Advertisement

சொல்கிறார்கள்

உடலுக்கும், தோலுக்கும் நல்லது!
மூலிகை நாப்கின்


தயாரித்து விற்பனை செய்து வரும், திருச்சி மாவட்டம், முசிறியை சேர்ந்த வள்ளி: சானிட்டரி நாப்கின் தயாரிக்க, ஐந்து நாள் பயிற்சி எடுத்த நான், மூன்று லட்சம் ரூபாய் கடனில் மிஷின் வாங்கி, ஏழெட்டு பேரை வேலைக்கு அமர்த்தி, இத்தொழிலில் இறங்கினேன். மூன்றாண்டுக்கு பின் நஷ்டம் ஏற்படவே கைவிட்டேன்.

மாற்று யோசனையாக, பிளாஸ்டிக் பயன்படுத்தாமல், 100க்கு 100 காட்டன் மற்றும், 'நான் ஓவன் கிளாத்' என்றழைக்கப்படும் நுாலிழை துணியுடன், சோற்றுக் கற்றாழை, துளசி, வேம்பு ஆகியவற்றை பயன்படுத்தி, மூலிகை நாப்கின் தயாரிக்க முடிவு செய்தேன்.மூன்று பிள்ளைகளும் படிப்பு நேரம் போக, என்னுடன் வேலை செய்வர். 'ஆல்டோ ப்ரீ ஹெர்பல் நாப்கின்ஸ்' என்ற பெயரில், மூலிகை நாப்கின்களை தயாரித்தோம்.

பல பெண்களிடம் நாப்கின்களை அன்பளிப்பாக கொடுத்தோம். குளிர்ச்சியாக இருப்பதாகவும், இதை உபயோகித்த பின் வெள்ளைப்படுதல் நின்று விட்டதாகவும், இன்னும் சிலர், நீர்க்கட்டிகள் சரியாகி விட்டதாகவும் கூறினர். அதன்பின் தான் துணிந்து, வெளி மார்க்கெட்டுக்கு அனுப்பினோம்.துளசி, வேம்பு, சோற்றுக் கற்றாழை, இம்மூன்றுமே நம் உடலுக்கும், தோலுக்கும் நல்லது.

ஒவ்வொரு பேடிலும், அதன் உட்பகுதியில், சம அளவில் கலந்து வைத்துள்ள துளசி, வேம்பு, சோற்றுக் கற்றாழை மூலிகை கலவை பவுடரை தடவி, அதன் மேல் பருத்தி பஞ்சு போட்டு மூடுவோம். அதன்பின் நான் ஓவன் கிளாத்தால், கவர் செய்து தைக்கிறோம். இதில் பயன்படுத்தப்படும் எதுவுமே, பிளாஸ்டிக் கிடையாது. அனைத்துமே, உறிஞ்சும் தன்மை கொண்டவை.

சொந்த வீடாக இருந்தால், மண் தரையில், 1 அடி ஆழத்துக்கு குழி வெட்டி, பயன்படுத்திய மூலிகை நாப்கின்களை போட்டு, மண்ணெண்ணெய் ஊற்றி எரித்தால் சாம்பலாகி விடும்; சுற்றுச்சூழலுக்கு கெடுதல் நேராது; மண்ணோடு மண்ணாக மக்கிப் போகும்.

அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள், மணல் நிரப்பிய பூந்தொட்டிக்குள், மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து விடலாம். மறுநாள், சாம்பலை காகிதத்தில் மடித்து, குப்பைத் தொட்டியில் போட்டு விடலாம். பள்ளி மற்றும் கல்லுாரிகளில், பெண்கள் மத்தியில் இது குறித்து விழிப்புணர்வு ஏற்பட, சொற்பொழிவு நிகழ்த்தி வருகிறோம்.

ராஜஸ்தான் மாநிலம் மற்றும் மும்பை, பெங்களூரு, சென்னை நகரங்களிலும், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், தர்மபுரி, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், திண்டுக்கல், சிவகங்கை, சிவகாசி போன்ற மாவட்டங்களிலும், பசுமை அங்காடிகளில் மூலிகை நாப்கின்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன.


பற்கள் பாதுகாப்பில் கர்ப்பிணிகள் அலட்சியம் கூடாது!
பெண்களுக்கு ஈறுகளில் ஏற்படும் பாதிப்புக்கான தீர்வுகளை கூறும், பல் மற்றும் ஈறு சிகிச்சை நிபுணர், ப்ரியா பிரபாகர்: ஈறுகளின் பாதிப்புக்கு மூல காரணம், 'ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரொஜெஸ்ட்ரான்' ஹார்மோன்கள்.

இவை, உடலில் அதிகரிக்கும் போதும், குறையும் போதும், ஈறுகளில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.குறிப்பாக பெண்களுக்கு, பூப்பெய்தும் பருவம், மாதவிடாய், கருவுறும் காலம், மாதவிடாய் நிற்கும் காலங்களில், ஹார்மோன் சுரப்பிகளில் ஏற்ற, இறக்கம் ஏற்படுவதால், அவை ஈறுகளில் பிரதிபலிக்கின்றன.

ஈறுகளை சுத்தமாக வைத்துக் கொள்ளாவிடில், 'டென்டல் பிளேக்' எனப்படும், மெல்லிய படலம் தோன்றும். பூப்பெய்தும் பருவத்தில் ஹார்மோன் சுரப்பு அதிகரிப்பதால், இந்த பிரச்னை தீவிரமாகும். இதை அப்படியே விட்டால், காரையாக படிந்து விடும். அதனால் ஈறுகளில் வீங்கி, சிவப்பு நிறமாக மாறத் துவங்கும்; ரத்தக்கசிவும் உண்டாகும்.

மாதவிடாய் துவங்கும் நாட்களில் ஈறுகளில் காணப்படும் இந்த பிரச்னை, மாதவிடாய் நின்றவுடன் தானாகவே சரியாகி விடும். சரியாகாவிடில் மருத்துவரை அணுகுவது அவசியம். கருவுற்ற தாய்மார்களுக்கு, இரண்டு அல்லது மூன்றாவது மாதங்களில், ஈறுகளில் ஏற்படும் பாதிப்பு, எட்டாம் மாதம் வரை படிப்படியாக அதிகரிக்கும்.

பிரசவத்துக்கு பின், இரண்டு மாதங்களில் எந்த சிகிச்சையும் இன்றி, தானாகவே குணமாகி விடும். எனவே, நான்கு மற்றும் ஆறாவது மாதத்தில் மருத்துவரை அணுகி, பற்களை சுத்தம் செய்தால், இப்பிரச்னைகளிலிருந்து காத்துக் கொள்ளலாம்.

கருவுற்ற பெண்களுக்கு, 'பெரிடான்ட்டைஸ்' பிரச்னையால், ஈறு மற்றும் அவற்றை சுற்றியுள்ள எலும்புகளில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு. இதனால், குறைப்பிரசவம் ஆகவும், குழந்தை எடை குறைவாகவும் பிறக்க வாய்ப்புண்டு. ஈறுகளில் ஏற்படும் பாதிப்பை உடனடியாக கவனிக்காவிடில், எலும்புகளையும் சிதைக்கும். கருவுற்ற தாய்மார்கள் பற்களை பாதுகாப்பதில் அலட்சியம் காட்டக் கூடாது.

மாதவிடாய் நிற்கும், 47 முதல், 55 வயது வரையிலான காலத்தில், ஹார்மோன் சுரப்பு குறையத் துவங்கும். இதன் காரணமாக, ஈறுகளில் வீக்கம், எரிச்சல், சுவையறிதலில் மாறுதல், வாய் உலர்தல், ஈறுகளில் அழற்சி ஏற்படும்.ஈறுகளில் ஒரு வித மினுமினுப்பு தன்மை காணப்படும். ரத்தம் கசியத் துவங்கும். உமிழ்நீர் சுரப்பது குறையும். இவையெல்லாம் சிறு சிறு பிரச்னைகள் தான். இவற்றை எளிதாக சரி செய்ய முடியும். வலி அல்லது பிரச்னை அதிகமாகும் போது மட்டும், மருத்துவ ஆலோசனை அவசியம்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement