Advertisement

மதுரையில் ஒரு மகத்தான மனித நேய மையம்...

ஆர்.பாலகுருசாமி, ஆர்.அமுதநிலவன், எம்.அருண்குமுார், ஸ்ரீவித்யா மஞ்சுநாத், எஸ்.சபரிமணிகண்டன், பி.வெங்கடேஷ், வி.ரம்யா, கே.செந்தில்குமார்.

இவர்கள் எட்டு பேரும் இளைமையும் திறமையும் நிறைந்த மதுரையைச் சேர்ந்த மருத்துவர்கள்.இவர்கள் எட்டு பேரும் அவரவர் துறைகளில் கெட்டிக்காரர்கள் வேறு வேறு துறைகளில் வேறு வேறு மருத்துவமனைகளில் வேலை செய்கின்றனர். இவர்கள் மனமெல்லாம் நிறைந்திருப்பது மனிதநேயம்தான்.


நம்மை மருத்துவராக்கிய இந்த சமூகத்திற்கு நாம் ஏதாவது செய்யவேண்டும் என்று முடிவு செய்தனர் கிராமங்களுக்கு கூட்டாக சென்று இலவச மருத்துவ முகாம் நடத்தினர் முகாமிற்கு கூட வரமுடியாமல் வீட்டில் முடங்கிக் கிடந்தவர்களை வீட்டிற்கே போய் பார்த்து சிகிச்சை கொடுத்தனர்.

அப்போது,சில வீடுகளில் படுக்க நல்ல ஒரு படுக்கை விரிப்புக்கோ ஒரு 'டயாபருக்கோ' வழியில்லாமல் மலஜலம் சிறுநீர் கழிவுகளுக்கு நடுவில் ஒரு வேண்டாத ஜந்துவைப் போல உயிரைப்பிடித்துக் கொண்டு படுத்திருந்தவர்களை பார்த்தனர்.

உற்றவர்களையும் உறவினர்களையும் குறை சொல்ல முடியாது,வாட்டும் வறுமை காரணமாக கண் எதிரே தன்னை சுமந்து பெற்றவர்களையும் வளர்த்தவர்களையும் இப்படித்தான் பார்க்க முடிந்ததே தவிர இதைத்தாண்டி அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை, செய்யவும் தெரியவில்லை.

முதலில் இதற்கு முடிவு காணவேண்டும் இப்படிப்பட்டவர்களை வீடு வீடாக தேடிப்போய் வைத்தியமும் பார்க்க முடியாது பாரமரிக்கவும் முடியாது. ஒரே இடத்தில் ஒன்றாக வைத்து வைத்தியம் பார்ப்போம் அவர்கள் வலியை முடிந்தவரை குறைப்போம் மரணம் வரை வேதனை இல்லாத அமைதியான வாழ்க்கையை வழங்குவோம் என்று முடிவு செய்தனர்.

அதன் விளைவாக உருவாகியதுதான் நேத்ராவதி வலி நிவாரணம் பராமரிப்பு மற்றும் மறுவாழ்வு மையம் சுருக்கமாக நேத்ராவதி மறுவாழ்வு மையம்.இவர்களுக்கு தெரிந்து நேத்ராவதி என்று ஒரு பெண் மருத்துவர் இருந்தார் தன் உடம்பில் புற்றுநோயை சுமந்து கொண்டு ஆனால் அதன் வலியையோ சுவடையோ வெளியே காட்டிக்கொள்ளாமல் எப்போதும் ஒரு புன்னகையுடன் ஏழை எளியவர்களுக்கு வைத்தியம் பார்த்துக்கொண்டே கடைசிவரை இருந்தார், இறந்தார்.

அவரது தொண்டுள்ளம் எப்போதும் எங்கும் நீக்கமற நிறைந்திருக்க வேண்டும் என்பதற்காகவே அவரது பெயரில் மையம் துவங்கப்பட்டது.

வீட்டில் வைத்து பார்க்க முடியாத பெற்றோர்களை தாத்தா பாட்டிகளை ரோட்டில் துாக்கி போட்டு விடாதீர்கள் எங்களிடம் கொண்டுவந்து விட்டுவிடுங்கள் நாங்கள் கடைசிவரை பார்த்துக் கொள்கிறோம் உங்களால் முடிந்ததை கொடுங்கள் முடியாவிட்டால் அவ்வப்போது வந்துபார்த்துவிட்டு செல்லுங்கள் அதுவும் முடியாவிட்டாலும் பராவாயில்லை நாங்களே உணவுடன் அன்பையும் பரிமாறிக்கொள்கிறோம் என்று சொல்லி ஏற்படுத்தப்பட்ட அமைப்பு இது.

இந்த அமைப்பிற்கு நல்ல உள்ளளங்கள் உதவ முன்வரும் போது அதனை ஏற்க முறையாக ஒரு அறக்கட்டளை வேண்டும் என்பதற்க்காக ஐஸ்வர்யம் அறக்கட்டளை ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

மதுரையில் இருந்து அழகர் கோவில் போகும் வழியில் உள்ள கடச்சேனேந்தலில் உள்ள வாடகைக்கட்டிடத்தில் இந்த மையம் தற்போது இயங்கிக் கொண்டு இருக்கிறது.இருபதிற்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.டாக்டர்கள் சுழற்சி முறையில் வந்து பார்த்துக் கொள்கின்றனர் அதே போல இங்கேயே தங்கியுள்ள செவலியர்கள் இவர்களை பாரமரித்துக் கொள்கின்றனர்.

நான் போயிருந்த போது டாக்டர் பாலகுருசாமி அங்கு இருந்தார் மையத்தை சுற்றிக்காண்பித்தார் நோயாளிகளின் பெயரைச் சொல்லி அறிமுகம் செய்தார் இப்ப எப்படி இருக்கீங்க என்று அன்பாக கேட்கும் போதே அவர்கள் கண்களில் கண்ணீர் பெருகுகிறது,முன்பிற்கு இப்போது பராவயில்லை என்பது புரிகிறது.

பெரும் பாலானவர்கள் படுத்தே இருந்தனர் ஆனாலும் முகத்தில் ஒரு தெளிச்சி இருந்தது நம்மையும் மதித்து பார்த்துக் கொள்ளவும் வேளவேளைக்கு உணவு கொடுத்து பராமரிக்கவும் நல்ல பல மனிதர்கள் இருக்கின்றனர் என்பதால் ஏற்பட்ட தெளிவு அது.

நன்கொடையாளர்கள் பலரது தயவால் இந்த மையம் நல்லபடியாக செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது இட நெருக்கடி காரணமாக நிறைய நோயாளிகளை சேர்க்க முடியவில்லை எங்களது செயல்பாட்டைப் பார்த்துவிட்டு ஜனார்த்தனன்-சைலஜா தம்பதியினர் தங்களுக்கு சொந்தமான 28 சென்ட் இடத்தையும் இலவசமாக கொடுத்து அவர்கள் செலவிலேயே பத்திரப்பதிவும் செய்து கொடுத்துள்ளனர்.

அந்த இடத்தில் கட்டுமான வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன இன்னும் நிறைய நோயாளிகளை இங்கு வைத்து பார்க்க முடியும் பராமரிக்க முடியும் எங்களால் முடிந்த அளவு உடல் உழைப்பை வழங்க இருக்கிறோம் உங்களால் முடிந்த அளவு இந்த மையத்தின் வளர்ச்சிக்கு நன்கொடை வழங்குங்கள் என்று கேட்கும் இந்த மனிதநேய மருத்துவர்கள் பற்றியும் மையம் பற்றியும் தெரிந்து கொள்ள தொடர்புகொள்ள வேண்டிய எண்கள்:9597619378,9894042747.

இந்த மையம் பற்றி தகவல் தந்து நான் வரவேண்டும் பார்க்கவேண்டும் என்று விரும்பிய முகமறியா நண்பர் திரு.மணிகண்டனுக்கு நன்றி!

-எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (5)

 • m.senthil kumar - tamilnadu,இந்தியா

  அன்னை தெரேசாவைப்போல் உங்கள் பனி சிறக்கட்டும். இனம்,மொழி,ஜாதி,இதையெல்லாம் தாண்டி மனிதநேயம் அதில் மட்டுமே இறைவனை காணமுடியும். படிக்கும்போதே நெகிழ்ச்சியாக இருக்கிறது. உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள். ( கண்டிப்பாக நான் உதவி செய்கிறேன் )

 • PERIYASAMYMANIMARANVK MANIMARANVK - keeranur,இந்தியா

  சிலர் செய்கின்ற மோசமான செயலால் இப்படி ஆகின்றது. இத்தேர்க்கு கடவுள்தான் மனிதனை திருத்த வேண்டும்.

 • ram - sydney,ஆஸ்திரேலியா

  முதுமையில் வறுமை மிகவும் கொடியது. அதிலும் நோயோடு இருப்பது அதை விட கொடியது. முதியவர்கள் குழந்தையை போன்றவர்கள் . அவர்களுக்கு வைத்தியம் பார்ப்பதை விட நல்ல விஷயம் உலகத்தில் ஒன்றும் இல்லை. டாக்டர்க்கு படித்ததற்கு உண்டான பலனை நன்றாக செய்கிறார்கள். மிகவும் நன்றி. எனக்கும் அதில் பங்கேற்க ஆசை.

 • Rahim - Riyadh,சவுதி அரேபியா

  உயிர்காக்கும் இலவச மருத்துவ சேவை வழங்கும் தெய்வங்கள் அத்துணை பேருக்கும் நன்றிகள்....வாழ்க உங்கள் தொண்டு ....

 • karutthu - nainital,இந்தியா

  உங்கள் சேவைகள் மகத்தானவை தொண்டு சிறக்க வாழ்த்துக்கள்

 • Ravi Ma-subhu - Chennai,இந்தியா

  நீவீர் வாழ்க பல்லாண்டு : வாழ்க வளமுடன் : நான் இந்த மண்ணில் இருப்பதற்கு பெருமை படுகிறேன்..நன்றிகள்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement