Advertisement

காரைக்காலில் ஒரு இனிய இயற்கை உணவகம்


காரைக்காலில் ஒரு இனிய இயற்கை உணவகம்

அதிகம் நெரிசல் இல்லாத அமைதியான காரைக்கால் கடற்கரையின் காலை வேளையில் ஒரு மாருதி கார் வந்து நிற்கிறது.காரை ஒட்டிவந்தவர் காரை நிறுத்திவிட்டு பின்பக்க கதவை திறக்கிறார் வரிசையாக பொருட்களை இறக்கிவைக்கிறார்.அடுத்த இருபதாவது நிமிடத்தில் இயற்கை மூலிகை பானங்கள் விற்கும் கடை ரெடி.

அருகம்புல்,வாழைத்தண்டு,கொள்ளு,கேரட்பீட்ரூட்,நெல்லிக்கனி சாறாகவும்(juice)சுக்கு காபி,மூலிகை கீரை,முடக்கத்தான் கீரை,சிறுதானிய கஞ்சி,உளுந்தக்களி ஆகியவை சூடான சூப்பாகவும்,கேழ்வரகு கஞ்சி,சிறுதானிய கஞ்சி,உளுந்தக்களி,முளைகட்டிய பயிறு ஆகியவை சாப்பிடவும் கிடைக்கிறது.
இவரது கடை எப்போது திறக்கும் என்று எதிர்பார்தவர்கள் போல கடற்கரையில் நடைப்பயிற்சி உடற்பயிற்சியில் ஈடுபட்டவர்கள் கடையை சுற்றி கூடி தங்களுக்கு வேண்டியதை வாங்கி சாப்பிடுகின்றனர்.

சிரித்த முகத்துடனும் அனைவரையும் வரவேற்று அவரவர்க்கு வேண்டியதை கொடுக்கிறார் சிவ நடராஜன்.இவர்தான் இந்த இயற்கை உணவகத்தின் தொழிலாளி முதலாளி எல்லாம்.
நிறைய பணம் சம்பாதிக்கவேண்டும் குடும்பத்தை பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக வெளிநாட்டு வேலையை விரும்பும் இளைஞர்களில் இவரும் ஒருவராகத்தான் இருந்தார்.

மலேசியா,சிங்கப்பூரில் சில ஆண்டுகள் வேலை பார்த்தார் எதிர்பார்த்த வருமானமும் கிடைத்தது ஆனால் ஏதோ ஒரு நெருடல் மனதில் திருப்தியில்லாமலே இருந்தார்.இந்த சூழ்நிலையில் இவரது தந்தையும் இயற்கை மூலிகை உணவுப்பொருள் தயாரித்து விற்றுவந்தவருமான ஜெயச்சந்திரன் @கையில் நல்லதொரு ஆரோக்கியமான தொழில் இருக்கேப்பா இதை ஏன் செய்யக்கூடாது?# என்றதும் உடனே சரி என்று சொல்லி தொழிலில் இறங்கிவிட்டார்.
அதிக பக்குவத்துடனும் நிறைவான தரத்துடனும் சுவையுடனும் இவர் தயாரித்துதந்த மூலிகை உணவுப்பானங்களுக்கும் உணவுகளுக்கும் நல்ல வரவேற்பு கிடைக்கவே ஒன்று இரண்டு என்று கூட்டிக்கொண்டே வந்தவர் இப்போது பதிமூன்று வகையான பொருட்களை விற்கிறார்.

வாடிக்கையாளர்கள் பலரும் இவருக்கு நண்பர்களே கூட்ட நேரத்தில் அவர்களே வேண்டியதை எடுத்துச் சாப்பிட்டுவிட்டு பணம் கொடுத்துவிட்டு செல்வர்.
கந்தாலானாலும் கசக்கி கட்டு கூழானாலும் குளித்து குடி என்ற பழமொழிக்கு ஏற்ப அதிகாலை வேளை என்றாலும் பளிச்சென்று இருப்பார்.வருபவர்கள் வாய் மலர வரவேற்பார்.சுற்றுச்சுழல் ஆர்வலர் என்பதால் பிளாஸ்டிக் என்பது அறவே இல்லை,ஓரு முறை வாடிக்கையாளர் உபயோகித்த ஸ்டீல் டம்ளரை மறுமுறை உபயோகிப்பது கிடையாது,வெந்நீரால் கழுவியபிறகு மறுநாள்தான் உபயோகிக்கிறார்.

காசு வருமே என்பதற்க்காக செயல்படுவதும் கிடையாது உதாரணமாக யாராவது அருகம்புல் சாப்பிட்டுவிட்டு உடனே கேப்பைக்கூழ் கேட்டால் அருகம்புல் சாறு சாப்பிட்டு ஒரு மணி நேரத்திற்கு வேறு எதுவும் சாப்பிடக்கூடாது அப்போதுதான் அருகம்புல்லின் மருத்துவத்தன்மை உடம்புக்கு கிடைக்கும் என்று சொல்லி அவர் கேட்ட கேப்பைக்கூழை விற்கமாட்டார்.
முன்பொரு முறை ஒரு விபத்தில் கைவிரல் பாதிப்படைந்துவிட மருத்துவர் இவரை வீட்டில் ஒய்வெடுக்கச் சொல்லிவிட்டார் ஆனால் கையில் கட்டுப்போட்டுக்கொண்டு மறுநாளே கடற்கரைக்கு வந்துவிட்டார், அந்த சமயத்தில் இவரது கையாகவும் மனதாகவும் இருந்து வியாபாரத்தை கவனித்துக் கொண்டது இவரது மனைவி லலிதாதான்.

இப்போதும் வீட்டில் டி.வி.,யில் வரும் இயற்கை உணவு சார்ந்த நிகழ்வுகள் வந்தால் அதைப்பற்றி குறித்துவைத்துக் கொண்டு கணவருடன் அது சம்பந்தமாக பேசி வாடிக்கையாளருக்கு அந்தப் புதிய மூலிகை உணவை அறிமுகப்படுத்த காரணமாக இருக்கிறார்.
காலை 4 மணி ஆரம்பிக்கும் இவரது வேலை இரவு வரை தொடர்கிறது.மூலிகை சாறு மற்றும் உணவுக்கான பொருட்களை இவரே நேரில் போய் வாங்குகிறார் இவரே முன்னிருந்து தயாரிக்கிறார்.

வெளிநாடுகளில் வேலை பார்த்து பணம் சம்பாதித்தபோது இல்லாத மன நிறைவு இந்த இயற்கை உணவகத்தின் மூலம் கிடைக்கிறது,பண வரவு குறைவு ஆனால் மனநிறைவு அதிகம் எனக்கு மனநிறைவுதான் தேவை என்று சொல்லும் சிவ.நடராஜனுக்கு ஒரு கனவு உணடு, அது முழுக்க முழுக்க சிறுதானியங்களால் தயாரிக்கப்படும் இயற்கை உணவகம் ஒன்றை நடத்த வேண்டும் என்ற அவரது அந்தக்கனவு விரைவில் நனவாகட்டும்,சிவ.நடராஜனுடன் பேசுவதற்கான எண்:9965970290.

-எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா

    சார் உண்மையில் இவர்கள் அல்லவோ மனிதருள் மாணிக்கம்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement