Advertisement

விழாக்கோலம்

பொங்கிப் பெருக்கெடுத்த காவிரியின் கரையோரம் மற்றொரு நதிப்பெருக்கே போல் திரண்டிருந்தது ஜனக்கூட்டம். கோயில் அத்தியாபகர்கள் ஒருபுறம் திருவாய்மொழி சொல்லிக் கொண்டிருந்தார்கள். மறுபுறம் திருக்கோயில் மாலை மரியாதைகளுடனும் தீர்த்தப் பிரசாதங்களுடனும் அர்ச்சகர்கள் காத்திருந்தார்கள். எப்போது வருவார், எப்போது வருவார் என்று ஆண்களும் பெண்களும் கண்ணெட்டிய துாரங்களில் பார்த்துப் பார்த்துத் தவித்துக் கொண்டிருந்தார்கள். மங்கல வாத்திய விற்பன்னர்கள் என்றுமில்லா உற்சாகத்துடன் ஏகாந்தமாக வாசித்துக் கொண்டிருக்க, சூரியன் உதித்து மேலெழும்ப ஆரம்பித்த நேரம் காவிரியில் ஓடங்கள் வரிசையாக அணி வகுத்து வருவது தெரிந்தது.

'அதோ வந்துவிட்டார்! அங்கே பாருங்கள்!' யாரோ கூக்குரலிட்டார்கள். மொத்தக் கூட்டமும் பரவசத்தின் எல்லையைத் தொட்டுத் திளைத்துக் கொண்டிருந்தது. வாத்தியங்களின் இசை வேகமெடுத்தது. வாழ்த்தொலிகள் விண்ணைத் தொட்டன. இழந்த தன் பொலிவை அரங்கநகர் மீண்டும் பெற்று விட்டதன் அத்தாட்சியாக அந்தக் கொண்டாட்டக் கோலாகலங்கள் காற்றில் ஏறி விண்ணை நிறைத்தன.ஓடங்கள் கரையை வந்தடையவும், காத்திருந்த அத்தனை பேரும் இரு கரை கட்டினாற்போல் ஒதுங்கி நின்று விழுந்து சேவித்தார்கள். அர்ச்சகர்களும் பிரபந்த கோஷ்டியாரும் முன்னால் வந்து மங்கல வார்த்தைகள் சொன்னார்கள்.ராமானுஜர் திருவரங்கத்து மண்ணில் மீண்டும் காலெடுத்து வைத்தார். முதலியாண்டான் இறங்கினார்.
வில்லிதாசர் இறங்கினார். திருக்குருகைப் பிரான் பிள்ளான் இறங்கினார். கிடாம்பி ஆச்சான், நடாதுாராழ்வான், வடுக நம்பி, தெற்காழ்வான், உக்கலாழ்வான் என்று வரிசையாக உடையவரின் சீடர்கள் ஒவ்வொருவராக இறங்கினார்கள். அவர்களுக்குப் பின்னால் கோஷ்டியில் புதிதாக இணைந்த அத்தனை பேரும் வந்திறங்கினார்கள். நுாறு, இருநுாறு, முன்னுாறு, ஐந்நுாறு என்று எண்ண எண்ணக் கூட்டம் பெருகிக் கொண்டே போனது.'வாரீர் எம்பெருமானாரே! எம்மை வாழ வைக்க மீண்டும் வந்துதித்து விட்டீரோ!' என்று நெகிழ்ந்து தாள் பணிந்த அரங்கமாநகர் அன்பர்களைக் கனிவோடு நோக்கினார் ராமானுஜர். நுாறு வயதின் முதுமையைப் புறந்தள்ளிய ஆகிருதி அது. சரியாத தோள்களும் குனியாத முதுகும் தாழாத சுடர் விழிகளும் நீங்காத முறுவ
லும் அவர் உடன்பிறந்தவை. காவியாடை காற்றில் அலைய, திரிதண்டம் ஏந்தி நடக்க ஆரம்பித்தால் அந்த கம்பீரத்தின் பேரெழிலைக் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருக்கும் திருவரங்கம். கூப்பிய கரங்கள் இறங்க வெகுநேரமாகும்.பதிமூன்று ஆண்டுகள் ஓடியே விட்டன. உடையவர் இல்லாத அரங்க நகரில் திருக்கோயிலுக்குச் செல்லவே ஆயிரத்தெட்டு கெடுபிடிகள் இருந்தன. 'நீ ராமானுஜரின் ஆளா?' என்று காவலர்கள் நிறுத்தி விசாரிக்கும் வழக்கம் ஏற்பட்டிருந்தது. இல்லை என்று பொய் சொல்லிவிட்டு யாரும் உள்ளே போகிற வழக்கம் கிடையாது.

ஆமாம் என்று சொன்னால் அப்படியே திருப்பி அனுப்பி விடும் சோழர் காவல் படை.இப்படித்தான் ஒருநாள் கூரத்தாழ்வான் கோயிலுக்குப் போக முயன்றபோது காவலர்கள் தடுத்தார்கள். 'நீர் ராமானுஜரின் சீடர்தானே?''ஆம். அதிலென்ன சந்தேகம்?''உடையவர் சம்பந்தமுடைய யாருக்கும் கோயிலுக்குள் நுழைய அனுமதி இல்லை. ஆனால் நீர் குருடர். தவிர தள்ளாடும் கிழப்பருவம் வேறு. ஒழிகிறது. சீக்கிரம் உள்ளே போய்விட்டு வாருங்கள்!' என்றான் ஒரு காவலன். வெகுண்டு விட்டார் கூரேசர். 'அடேய், உடையவர் சம்பந்தம் இருந்தால் எனக்கு அரங்கன் சன்னிதிக்குச் செல்ல அனுமதி இல்லை என்றால் எனக்கு அரங்கன் சம்பந்தமே வேண்டாம், ஒழியுங்கள்!' என்று கத்திக் கூப்பாடு போட்டுவிட்டுத் திரும்பிப் போய் விட்டார்.அன்று திருவரங்கத்தை விட்டுக் குடும்பத்தோடு வெளியேறியவர்தான். அன்றுவரை திரும்பி வரவில்லை.'எம்பெருமானாரே, இன்று இந்நகரம் தன் பழைய பொலிவை மீட்டுக் கொண்டது. குலோத்துங்கன் மறைந்து விட்டான். அவன் மகன் நல்லவனாக இருப்பான் போலிருக்கிறது. உங்களைச் சந்திக்க விரும்பித் தகவல் அனுப்பியிருக்கிறான். இனி நமக்குச் சிக்கலேதும் இருக்காது. வாருங்கள்!'கோயில் மரியாதைகளை அளித்து, தீர்த்தப் பிரசாதம் வழங்கி உடையவரையும் அவரது சீடர்களையும் அரங்கநகர் மக்கள் ஊர்வலமாக அழைத்துச் சென்றார்கள்.'எம்பெருமானே! என் அரங்கா! இதோ வந்துவிட்டேன். நீ அளித்த பணிகளை முடிந்த அளவுக்கு நிறைவேற்றிவிட்டு இளைப்பாற உன் மடி தேடி வந்திருக்கிறேன்.' என்று நெஞ்சு விம்ம சன்னிதியை நோக்கி விரைந்தார் ராமானுஜர்.

ஆதி யுகத்தில் இஷ்வாகு குலத்தோரால் ஆராதிக்கப்பட்டு வந்த ரங்கநாதரை ராமபிரான் விபீஷணனுக்கு அளித்தான். ராம பட்டாபிஷேகம் முடிந்தபின் இலங்கை திரும்பும் வழியில் திருவரங்கத்தில் விபீஷணன் அப்பெருமானை விட்டுப் போனான். அன்றுமுதல் தென் திசை நோக்கிக் கிடந்த கோலத்தில் அங்கு எழுந்தருளியிருக்கும் எம்பெருமான் அன்று தம் தவப்புதல்வரை நெஞ்சு நிறை வாஞ்சையுடன் வரவேற்றான்.சன்னிதியில் அர்ச்சனைகள்
வெகு விமரிசையாக நடந்தேறின. பிரபந்த பாராயணம் விண்ணதிர முழங்கியது. எங்கெங்கும் மகிழ்ச்சிப் பெருக்கு. எல்லோர் மனத்திலும் நிம்மதியின் ஊற்று. ஒரு தாயற்ற சிசுவைப் போலத் தாங்கள் இத்தனை ஆண்டுக்காலம் இருந்திருக்கிறோம் என்பதே அவர்களுக்கு
ராமானுஜர் திரும்பி வந்தபோதுதான் தெளிவாகப் புரிந்தது. இனி கவலையில்லை. அரங்கனையும் ஆலய நிர்வாகத்தையும் திருவரங்கத்து வைணவர்களையும் ஒருசேர கவனித்துக் கொள்ள உரிமைப்பட்டவர் வந்துவிட்டார்.அரங்கன் சன்னிதியில் சேவை முடிந்தபின் ராமானுஜர் ரங்க நாச்சியார் சன்னிதிக்குப் போனார். ஒவ்வொரு சன்னிதியாக வரிசை வைத்துச் சென்று கண் குளிர தரிசித்து மனம் குவியப் பிரார்த்தனை செய்தார்.
'சுவாமி, திருமடத்துக்குச் செல்லலாமா?' அர்ச்சகர் கேட்டதும் ஒரு கணம் யோசித்தார். 'சரி, நீங்கள் எல்லோரும் மடத்துக்குப் போங்கள். நான் வந்து விடுகிறேன்' என்று சொல்லிவிட்டு, விறுவிறுவென பெரிய நம்பியின் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.மாபெரும் இழப்பின் வடு இன்னும் அங்கு மறைந்திருக்கவில்லை. அழுது இளைத்திருந்த அத்துழாயும், அழக்கூடத் தெம்பற்று இருந்த அவளது சகோதரன் புண்டரீகாட்சனும் உடையவரைக் கைகூப்பி வரவேற்றார்கள். அவர்களுக்கு ஆறுதலாகச் சற்று நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு கிளம்பியபோது, வீதியின் இரு புறங்களில் இருந்தும் சீடர்கள் சிலர் ஓடி வந்தார்கள்.'சுவாமி, விக்கிரம சோழன் தங்களைக் காண வரலாமா என்று கேட்டனுப்பியிருக்கிறான்!' என்றது ஒரு தரப்பு.அதே நேரம் எதிர்ப்புறமிருந்து வந்த வேறொரு சீடன், 'சுவாமி, கூரேசர் வந்து கொண்டிருக்கிறார்!'ஒரு கணம்தான். உடையவர் ஒரு சொல்லும் பேசவில்லை. விறுவிறுவென்று கூரேசரை எதிர்கொண்டழைக்கக் கிளம்பி விட்டார்.'வைணவப் பெருஞ்செல்வமே! என் கூரேசரே! உம்மைக் காணாமல் இத்தனைக் காலமாக இந்தக்
கிழவன் எப்படித் துடித்துப் போயிருக்கிறேன் தெரியுமா? வந்து விட்டீரா! இனி வைணவ தரிசனம் வானளாவ வளர்வது உறுதி.' சொற்களற்று நெஞ்சில் முட்டி மோதிய உணர்வுப் பெருக்குடன் வீதியில் விரைந்தார் ராமானுஜர்.

(நாளை தொடரும்...)

writerpara@gmail.com

- பா.ராகவன் -

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • மலரின் மகள்கள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

    மன்னனா? தொண்டனா? மன்னனுக்கில்லை உயர்வு தொண்டனே உயர்ந்தவன் என்று உணர்த்திய ராமானுஜ காதை. பச்சை மாமலை போல் மேனி, பவள வாய் கமல செங்கண் என்ற பாடலை நீண்ட நேர தேடுதலுக்கு பின்பு கண்டு பிடித்து கேட்டு ரசித்தேன்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement