Advertisement

டீ கடை பெஞ்ச்

பெரிய பதவியில் அமர துடிக்கும் ஐ.ஏ.எஸ்., அதிகாரி!''தவியா தவிச்சிப்புட்டாரு வே...'' எனக் கூறி, 'கடகட'வென சிரித்தார் அண்ணாச்சி.

''என்னங்க... ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க... இது தான் நல்லது... தினமும் இப்படியே இருங்க...'' எனச் சொன்னார் அந்தோணிசாமி.

''கக்கூசுல, 'இருக்க'ப் போயிட்டு, தண்ணி வராம போனா எப்படி இருக்கும்...'' எனக் கூறி, மறுபடி, 'கடகட'வென சிரித்தார் அண்ணாச்சி.

''யாரு பா இந்த, அதிர்ஷ்டக்காரரு...'' எனக் கேட்டார் அன்வர்பாய். அவர் முகத்திலும் சிரிப்பு.

''மதுரையில, மன்னர் திருமலை நாயக்கர் பிறந்த நாள் விழாவுல கலந்துக்கிறதுக்காக, ஒரு அமைச்சரு, அரசு சுற்றுலா மாளிகையில, சமீபத்துல தங்கினாரு...

''காலை நேரத்துல, இந்த மாதிரி அவதியாயிடிச்சு...'சே... அவசர நேரத்துல இப்படியா...' என வெளியே வந்து, பொதுப் பணித் துறை உதவி பொறியாளரைக் கூப்பிட்டு, 'பராமரிப்பு செலவுக்காக, வருஷா வருஷம், 40 லட்சம் ரூபாய் வாங்கிக்கிறீங்களே... இது தான் நீங்க பராமரிக்கிற லட்சணமா...'ன்னு கேட்டு, 'ரைட் அண்ட் லெப்ட்' விட்டாரு... பிறகு, கலெக்டரையும் கூப்ட்டு, என்னன்னு பார்க்கச் சொல்லி இருக்காரு வே...'' என்றார் அண்ணாச்சி.

''உமக்குன்னு இப்படியெல்லாம் எப்படி மேட்டர் கிடைக்கறது ஓய்...'' என்றார் குப்பண்ணா.

''என்ன வே கிண்டலடிக்கீரு... அந்த அவதி இருக்கே...'' என, கண்ணை அகல விரித்து, முழித்து, நடித்துக் காட்டினார். நண்பர்கள் சிரித்தனர்.

''கோட்டையை நோக்கி, அமைதி பேரணி நடத்த திட்டமிட்டிருக்காங்க பா...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார் அன்வர்பாய்.

''யாருங்க...'' எனக் கேட்டார் அந்தோணிசாமி.

''சென்னையில, விளம்பர பலகை வைக்க, நிரந்தர உரிமம் வழங்கணுங்கிற கோரிக்கையை வலியுறுத்தி, தொழில் முனைவோர் கூட்டமைப்பின் நிர்வாகிகள், முதல்வர் பழனிசாமி, உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணியை நேர்ல சந்திச்சு, கோரிக்கை மனு வழங்க, 'அப்பாய்ன்ட்மென்ட்' கேட்டிருக்காங்க... கோட்டையை நோக்கி அமைதி பேரணி நடத்தவும், திட்டமிட்டிருக்காங்க பா...'' என, விளக்கினார் அன்வர்பாய்.

''அமைச்சர்களை பிடித்து, பசையான பதவிக்கு வர, ஐ.ஏ.எஸ்., அதிகாரி கடுமையாக முயற்சி செய்யிறாருங்க...'' என, கடைசி தகவலுக்கு மாறினார் அந்தோணிசாமி.

''யாரு ஓய்...'' எனக் கேட்டார் குப்பண்ணா.

''கவர்னர் மாளிகையில் கோலோச்சி வந்த, ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஒருவரை, அங்கிருந்து வெளியேத்திட்டாங்க... அவர் இப்ப, காத்திருப்போர் பட்டியல்ல இருக்காரு...

''கலால் அல்லது வீட்டு வசதித்துறையில், பசையான பதவியில உட்காரணும்ன்னு திட்டமிட்டு, பல அரசியல்வாதிகளை காக்கா பிடித்து, பதவி பெற முயற்சி செஞ்சிட்டிருக்காருங்க...'' என்றார் அந்தோணிசாமி.

''என்ன மோகன்... வீட்டுல எல்லாரும் சவுக்கியங்களா...'' என, கடைக்கு வந்த ஒருவரைப் பார்த்து, நலம் விசாரித்தார் அன்வர்பாய்.

நண்பர்கள் கிளம்பினர்; நாயர், மோகனுக்கு டீ கலக்கத் தயாரானார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Vijay_USA - Philadelphia,யூ.எஸ்.ஏ

    அமைச்சரு கடைசியில கழுவுனாரா..இல்லயா..?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement