Advertisement

ஆச்சரியங்களின் மொத்த உருவம் ஸ்ரீதர் ஆச்சார்யா...

ஆச்சரியங்களின் மொத்த உருவம் ஸ்ரீதர் ஆச்சார்யா...

ஒரு காலத்தில் இரண்டு ரூபாய் பள்ளிக்கட்டணம் கட்டவே சிரமப்பட்டவர் இன்று இந்தியா முழுவதும் 14 இடங்களில் தொண்டு நிறுவனம் அமைத்து பார்வையற்ற பள்ளி மாணவர்களுக்கும், முதியோர்களுக்கு சேவை செய்து வருகிறார்.
கடந்த நாற்பது வருடங்களில் நுாற்றுக்கணக்கான பார்வையற்ற மாணவர்களை பட்டதாரிகளாக்கி அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தியவர்,நக்சலைட்டுகள் நடமாடும் வட மாநிலங்களில் உள்ள கந்தமால்,காலகண்டியில் உள்ள மலைவாழ் குழ்ந்தைகளின் மறுவாழ்விற்கு வித்திட்டவர், இலவச கண் மருத்துவமனை நடத்துபவர்,இப்படி இன்னும் பல ஆச்சர்யமான விஷயங்களுக்கு சொந்தக்காரரான இவர் ஒரு தமிழர் என்பதுடன் தேசமே பெரிதென்று போற்றும் ஒரு முன்னாள் ராணுவ அதிகாரியும் கூட.


அவரே ஸ்ரீதர் ஆச்சார்யா

இந்தியாவின் ஐஎஸ்ஒ சான்றிதழ் பெற்ற தொண்டு நிறுவனம் இவருடைய நவஜீவன் பார்வையற்றவர்களுக்கான மறுவாழ்வு மையம்தான். இந்த நிறுவனத்தின் சேவையை பாராட்டி மத்திய அரசு சிறப்பு தபால் உறை வெளியிட்டுள்ளது ஒன்றே போதும் நிறுவனத்தின் தரத்தை சொல்ல.

நவஜீவனுக்குள் செல்லும் முன் ஸ்ரீதர் ஆச்சார்யாவைப்பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.

வேதபண்டிதர் வீட்டு குழந்தையான ஸ்ரீதர் காஞ்சியில் இவரது தாத்தா வீட்டில்தான் வளர்ந்தார்.அப்போது தனியார் பள்ளிகள் கிடையாது அரசாங்க பள்ளிகள்தான் மாதம் இரண்டு ரூபாய் கட்டணம்.இந்த இரண்டு ரூபாய் கட்டணத்தை ஸ்ரீதரால் கட்டமுடியாத நிலை.

காஞ்சி மடத்தின் மகா பெரியவரான சந்திரசேரேந்திர சுவாமிகள், ஸ்ரீதர் போன்ற நாற்பது மாணவர்களை தேர்வு செய்து படிக்கவைத்தார்.அப்படி படிக்கும் மாணவர்களை உற்சாகப்படுத்தும் விதத்தில் இந்த சிறுவர்களிடம் நிறைய பேசுவதுண்டு, அதிலும் ஸ்ரீதர் என்றால் அவருக்கு மிகவும் பிரியம்.ஸ்ரீதரை மடத்தின் சார்பில் நடந்து வந்த வேதபாடசாலையில் படிக்கவைத்தார்.

(இதற்கு தாத்தாவிடம் அனுமதி பெறுவதற்காக மின்சாரம் இல்லாத அந்தக்காலத்தில் ஒரு அரிக்கேன் விளக்கின் உதவியுடன் மகா பெரியவர் இரவு நேரம் வீட்டிற்கு வந்ததை நினைத்தால் இப்போதும் மெய்சிலிர்க்கிறது என்கிறார்.)

மேற்கொண்டு வேதம் படிப்பதற்காக காசிக்கு சென்றார் அங்கு நிறைய படித்தார் அதைவிட நிறைய சிரமப்பட்டார்.அன்றாடம் சாப்பிடுவதற்காக படிக்கும் இடத்தில் இருந்து அன்னதானம் போடும் இடத்திற்கு தினமும் மூன்று கிலோமீட்டர் துாரம் சென்று வந்தார் .இதில் வகுப்பு ஆரம்பிப்பதற்குள் வந்துவிடவேண்டும் என்பதற்காக எப்போதும் அந்த துாரத்தை செருப்பற்ற கால்களுடன் ஒட்டத்தில்தான் கடப்பார், அப்படியும் சில நேரம் அன்னதானத்திற்கான வரிசை நீண்டு கிடக்கும் அது போன்ற வேலையில் வகுப்பிற்கு நேரமாகிவிடக்கூடாது என்பதற்காக வயிற்றில் நீரை மட்டும் நிரப்பிக் கொண்டு ஒடிவருவார்.

வேதம் படித்ததன் காரணமாக பத்ராச்சலம் உள்ளீட்ட நாட்டின் பல்வேறு மடங்கள் கோவில்களில் பார்த்த வேலையில் மனம் லயிக்கவில்லை, இந்த நேரத்தில் இந்திய தேசிய ராணுவத்தில் ஜூனியர் காமெண்ட் ஆபிசராக பதவி கிடைத்தது.

அங்கு 17 ஆண்டுகள் பணியாற்றினார் ஆனாலும் மனதில் ஒரு நிறைவில்லை,தன் மனம் எதை நாடுகிறது என்பதை அறிய மீண்டும் மகா பெரியவருடன் ஒரு சந்திப்பு.

அந்த சந்திப்பின் போது நடந்த நீண்ட உரையாடலில் முடிவில்...

சொர்க்கம் பற்றி தெரியாது ஆனால் நரகம் பற்றி சொல்ல முடியும் நான்கு விதமான நரகங்கள் உண்டு

முதுமை என்பதே முதல் நரகம்

முதுமையின் போது வறுமை இருந்துவிட்டால் அது இரண்டாவது நரகம்

முதுமை வறுமை இவற்றுடன் பார்வை பறிபோவது மூன்றாவது நரகம்

முதுமை வறுமை பார்வையின்மையோடு பார்க்கவும் பராமரிக்கவும் ஆள் இல்லாமல் போவது நான்காவது நரகம்.

இந்த நான்கு நரகங்களோடும் வாழும் மனிதருக்கு சேவை செய் அதுக்குதான் நீ பிறந்திருக்கே என்று பெரியவர் சொல்லிவிட்டார்.

தலைக்குள் ஆயிரம் விளக்கு போட்டது போல ஒரு பிரகாசம் தனது தேடலுக்கான விடை கிடைத்த சந்தோஷத்துடன் என்ன பெயரில் நான் என் தொண்டு நிறுவனத்தை நடத்தட்டும் என்றதும் எந்த ரயிலில் என்னைப்பார்க்க வந்தாய் என்று கேட்டு நவஜீவன் எக்ஸ்பிரஸ் என்று சொன்னதும் அந்தப்பெயரையே வைத்துக்கொள், சீனிவாசப் பெருமாள் என்றால் கண்கண்ட தெய்வம் மட்டுமில்ல கண்கொடுக்கும் தெய்வமும் கூட ஆகவே பெருமாள் இருக்கும் இடத்திற்கு போய் உன் சேவையை ஆரம்பி என்றும் சொல்லிவிட்டார்.

இப்படி திருப்பதியில் ஆரம்பிக்கப்பட்டதுதான் நவஜீவன் முதியோர் பராமரிப்பு இல்லம் மற்றும் பார்வையற்ற பள்ளி மாணவர்களுக்கான பள்ளி.

ஆரம்பிக்கும் போது திருப்பதியில் ஆரம்பிக்கும் அளவிற்கு பணம் இல்லை ஐந்து ரூபாய் வாடகையில் மங்களம் என்ற கிராமத்து குடிசையில்தான் ஆரம்பித்தார்.பிறகு நல்லவர்கள் உதவியால் நன்கொடையால் படிப்படியாக திருப்பதி பக்கம் உள்ள திருச்சானுார் வந்து இடத்தை வாங்கி முதியோர் இல்லாம் பார்வையற்றோர் பள்ளி இவற்றுடன் இலவச கண் மருத்துவமனை நடத்திவருகிறார்.ராணுவத்தில் இருந்த போது சுற்றிய அனுபவமும் கற்ற மொழிகளும் இவரது சேவைக்கு கைகொடுக்கின்றன.

கடந்த நாற்பது ஆண்டுகளில் மெதுவாக அதே நேரம் உறுதியாக இவரது சேவை தொடர்கிறது.ஆந்திரா அரசின் சித்துார் மாவட்டத்தில் அங்கீகாரம் பெற்ற ஒரே பார்வையற்றோர் பள்ளி இவருடையதுதான்.

திருச்சானுாரில் மட்டுமின்றி தமிழகத்தில் பெருங்களத்துார் உள்பட நாட்டின் பதினான்கு இடங்களில் நவஜீவன் தொண்டு நிறுவனம் வெற்றிகரமாக இயங்கிவருகிறது.1070 பேர் அன்றாடம் பயன் பெற்றுவருகின்றனர்.14 கிளைகளில் 164 பேர் பணியாற்றி வருகின்றனர்.ஒரு நாளைக்கு ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் செலவாகிறது.

இந்த செலவு முழுவதும் நன்கொடையாளர்கள் தரும் பணத்தில்தான் நடக்கிறது.அவர்கள்தான் நவஜீவனின் நிஜமான துாண்கள் நான் வெறும் கருவிதான்.தாத்தா,மகன்,பேரன் என்று மூன்று தலைமுறைகளாக நன்கொடை கொடுப்பவர்களும் உண்டு.இதில் மகன்களும் பேரன்களில் பலரும் நவஜீவனுக்கு வந்ததேயில்லை ஆனால் இதன் ஜீவன் என்ன என்பதை உணர்ந்து வழங்குகின்றனர், அவர்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் ஈடாகாது.

அதே போல மாளிகை போன்ற வீடு பணியாட்கள் உயர்ந்த உணவு கல்வி என்று அனைத்து வசதிகள் வாய்ப்புகள் உள்ள ராணுவ வேலையை விட்டுவிட்டு தொண்டு நிறுவனம் தொடங்கப்போகிறேன் என்றதும் என் பேச்சுக்கு மறு பேச்சு பேசாமல் என்னுடன் வந்து பல காலம் குடிசை வீட்டில் தங்கியபடி என்னையும் நவஜீவனையும் உயிர்ப்புடன் இயங்கச் செய்தவர் இப்போதும் செய்பவர்,இன்று வரை என் பென்ஷன் பணத்தில் மட்டுமே குடும்பத்தை கவனித்துக் கொள்ளும் மனைவி கவுசல்யாவிற்கு நன்றி.

இறந்து போகும் ஆதரவற்ற முதியார்களுக்கு நானே பிள்ளையாக இருந்து காரியம் செய்யும் போது குறுக்கே விழுந்து தடுக்காமல் தன் பிள்ளை எது செய்தாலும் அது நல்லதாகத்தான் இருக்கும் என்று மனதார என்னுடன் இருந்து என்னை வாழ்த்திக்கொண்டு இருக்கும் என் வயதான தாயார் ருக்மணி, என்னை புரிந்து கொண்டதுடன் தன்னையும் புரிந்து கொண்டு சாதாரண பள்ளியில் படித்து இன்று நல்ல நிலையில் இருந்து எனக்கு உதவிக்கொண்டிருக்கும் என் பிள்ளைகள் பதஞ்சலி-ரம்யா ஆகியோருக்கும் நன்றி சொன்னார்.

முத்தாய்ப்பாக நவஜீவனை ஆசீர்வாதிக்கும் திருமலை சீனிவாசன், மற்றும் அறக்கட்டளை செயலாளர் சீனிவாசன், மேலாளர் சீனிவாசன் ஆகிய மூன்று சீனிவாசன்களுக்கு நான் எப்போதும் கடமைப்பட்டுள்ளேன் என்று சொல்லும் ஸ்ரீதர் ஆசார்யாவிற்குதான் பார்வையற்ற பள்ளிக்குழந்தைகள் ஆதரவற்ற முதியோர்கள் சமூகம் நிறைய நன்றிக்கடன் பட்டுள்ளது.

அவரது எண்:9849617808,மேலாளர் எண்:9908537528.

-எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement