவரைப் போலவே ஆன்மீகவாதியாகி ருத்ராட்ச மாலைஅணிந்து கொண்டார்.

ரஜினிகாந்த் ஏதாவது விழாவில் கலந்து கொள்கிறார் என்றால் அந்த விழா நடைபெறும் மண்டபத்திற்கு முதல் நாளே சென்று எப்படி மேடையருகே செல்வது என்று திட்டம் போட்டுக்கொள்வார் அந்த திட்டப்படியே மேடைக்கு அருகே போய் ரஜினியை 'தரிசித்தும்'விடுவார்.

சிவாஜி பட சூட்டிங்கின் போது இவரது ஒட்டல் உணவுதான் ரஜினிக்கு போயிருக்கிறது அந்த தொடர்பை பயன்படுத்தி சிவாஜி படசூட்டிங்கையும் பார்த்துவிட்டு அவருடன் ஒரு படமும் எடுத்துக்கொண்டுவிட்டார்.

நேரில் பார்த்ததும் நிறைய பேச எண்ணியிருக்கிறார் ஆனால் சந்தோஷத்திலும் பதட்டத்திலும் எதுவும் பேசவில்லை ஆனால் அதற்காக வருத்தமும் இல்லை பார்த்ததே போதும் என்ற சந்தோஷப்பட்டார்.

ரஜினிக்கு முடியாமல் போன போது கோவில் கோவிலாக போய் அங்கபிரதட்சணம் செய்திருக்கிறார் கூடுதலாக பிற மத வழிபாட்டுத்தலங்களிலும் போய் பிரார்த்தனை செய்திருக்கிறார்.

பத்து வருடங்களுக்கு பிறகு மீண்டும் ரஜினியை தற்போது ராகவேந்திரா மண்டபத்தில் சந்திக்கும் வாய்ப்பு. இப்போதும் பேச வாய்ப்பில்லை ஆனால் அவர் கையில் ஒரு ருத்ராட்ச மாலையை கொடுத்து தனக்கு அனிவித்து ஆசீர்வாதிக்கும்படி கேட்டுக்கொண்டு தனது ஆசையை நிறைவேற்றிக் கொண்டார்.

இப்படி இவரைப்பற்றி படிப்பவர்களுக்கு இவர் ஒரு சரியான ரஜினி பைத்தியம் என்றுதான் எண்ணத்தோன்றும் ஆனால் மிக விவரமாக பேசுகிறார்.

''என்னப்பா? உங்க ஆளு! பள்ளிக்கூட வாடகை சரியாத்தர்றது இல்லையாம்,கோச்சடையான் படத்து பாக்கிய வேற கொடுக்கலையாம்?'' என்றதும் ''சார் மீடியா தப்பு செய்யுதுசார், பள்ளிக்கூடம் அப்பா பிள்ளை ரெண்டு பேர் பேர்ல இருக்கு பிள்ளைகிட்ட வாடகை கரெக்டா போய்கிட்டு இருக்கு அப்பா தனக்கு வரணும்னு சீனை கிரியேட் பண்றார் எத்தனை பேர்ட்ட வாடகை தரமுடியும், அப்புறம் கோச்சடையான் படம்ங்றது வியாபாரம் லாப நட்டம் இருக்கும் அத அவுங்க பேசி சரி செஞ்சக்குவுங்க இதல மக்கள் எங்க சார் பாதிக்கிறாங்க'' என்கிறார்.

அரசியல்வாதி ரஜினிய இப்ப இவருக்கு இன்னும் ரொம்ப பிடிச்சுருக்கு எத்தனையோ பேர பார்த்துட்டோம் ஏமாந்துட்டோம்ங்றீங்க அப்ப தலைவர் ரஜினிய வரவிடுங்க நிச்சயம் மாற்றம் இருக்கும் ஏமாற்றம் இருக்காது என்றகிறார்.


மற்ற நடிகர்கள் மாதிரி இவருக்கு போஸ் கொடுக்கத் தெரியாது ஆனா மக்களுக்கு வெளிய தெரியாம நிறைய உதவிட்டுதான் இருக்காரு.மழை வெள்ளத்தின் போது ராகவேந்திரா கல்யாண மண்டபத்திலதான் பலர் தங்கவைக்கப்பட்டனர் அத்துடன் சுகாதார ஊழியர்களுக்கு தேவையான சகலமும் இங்கு இருந்துதான் கொண்டு போனோம் ஆனா அதெல்லாம் காட்டிக்கமாட்டாரு அவர் யார் என்பது எங்களுக்கு தெரியும் மக்களுக்கு தெரியும் தேர்தல் வரும் போது உங்களுக்கும் தெரியும் என்று சொல்லி முடித்துக்கொண்டார்.

இவரிடம் பேசுவதற்க்கான எண்:7871928741.

எ்ல.முருகராஜ்
murugaraj@dinamalar.in

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Ramesh M - COIMBATORE,இந்தியா

    பதிவிற்கு நன்றி.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement