Advertisement

பேசு சசி பேசு..

பேசு சசி பேசு..

எப்படி வருகிறார்கள்? எங்கிருந்து வருகிறார்கள்? ஏன் வருகிறார்கள்? என்பெதெல்லாம் சரியாக தெரியவில்லை, ஆனால் சமீபகாலமாக தமிழ்நாட்டின் ஏதவாது ஒரு பகுதியில் மனநலம் பாதித்த வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் திடீரென முளைத்தார் போல தெருவில் திக்கு தெரியாமல் சுற்றித்திரிவது வாடிக்கையாகி வருகிறது.
அப்படித்தான் கடந்த 19/11/17 ந்தேதி சுமார் முப்பது வயதுடைய பெண் கோவை வெரைட்டி ஹால் பகுதியில் சுற்றித்திரிந்த போது பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் அந்தப் பெண்ணை மீட்டு ஈரநெஞ்சம் அறக்கட்டளையினரிடம் ஒப்படைத்தனர்.

முதியோர் காப்பாகம் நடத்தும் ஈர நெஞ்சம் அறக்கட்டளையினர் அந்தப் பெண்ணின் பாதுகாப்பு கருதி காரமடையில் உள்ள கருணை இல்லத்தில் சேர்த்தனர்.இதற்குள்ளாகவே பத்து நாட்கள் ஒடிவிட்டது.

இவ்வளவு நடந்தும் அந்தப் பெண் பசிக்கும் சரி பேச்சுக்கும் சரி வாயை திறக்கவேயில்லை.கட்டாயப்படுத்தியே சிறிய அளவில் உணவு கொடுக்கவேண்டியிந்தது.சின்ன சின்னதாய் சொன்ன வார்த்கைளைக் கொண்டு அவர் ஆந்திராவைச் சேர்ந்தவர் என்பது மட்டும் தெரியவந்தது.


பத்து நாட்கள் அனைவரும் அந்தப் பெண்ணின் மீது செலுத்திய அன்பு அக்கறையின் காரணத்தாலும் மருத்துவர்கள் தந்த மருந்தின் தன்மை காரணமாகவும் பத்து நாட்கள் கழித்து ஒரு போன் நம்பரை சொன்னார்.
அந்த போன் நம்பருக்கு தொடர்பு கொண்ட போது, மறுமுனையில் பேசிய சசிகலாவின் ஜானகிராமன் அழுதே விட்டார் ,சொன்ன அங்க அடையாளங்களை வைத்து, 'ஆமாம் சார் அது என் மணைவி சசிகலாதான் சார், எங்களுக்கு இரண்டு மாத பெண் குழந்தை இருக்கிறது, எங்களுக்குள் எந்த மனவருத்தமும் இல்லை ஆனால் அவர் மட்டும் மனநிலை சரியில்லாமல் இருந்தார் திடீரென காணாமல் போய்விட்டார்.

நான் இங்கே போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளேன் பத்து நாட்களாக சரியாக சாப்பிடாமல் துாங்காமல் கைப்பிள்ளையை வைத்துக் கொண்டு தவித்துக் கொண்டு இருந்தேன், உங்கள் போன்தான் எனக்கு இப்போது உயிரைக் கொடுத்துள்ளது நான் என் வேலை காரணமாக கொஞ்சநாள் தமிழ்நாட்டில் இருந்ததால் கொஞ்சம் தமிழ் தெரியும் இன்னும் இருபத்து நான்கு மணி நேரத்திற்குள் கோவை வந்துவிடுவேன் என் மனைவியை பத்திரமா பார்த்துக்குங்க சார் என்றவர், அடுத்த கணமே கிடைத்த ரயிலில் ஏறி மறுநாள் கைக்குழந்தையுடன் கோவை வந்துவிட்டார்.
அவர் பயணத்திந்து வந்த 12 மணி நேரத்திற்குள் 24 முறை போன் கால்கள் செய்து, 'இப்ப என் மனைவி எப்படி இருக்கா? சாப்பிட்டாளா? துாங்கினாளா? என்று கேட்டுக்கொண்டே இருந்தார்.

கருணை இல்லத்தில் நுழைந்து தன் மனைவி சசிகலாவை நேரில் பார்த்ததுதான் தாமதம், சசி...என்று ஏக சத்தத்துடன் ஒடோடிப்போய் மனைவியை கட்டிப்பிடித்துக் கொண்டு கதறி அழ ஆரம்பித்துவிட்டார், 'பாரு சசி, நம் பிள்ளையை.. யார்ட்டேயும் பால் குடிக்கமாட்டேங்கிறா? நீ பால் குடு சசி, பாவம் நம் பாப்பா, சசி பாரு சசி, பாப்பாவா பாரு சசி, உன்னைப்பார்த்து சிரிக்குது பாரு சசி, நம் பாப்பாகிட்ட பேசு சசி என்று, குழந்தையை சசியின் கையில் கொடுத்துவிட்டு இவர் குழந்தையைப் போல மனைவியின் மடியில் தன் முகம் புதைத்து கேவிக்கேவி அழ ஆரம்பித்தார்.
இந்த அன்பு பிரளயத்தை யாரும் தடுக்கவும் இல்லை தடை செய்யவும் இல்லை ஜானகிராமனின் பரிசுத்தமான அன்பும் குழந்தையின் பரிசமும் சசிகலாவிடம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த அவர் முகத்திலும் ஒரு பொலிவு புத்துணர்வு குழந்தையை தாவி வாங்கிக் கொண்டு கொஞ்சியவர் கணவரையும் கண்ணில் அன்பு கசிய பார்த்தார்.

குழந்தையின் பசி போக்கிய தாயின் பசி போக்க தானே தட்டு நிறைய சாப்பாட்டை போட்டுக்கொண்டு வந்து நொறுங்க பிசைந்து சின்ன சின்ன உருண்டையாக்கி மனைவிக்கு ஊட்டிவிடலானார்.சுற்றியிருப்பவர்கள் எல்லாம் சசி சாப்பிடுவார் என்பதையே அப்போதுதான் நம்ப ஆரம்பித்தனர்.
சாப்பிடு சசி கொஞ்சம் தண்ணீர் குடி இந்தா மறு சோறு என்று ஜானகிராமன் ஒரு பச்சைக்குழந்தையைப் போல சாப்பாட்டில் பாசத்தை பிசைந்து பிசைந்து ஊட்ட சசியின் கண்களில் மட்டுமின்றி சுற்றியிருந்தவர்கள் அனைவரது கண்களிலும் கண்ணீர்.

போலீஸ் உள்ளீட்ட வழக்கமான நடைமுறைகளை எல்லாம் முடித்துக் கொண்டு குழந்தையை துாக்கிக்கொண்டு அந்த தம்பதியினர் சிரித்த முகத்துடன் தங்கள் ஊருக்கு கிளம்பிச் சென்றனர்.
எல்லோருக்கும் நிம்மதி என்றாலும் சசிகலாவை குடும்பத்துடன் சேர்த்து வைக்க ரொம்பவே பாடுபட்ட ஈரநெஞ்சம் மகேந்திரனுக்கு மட்டும் இன்று காலைதான் கூடுதல் நிம்மதி மற்றும் சந்தோஷம் அதற்கு காரணம் ஜானகிராமனிடம் இருந்து வந்த போன்தான்.

இன்று காலை ஒன்பது மணியளவில் போனில் பேசிய சசிகலாவின் கணவர் ஜானகிராமன்தான் சார் நாங்க நல்லபடியா ஊர் வந்து சேர்ந்துட்டோம், என் மனைவியை ரொம்ப தெளிவாகவும் சந்தோஷமாகவும் இருக்கா ரொம்ப நன்றி சார் என்றவர் பக்கத்தில் இருந்த சசிகலாவிடம் போனைக் கொடுத்து பேசச்சொன்னார் அவரும் நிறுத்தி நிதானமாக 'ரொம்ப நன்றி அண்ணா சந்தோஷம் அண்ணா 'என்றார்.
இந்த வார்த்தைக்காக இன்னும் எத்தனை பேரை வேண்டுமானாலும் கரை சேர்க்கலாம் என்ற உத்வேகம் பெற்றுள்ள மகேந்திரனுடன் தொடர்புகொள்வதற்கான எண்:9080131500.

-எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (4)

 • NARAYANAN.V - coimbatore,இந்தியா

  மகேந்திரன் அவர்களே நீங்கள் நீடுழி வாழ்க.அதே சமயம் சகோதரி சசிகலாவுக்கு இப்படி ஒரு சோகம் நிகழ்ந்ததற்கான காரணமும் ஆராயப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

 • skv - Bangalore,இந்தியா

  ADAKADAVULE PAAVAMAA IRUKKUKKU

 • நாஞ்சில் நாடோடி - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  மகேந்திரன் அவர்களுக்கு பாராட்டுக்கள்...

 • என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா

  நெஞ்சம் நொறுங்கி விட்டது, ஆனால் மகேந்திரன் என்ற நண்பரிடம் வயது வித்தியாசம் பாராமல் காலில் விழுந்து வணங்குகிறேன்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement