Advertisement

சென்னையில் சுயாதீன சினிமா விழா


ஒரே ஒரு நுாறு ரூபாயில் ஒரு அபூர்வ வாய்ப்பு
சென்னையில் சுயாதீன சினிமா விழா

சென்னையில் வருகின்ற 4/2/18 ந்தேதி சுயாதீன சினிமா விழா நடைபெற இருக்கிறது.இந்த விழா பற்றி நான் சொல்வதற்கு முன் தேசிய விருது பெற்ற பரதேசி படத்தின் ஔிப்பதிவாளர் செழியன் சொன்ன சில வரிகளை படித்துவிடுங்கள்.

..சுயாதீன சினிமா என்ற சொல்லே யாரையும் சார்ந்திருக்காமல் உருவாக்கக்கூடிய ஒன்று என்றுதான் பொருள். சினிமா மேதைகள் எல்லாம் சுயாதீன சினிமாவிலிருந்துதான் தொடங்கியிருக்கிறார்கள். ஏன்? என்று யோசித்துப் பாருங்கள். அதில் ஒரு சுதந்திரம் இருக்கிறது. நீங்கள் எடுப்பது சரியோ தவறோ அதில் முழுமையாக இயங்க முடியும். உங்கள் தவறுக்கு தயாரிப்பாளரைக் குறை சொல்ல முடியாது. எனவே சுயாதீன சினிமா எடுப்பதற்கு ஒரு துணிச்சல் தேவைப்படுகிறது..

-செழியன்..

பண்பாட்டின் பிரதிபலிப்பு கலாச்சாரத்தின் மறுபதிப்புதான் இன்றைய சினிமா என்றெல்லாம் காதில் பூச்சுற்றினாலும் உண்மையில் அது ஒரு வியாபாரம்தான்.போட்ட பணத்தைவிட கூடுதலாக எடுக்கவேண்டும் அதற்காக சினிமாவை எப்படி வேண்டுமானாலும் சிதைக்கலாம் என்ற கூட்டம்தான் இங்கே கும்மியடித்துக் கொண்டிருக்கிறது.

உங்கள் கருத்தை, ஜொலிக்கும் நட்சத்திரங்கள் இல்லாமல், தலையீடு செய்யும் தயாரிப்பாளர் இல்லாமல்,ஆடம்பரம் இல்லாமல், ஆர்ப்பாட்டம் செய்யாமல் என்ன நினைக்கிறீர்களோ அதை நீங்கள் தனியாகவோ அல்லது ஒத்த கருத்துகொண்ட நண்பர்களுடன் இணைந்தோ ஒரு படம் எடுத்தீர்கள் என்றால் அதுதான் சுயாதீன சினிமா.

இந்த அடிப்படையில் எடுக்கப்பட்ட சினிமாக்களை பார்க்கவும்,அப்படிப்பட்ட சினிமா எடுத்தவர்களுடன் கலந்துரையாடவும் ஒரு நாள் முழுவதும் உங்களுக்கு ஒரு வாய்ப்பு தந்திருக்கிறார் தமிழ் ஸ்டூடியோ அருண்.

ஆம்...வருகின்ற 4ந்தேதி சென்னையில் பிரசாத் லேப் மற்றும் ஆர்கேவி ஸ்டூடியோவிலும் காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெற உள்ளது.

தமிழ் ஸ்டூடியோவும் சலனம் அறக்கட்டளையும் இணநை்து நடத்தும் இந்த சுயாதீன திரைப்பட விழாவில் கன்னடப் படமான 'ஹரி கத பிரசங்கா', ஹிந்திப் படமான 'ரங்கபூமி', சிங்களப் படமான 'ஆறிதழ் அரளிப்பூ', மலையாளப் படமான 'ஓராளப்பாக்கம்', லீனா மணிமேகலையின் 'Is it too much to ask' என்கிற ஆவணப்படம் மற்றும் தமிழ்ப் படமான 'சிவபுராணம்' ஆகிய 6 படங்கள் திரையிடப்படுகிறது.

திரைப்படங்களை எப்படிப் பார்ப்பது என்பதைப் பற்றி 'காக்கா முட்டை' படத்தின் இயக்குநர் மணிகண்டனும், சுயாதீனத் திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுதுவது எப்படி என்பதைப் பற்றி சிங்களப் படங்களின் இயக்குநர் பிரசன்ன விதானகேவும் வகுப்புகள் எடுக்கிறார்கள்.

திரைப்படத் தணிக்கைத்துறையின் அதிகார வரையறை குறித்தும், சுயாதீனத் படங்களுக்கான சந்தை குறித்தும் கருத்துக்கள் வழங்கப்பட உள்ளது. அத்துடன் 'சிவபுராணம்' படத்தின் திரையிடல் முடிந்தபிறகு, அந்தப் படக்குழுவோடு ஒரு விவாதமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சினிமா கனவோடு இருப்பவர்களுக்கும் சினிமா ரசனையை வளர்த்துக் கொள்ள விரும்புபவர்களுக்கும் இந்த திரைவிழா ஒரு நல்ல வாய்ப்பு அனுமதிக்கட்டணம் நுாறு ரூபாய்.ஒரே ஒரு நுாறு ரூபாயில் ஒரு மாற்றம் தரப்போகும் சினிமா அனுபவத்தைப் பெற நீங்கள் தயாரா?

மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்:9840644916.

-எல்.முருகராஜ்
murugaraj@dimamalar.in

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement