Advertisement

பக்க வாத்தியம்

'இப்படியும் சில பைத்தியக்காரர்கள்...'
கோவையில், தி.மு.க., சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் சமீபத்தில் நடந்தது. சட்டசபை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் பேசுகையில், 'ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில், என்னோடு இணைந்து செயல்பட்ட பலர், எம்.ஜி.ஆர்., என்கிற பேய் காற்று வீசியபோது, திசை மாறி போய் விட்டனர். ஆனால், நான் மட்டும் மாறாமல், அதை எதிர்த்து நின்றேன். ஒரு நாள், எம்.ஜி.ஆர்., என்னை பார்த்து, 'நான் இருக்க வேண்டிய இடத்தில், நீ இருக்க வேண்டும்' என்றார். நான் திருப்பிச் சொன்னேன்... 'திராவிட நாடு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இந்த இயக்கத்துக்கு வந்தவன், உங்களோடு வரவேண்டிய அவசியமில்லை' என்றேன்.

இதைக் கேட்டுக் கொண்டிருந்த கட்சித் தொண்டர் ஒருவர், துரைமுருகன், அ.தி.மு.க.,வுக்குப் போக இருந்ததை நினைவுபடுத்துவது போல், 'அப்ப நீங்க, அவரு கூட போகலையா...' என்றார். உடனே துரைமுருகன், கோபத்தில் அவரை பார்த்து, 'இப்படியும் சில பைத்தியக்காரர்கள் இருக்கத் தான் செய்கின்றனர். என்ன செய்வது...' என்றதும், மேடையில் இருந்தவர்கள் மட்டுமல்லாது, கூட்டத்தில் இருந்தவர்களும் சிரித்து விட்டனர்.
'எம்.ஜி.ஆர்., மாதிரி 'சீன்' போடுறாரு...'
முன்னாள் முதல்வர், அண்ணாதுரை நினைவு நாளை முன்னிட்டு, சென்னை, கே.கே.நகர் சக்தி விநாயகர் கோவிலில், சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முதல்வர் பழனிசாமி பங்கேற்றார்.

முன்னதாக, முதல்வருடன் உணவருந்த, தோல் சுருங்கிய முதியோரை, அதிகாரிகள் தேர்வு செய்திருந்தனர்; அவர்களை அழைத்து, முதல்வர் அருகில் அமர வைத்தனர்.நிகழ்ச்சி முடிந்த பின், சாலையோரம் காத்திருந்த மக்களிடம் நடந்தே சென்று, மனுக்களை பெற்றார், முதல்வர். அப்போது, சில மூதாட்டியரின் கையை பிடித்தும், குழந்தைகளை அரவணைத்தும், போட்டோவிற்கு, 'போஸ்' கொடுத்து கொண்டிருந்தார்.

அதை பார்த்த கட்சிக்காரர் ஒருவர், 'என்ன தான், எம்.ஜி.ஆர்., மாதிரி, 'சீன்' போட்டாலும், அவர் போல ஆகுமா...' என்றதும், தொண்டர்கள் சிரித்தபடியே ஆமோதித்தனர்.


'அதிகாரிகளுக்கு 'அல்வா' கொடுத்த கவர்னர்'

மதுரையில், மீனாட்சி அம்மன் கோவில் அருகே, துாய்மை பணி தொடர்பான, விழிப்புணர்வு நிகழ்ச்சியில், கவர்னர், பன்வாரிலால் புரோஹித் பங்கேற்பதாக இருந்தது.

முன்னதாக, தெற்கு சித்திரை வீதிக்கு, அவர் வருவார் என்ற எதிர்பார்ப்பில், அத்தெருவை சுத்தப்படுத்தி, மாநகராட்சி அதிகாரிகள் காத்திருந்தனர். அங்கு வந்த கவர்னர், திடீரென அருகில் உள்ள தெருவிற்குள் நுழைந்தார்; அதை எதிர்பார்க்காத அதிகாரிகள், ஆடிப் போயினர்.

கவர்னர் சென்ற, ஒரு கடையின் முன்பகுதி முழுவதும், குப்பையாக கிடந்தது. வட மாநிலத்தைச் சேர்ந்த, அந்த கடை உரிமையாளரை அழைத்த கவர்னர், 'இப்படி, கடை முன் குப்பை கிடந்தால், எப்படி, உனக்கு லட்சுமி கடாட்சம் கிடைக்கும்...' என, ஹிந்தியில் பேசினார். பின், துடைப்பத்தை வாங்கி, அங்கு துாய்மைப்படுத்தினார்.

அங்கிருந்த ஒரு கடைக்காரர், 'கவர்னருக்கு, 'அல்வா' கொடுக்க பார்த்தனர், அதிகாரிகள்... ஆனால் அவர், 'அல்வா' கொடுத்து விட்டார்' என்றதும், மற்ற வியாபாரிகள் சிரித்தனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    ரெடிமேட் குப்பை போட்டுக் காத்திருந்தால் இப்படி அதிகாரிகளையும் சேர்த்துக் குப்பையாகப் பெருக்கித் தள்ளிவிட்டாரே ஆளுநர்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement