Advertisement

அந்த எட்டயபுரத்து சுப்பையா இங்க வளந்தானா?...


அந்த எட்டயபுரத்து சுப்பையா இங்க வளந்தானா?..


பாரதி யார்? என்ற தலைப்பிலான நாடக ஒத்திகை பார்த்துவிட்டு வியந்து போய் கடந்த சில மாதங்களுக்கு முன் எழுதியிருந்தேன்

நாடகம் அரங்கேற்றமாகும் போது எங்கு இருந்தாலும் அங்கு போய்விடவேண்டும் என்றும் முடிவு செய்திருந்தேன்ஆனால் பத்திரிகையாளர்களின் நேரத்தையும் நாளையும் வேலையையும் தீர்மானிப்பது பத்திரிகையாளன் இல்லையே
நாடக அரங்கேற்றத்தற்கு செல்ல முடியாமல் போனது


இது நடந்து சில மாதங்களுக்கு பிறகு நேற்று சென்னை மைலாப்பூர் ஆர்ஆர் சபாவில் மீண்டும் நாடகம் நடப்பதாக வந்த தகவலை அடுத்து அடித்து பிடித்துப் போய் இடம் பிடித்து உட்கார்ந்தேன்.
பாரதியின் வாழ்க்கை பலரும் பல கோணத்திலும் பல வடிவத்திலும் பிழிந்து கொடுத்துள்ளனர் கொடுத்து வருகின்றனர் ஆனாலும் திகட்டுவது இல்லை


அந்த வகையில் பாரதியின் வாழ்க்கையை நாடகமாக பிரம்மாண்டப்படுத்தி இருந்தனர்.பாரதியாக நடித்த இசைக்கவி ரமணனை பாரதி மட்டும் பார்த்திருப்பேராயேனால் கட்டிப்பிடித்து பாராட்டி ஒரு கவியே பாடியிருப்பார் அப்படி ஒரு உயிர்த்துடிப்பான நடிப்பு.மற்ற கதாபாத்திரங்களும் கிட்டத்தட்ட அப்படியே.

இருக்கும் இடம் தெரியாமல் காணப்பட்ட மைக்குகள்,நாடக திரையில் கணநேரத்தில் மாறும் பின்னனி காட்சிகள்,அரங்க அமைப்பு என்று ஒவ்வொன்றும் பிரமாதமாக இருந்தது.


அந்த எட்டயபுரத்து சுப்பையா இங்க பொறந்தானா? என்ற பாடலுடன் துவங்கி நடந்த இந்த இரண்டு மணி நேர நாடகத்தை சீன் பை சீன விவரிப்பதை விட இந்த நாடகத்தை உங்கள் பகுதியில் போட்டு பார்க்க ஏற்பாடு செய்யுங்கள் முக்கியமாக பள்ளி,கல்லுாரி போன்ற இளைய தலைமுறையினரிடம் நாடகத்தை கொண்டு சேர்த்தால் ஆயிரம் புத்தகங்கள் ஏற்படுத்தாத தேச பக்தியை இந்த ஒரு நாடகம் ஏற்படுத்திவிடும்.
நிறைகளை சொல்வது போல சில குறைகளையும் சுட்டிக்காட்ட வேண்டியது நமது கடமையாகும் காரணம் அடுத்து இந்த நாடகம் மேடேயேறும் போது இந்த குறைகள் தவிர்க்கப்படலாம் அல்லவா..


பாரதியைப் பற்றிய இந்த நாடகம் எப்படி பயணிக்கிறது என்பதை சுருக்கமாக நாடகத்திற்கு முன்பாக விளக்கிவிடலாம்.அப்போதுதான் புதிதாக நாடகம் பார்க்கும் இந்த தலைமுறையினருக்கு பாரதி தமிழ்நாட்டைவிட்டு புதுச்சேரி சென்றதன் காரணம் புலப்படும்.
பாரதி தன் உதவியாளர் குவளைக் கண்ணனைப் பற்றி எழுதிய பாடலை அவரிடமே கொடுத்த பாடச்சொல்வார் ஆனால் ஆர்வக்கோளாறில் எழுதப்பட்ட பக்கத்தை பார்க்காமலே குவளையார் கவிதை படிப்பார் இது எப்படி சாத்தியம்?


பெரும்பாலான நேரங்களில் வீட்டில் அரிசி பருப்புக்கே அல்லாடியே பாரதியின் மனைவி செல்லம்மாவாக வந்த தர்மா ராமன் தேர்ந்த நடிப்பு ஆனால் அவரது உயர்ந்த விலை புடவையும், டாலடிக்கும் மூக்குத்தி உள்ளீட்ட நகைகளும் அவரை எளிமையாக பார்க்கவிடாமல் தடுக்கிறது.
ஒலிப்பதிவு செய்யப்பட்ட பாரதி பாடல்களை விட அவ்வப்போது ரமணன் பாடும் பாடல்களே உயிர்த்துடிப்புடன் இருக்கிறது, ஆற அமர ஒலிப்பதிவு செய்யப்பட்ட பாடல்களில் இன்னும் ஜீவனை கூட்டலாம்.


கடற்கரை மீட்டிங்கில் பாரதி பேசும் மேடைக்கும் மைக்குக்கும் இடையிலான துாரம் சம்பந்தம் இல்லாமல் இருக்கிறது அதை சரி செய்யவும்
ஆறரை மணிக்கு நாடகம் ஆரம்பித்துவிட்டது ஆனால் ஏழரை மணி வரை வாலண்டியர்கள் யாராவது ஒரு விருந்தினரை அழைத்துக் கொண்டு வந்து நாடகம் பார்த்துக் கொண்டிருந்தவர்களை தள்ளி உட்காருங்க மாறி உட்காருங்க என்று இடையூறு செய்தே கொண்டேயிருந்தனர், நாடகத்தை மதித்து நேரத்தோடு வரவேண்டும் இல்லாவிட்டால் மற்றவர்களுக்கு இடையூறு இல்லாமல் பின்னால் உட்கார வேண்டும்.


பாரதியார் 39 வயதில் இறந்தவர்,அது கைத்தடி கொண்டு நடக்கும் வயதல்ல, அவரது உருவமே நிமிர்ந்த நடையும் கம்பீரமும்தான். உடம்புக்கு முடியாமல் இருந்தார் என்று சொல்லவேண்டும் என்றால் லேசாக நெஞ்சை பிடித்துக் கொண்டு இருமிக்காட்டினாலே போதும் பார்வையாளர்கள் புரிந்து கொள்வர், அதைவிட்டு கைத்தடி என்பது அவரது கம்பீரத்தை குறைக்கும் செயலேவே தெரிகிறது.
இதெல்லாம் சின்ன சின்னக் குறைகள்தான் மற்றபடி நடிகர் எஸ்.வி.சேகர் வாழ்த்துரையில், நான் போட்ட 6500 நாடகங்களும் இந்த ஒரு நாடகத்திற்கு இணையாகது என்று சொல்லவைத்த,என்னால் பேச முடியல என்று சுகி.சிவத்தை கண் கலங்க வைத்த பாரதி யார்? நாடகத்திற்கு இணையேதும் இல்லை.


-எல்.முருகராஜ்
murugararj@dinamalar.in

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • மகாத்மா - Chennai,இந்தியா

    இசைக்கவி இரமணன் ஐயா எடுத்துக்கொண்ட பாத்திரத்தை எப்போதுமே செவ்வனே செய்து முடிப்பவர் அது உரை வீச்சாயினும் சரி, கவியரங்கமாயினும் சரி நாடக மேடையாயினும் சரி. இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழின் வித்தகர். வாழி அவரது கலை வாழி அவர்தம் தொண்டு.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement