Advertisement

பார்வையற்ற ரேகாவின் 12 மணி நேர சாதனை.


பார்வையற்ற ரேகாவின் 12 மணி நேர சாதனை.

சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திடக்கண்டேனே

செவ்வானம் கடலினிலே கலந்திடக்கண்டேனே
மொட்டு விரித்த மலரினிலே வண்டு மூழ்கிடக்கண்டேனே
மூங்கிலிலே காற்று வந்து மோதிடக்கண்டேனே- ...

பரபரப்பான சென்னை தி.நகரில் தீபாவளி பரபரப்பையும் தாண்டி அங்குள்ள சாரதா பெண்கள் பள்ளி வளாகத்திற்குள் இருந்து வந்த இந்த இனிய கானம் நம்மையறியாமலேயே உள்ளே இழுத்துச் சென்றது.

பார்வை இல்லாதவர்களுக்காக பாடுபட்ட ஹெலன் கெல்லர் முதல் லுாயி பிரெய்லி வரையிலானவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பார்வை இல்லாத ரேகா 12 மணி நேரம் தொடர்ந்து பாட்டுப்பாடி நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடந்து கொண்டிருப்பதாக ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த விளம்பர போர்டுகள் சொல்வதைப் பார்த்த பிறகுதான் பாடிக்கொண்டிருப்பவர் பார்வை இல்லாதவர் என்பது தெரியவந்தது.

நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து நெறிப்படுத்திக் கொண்டிருந்த விழிகள் அறக்கட்டளை நிறுவனர் தீனதயாளன் நடுவே மைக்கை பிடித்து, ஒரு பாட்டை பாடிய பாடகர் அது அவரது சொந்த பாடலாக இருந்தாலும், ஆயிரத்திற்கு மேல் மேடையேறி பாடிய பாடலாக இருந்தாலும், பாடும் போது குறிப்பை தன் பார்வையில் படுமாறு மேடையில் வைத்திருப்பதை பார்த்திருப்பீர்கள்.

ஆனால் இங்கே பாட்டுப்பாடும் ரேகாவிடம் எவ்வித குறிப்பும் இல்லை அப்படி இருந்தாலும் அவரால் படிக்கமுடியாது எந்த பாடலாக இருந்தாலும் அதன் ஆரம்ப இசையைக் கேட்ட மாத்திரத்தில் முழுப்பாடலை பாடிவிடுவார்.

அப்படித்தான் இங்கே கரோக்கி இசையின் உதவியுடன் காலை ஏழு மணியில் இருந்து பாடிக்கொண்டு இருக்கிறார் இரவு ஏழு மணி வரை பாடுவார் என்றார்.

அவர் அப்படிச் சொன்னபிறகு பாடகி ரேகாவை பார்வையாளர்கள் பார்த்தவிதம் பிரமிப்பாக இருந்தது.ஆம் எவ்வளவுதான் ஞாபகசக்தி கொண்டவராக இருந்தாலும் பாடலின் முதல் நான்கு வரிகள் வேண்டுமானால் பாடமுடியும் அதற்கு மேல் லலலா லலலா என்று சொல்லிவிடுவர் ஆனால் ரேகா எந்த பாடலுக்கும் திக்காமல் திணறாமல் பாடினார் அதுவும் இனிமையான குரலில்.

அவர் பாடிய பாடல்களில் பழைய பாடல்கள் இருந்தன புதிய பாடல்கள் இருந்தன பெண் குரலில் பாடிய பாடல்கள் மட்டுமின்றி ஆண் பாடகர்கள் பாடிய பாடல்களும் இருந்தன.

அவ்வப்போது டீ பிஸ்கட் சாப்பிட்ட நேரம் தவிர மற்ற நேரங்களில் அவரது பாடல்கள் இடைவிடாமல் தொடர்ந்தது.இந்த நிகழ்விற்கு அரிமா சங்க பெண்கள் பிரிவினர் உதவியாக இருந்து ரேகாவை ஊக்கப்படுத்தினர் அதே போல ரேகா படிக்கம் பார்வையற்ற பெண்கள் பலரும் சாரதா பள்ளி மாணவியரும் கலந்து கொண்டு கைதட்டி குரல்கொடுத்து உற்சாகப்படுத்தினர்.

அவர் தேர்ந்து எடுத்த பாடிய பாடல்களும் அற்புதமாக இருந்தது 12 மணி நேர சாதனை நிகழ்வை அருமையாக நிறைவு செய்து பாராட்டு மழையில் நனைந்த ரேகாவை நம் பங்கிற்கு பாராட்டி பேசிய போது அவரைப்பற்றி மேலும் சில தகவல்கள் கிடைத்தது.

நான்கு வயதிருக்கும் போது ஏற்பட்ட காய்ச்சல் கண் பார்வையை பறித்துக்கொண்டது பெற்றோர் உற்றோர் தந்த உற்சாகம் காரணமாக பள்ளிப்படிப்பை முடித்தேன் சிறு வயது முதலே இசையில் ஈடுபாடு அதிகம் எப்போதும் பாடிக்கொண்டு இருப்பேன் எனது இந்த இசைப்பற்றை பார்த்துவிட்டு என்னை இசைக் கல்லுாரியில் சேர்த்துவிட்டனர்.

இப்போது இசையில் இளங்கலை முடித்துவிட்டேன் அதற்கான ஆசிரியர் பயிற்சியும் முடித்துவிட்டேன் அரசாங்க வேலைக்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறேன் நான் எப்போதும் பாடிக்கொண்டு இருப்பதை பார்த்த விழிகள் தீனதயாளன் சார்தான் இப்படி ஒரு மேடை அமைத்துக் கொடுத்து என்னை வெளி உலகிற்கு அறிமுகம் செய்துள்ளார் ஒரு வாரம் ரிகர்சல் எடுத்துக்கொண்டேன் மற்றபடி பெரும்பாலான பாடலின் ஆரம்ப இசையைக் கேட்டால் போதும் மனதிற்குள் முழுப்பாடலும் வந்துவிழும் நிறைய பேர் எனக்காக சிரமப்பட்டு இருக்கிறார்கள் அவர்களுக்கு என் நன்றி.

எனக்கு ஒரே ஒரு கனவு உண்டு இளையராஜா சாரைப்பார்த்து அவர் முன் பாடிக்காட்ட வேண்டும் முடிந்தால் அவரது இசையில் பாடவேண்டும் என்பதுதான் அது...என்ற ரேகாவின் கனவு மெய்ப்படவேண்டும்.

அவருடன் பேசுவதற்கான எண்:9789396615 அப்படியே இவரை இந்த அளவிற்கு கொண்டு வந்த விழிகள் தீனதயாளனையும் முடிந்தால் பாராட்டிவிடுங்கள் எண்:9080462404.

-எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (5)

 • Devathasan T - Tirunelveli,இந்தியா

  ரேகா உங்கள் பாடல் கலை மென்மேலும் வளர மனதார வாழ்த்துக்கள்... ஐயா தீனதயாளன் அவர்களுக்கு நன்றி

 • Ray - Chennai,இந்தியா

  அரசு வேலையா? அதெல்லாம் நடக்கிற காரியமா? க்ரௌட் பண்டிங் செய்வோமா?

 • pollachipodiyan - pollachi,COIMBATORE.,இந்தியா

  ராஜா சார், இவருக்கு ஒரு சான்ஸ் கொடுத்து பாருங்களேன். நம்மூர்காரங்க எல்லோரும் "சொப்ன சுந்தரி" பாடும் நாட்டினருக்காக சொம்புகளாக இருக்கிறார்களே தவிர , நமது குரல்களுக்கு வாய்ப்பு தருவது இல்லை. சிந்திக்கவும், உதவி செய்யவும், ப்ளீஸ். ரகுமான் வீட்டில் வேறு காற்று வீசுகிறது.

 • ரத்தினம் - Muscat,ஓமன்

  பாராட்டுக்கள்

 • MaRan - chennai,இந்தியா

  தீணா சார் உங்களுக்கு நன்றி சார்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement