Advertisement

தமிழ் மேளங்கள் முழங்கும் ஆன்மீகக்கண்காட்சி


தமிழ் மேளங்கள் முழங்கும் ஆன்மீகக்கண்காட்சி

ஒரு லட்சத்து 36 ஆயிரம் சதுர அடியில் 500 அரங்குகளுடன் இந்து ஆன்மீகக்கண்காட்சி சென்னை வேளச்சேரி குருநானக் கல்லுாரியில் நடந்து வருகிறது.

பிரம்மாண்டமான கயிலை மலையையும் அதில் இருந்து பெருகிவரும் கங்கையையும் ஆரம்பத்திலே வைத்துள்ளனர்.

ஆண்டாள்தான் கண்காட்சியை ஆள்கிறாள் எனச் சொல்லும்படியாக பல இடங்களில் ஆண்டாள் கட்-அவுட்டில் அழகுடன் சிரிக்கிறாள்.
வணங்கக்கூடிய தாவரங்களை வகைப்படுத்தி உள்ளனர் ஒவ்வொர் தாவரத்திற்கும் ஒரு குணம் இருக்கிறது என்று சொல்லி விவரிக்கும் போது வியப்பு ஏற்படுகிறது.

பெரும் பொருட்செலவில் மாதிரி கிராமம் அமைக்கப்பட்டு உள்ளது பார்க்கும் போது நாம் இப்போது பெற்றுள்ளதை விட இழந்துள்ளது அதிகமோ என்ற ஏக்கம் உண்டாகிறது.
பெங்களூரில் உள்ள ஒரு பெரிய மென்பொருள் நிறுவனத்தின் உயர்பொறுப்பில் இருக்கும் அன்பர் தன் பெயரைக்கூடச் சொல்லாமல் ஒரு அற்புதமான காரியத்தை இலவசமாக செய்துவருகிறார் .இவர் உருவாக்கியுள்ள shaivam.org என்ற இலவச ஆப்பின் மூலமாக ஆன்மீகம் தொடர்பான பல விஷயங்களை தெரிந்து கொள்ளலாம்.இந்த அரங்கிற்கு வந்தால் இந்த ஆப்பை இலவசமாக டவுன் லோடு செய்தும் தருகின்றனர்.

பசுவின் உடலில் பல வித தேவர்களும் கடவுளர்களும் வாசம் செய்வதாக சொல்வர் யார் யார் எங்கு இருக்கின்றனர் என்பதை விளக்கும் வகையில் வைக்கப்பட்டுள்ள பசு பலரது கவனத்தையும் கவர்கிறது.
மூளை தண்டுவடத்தால் பாதிக்கப்பட்டவர்களின் சரணாலயமான ஆயக்குடி அமர்சேவா சங்கத்தினரால் உருவாக்கப்பட்ட அழகான பொம்மைகள்,உளுந்துார் பேட்டை சாரதா ஆஸ்ரமத்தினரால் மீட்டுருவாக்கப்பட்ட பராம்பரிய நெல்விதைகள்,வரிசைகட்டி நிற்கும் 63 நாயன்மார்கள்,பசுஞ்சானத்தால் செய்யப்பட்ட பொருட்கள் என்று பல புது விஷயங்களை இங்கு பார்க்கலாம்.

மேலும் ஆங்காங்கே உள்ள அரங்குகளில் இலவசமாக கிராம்பு தண்ணீர்,சுண்டல்,புத்தகம் போன்றவைகளையும் தருகின்றனர்.
நமக்கு தெரிகிறதோ இல்லையோ இந்தியில் சிரித்தபடி பஞ்சாப் சரித்திரம் பாருங்கோ என்று அழைக்கிறார் ஒருவர், உள்ளே போனால் பகத்சிங் உள்ளீட்டோரை சித்திரமாக பார்க்கமுடிகிறது, வெளியே வரும்போது பஞ்சாப் சரித்திரப்புத்தகம் ஒன்றும் (ஆங்கிலத்தில்) இலவசமாக வழங்குகிறார்.

12 ஜோதிர்லிங்கத்தை ஒரே இடத்தில் தரிசிக்க பிரம்மகுமாரி இயக்கத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர்.இங்கே என்னைக் கவர்ந்த இன்னோரு விஷயம் நாம் கழட்டித்தரும் செருப்பை பவ்யமாக சிரித்தபடி வாங்கவும், திரும்பித்தரவும் செய்யும் தொண்டர்கள்தான்.
மகுட மேளம்,பெரிய மேளம்,பம்பை மேளம்,பறை மேளம்,துடுப்பு மேளம்,மண் மேளம்,எருதுக்கட்டு மேளம்,வட்டக்கிளியல் மேளம்,கயிலாய மேளம் என்று ஒரு அரங்கு நிறைய தமிழ் வாத்திய மேளங்கள் நிறைந்துள்ளன இதனை வாசித்து நாமே அதன் இனிமையான சத்தத்தை கேட்கவும் செய்யலாம்.


நிறைய சாதி சார்ந்த அரங்குகள் இருக்கின்றன அதில் சவுராஷ்ட்ரா சமூக அரங்கத்தில் சாதாரணமாக எழுதிவைத்திருந்த வரிகள்தான் எனக்கு பெரிய விஷயமாகப்பட்டது. 99 சதவீதம் கண்தானம் செய்து வரும் இந்த சமூகம் இப்போது உடல் தானம் செய்வதிலும் முதன்மை பெற்று வருகிறது என்று எழுதியிருந்தனர்.இதைவிட இந்த சமூகத்திற்கு பெருமை சேர்க்கும் விஷயம் வேறு என்ன இருந்துவிடப்போகிறது.பக்தியைத் தாண்டியும் இப்படி பல நல்ல விஷயங்கள் கண்காட்சியில் நிறைந்துள்ளது.
-எல்.முருகராஜ்

murugaraj@dinamalar.in

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Cheran Perumal - Radhapuram,இந்தியா

    சாதிக்காக பல்வேறு அரங்குகள் இருந்தாலும் அவைகள் மூலம் ஒவ்வொரு சாதியும் உறுப்புகளாக இணைந்து சமுதாயம் என்னும் உடலை திறம்பட இயங்கவைக்கின்றன என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. மேலும் தாழ்த்தப்பட்டவர்கள் என்று பேசப்படும் சில சாதிகள் செய்திருக்கும் சாகசங்கள் நம்மை அவர்கள்பால் பெருமை கொள்ள வைக்கின்றன. எவருமே இந்த மண்ணில் தாழ்ந்தவர்கள் இல்லை என்பதை அழுத்தமாக உணர வைக்கின்றன. காண வேண்டிய அரிய கண்காட்சி.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement