Advertisement

தியாகச் சுடர்

'சுவாமி, தாங்களா! இந்த நேரத்திலா நீங்கள் இங்கு வர வேண்டும்? வேண்டாம் சுவாமி, திரும்பிச் சென்று விடுங்கள்!' பதறினார் கூரேசர்.


பெரிய நம்பிக்குப் புரிந்தது. வெளியே காத்திருக்கும் துாதுவர்கள் வெகுநேரம் பொறுத்திருக்க மாட்டார்கள். சில நிமிடங்களுக்குள் என்னவாவது நடந்தாக வேண்டும். அந்தச் சில நிமிடங்களில் ராமானுஜர் திரும்பி வந்துவிட்டாலும் பிரச்னை. நிதானமாக யோசிக்க இது நேரமில்லை. அவர் ஒரு முடிவுடன் சொன்னார், 'கூரேசரே, மன்னன் சபைக்கு நீங்கள் தனியே செல்ல வேண்டாம். உடன் நான் வருகிறேன். எனக்குத் துணையாக அத்துழாய் வரட்டும். நாம் கிளம்பிப் போனதும் உடையவரை பத்திரமாக இங்கிருந்து அழைத்துக் கொண்டு வெளியேற வேண்டியது சீடர்களின் பொறுப்பு.''ஐயோ நீங்களா! வேண்டாம் சுவாமி.''பேச நேரமில்லை. உம்மைத் தனியே அனுப்ப என்னால் முடியாது. சீக்கிரம் ஆக வேண்டியதைப் பாருங்கள்' என்றார் பெரிய நம்பி.
ஒரு நுாறு வயதுக் கிழவரின் தீவிரமும் தெளிவும் அங்கிருந்த அத்தனை பேரையும் வாயடைக்கச் செய்துவிட்டது. ராமானுஜர் காப்பாற்றப்பட வேண்டும் என்பதைத் தவிர அவர்கள் யாருக்கும் வேறு எந்த நோக்கமும் இல்லை. அதேசமயம் மன்னன் சபையில் கூரேசருக்கு உதவியாக யாராவது இருந்தாக வேண்டும் என்பதும் நியாயம்தான். அப்பொறுப்பு என்னைச் சேரும் என்றார் பெரிய நம்பி.
இதற்குமேல் ஒன்றுமில்லை. இறைவன் விட்ட வழி.சட்டென்று கூரேசர், ராமானுஜரின் காவி உடையை எடுத்து அணிந்து கொண்டார். திரிதண்டத்தை எடுத்துக் கொண்டார். நெற்றியில் சாற்றிய திருமண்ணும் என்றும் சுடரும் ஞானப் பொலிவுமாக அவர் வெளிப்பட்டபோது அத்தனை பேரும் தம்மை மறந்து கரம் குவித்தார்கள்.'இதோ பாருங்கள், உடையவர் குளித்துவிட்டு வந்ததும் சுருக்கமாக விஷயத்தைச் சொல்லி உடனே கிளம்பிவிடச் சொல்லுங்கள். சோழ
நாட்டை விட்டே அவர் வெளியேறிவிட வேண்டும் என்று நானும் பெரிய நம்பியும் சொன்னோம் என்று சொல்லுங்கள்!'நடாதுார் ஆழ்வான் முன்னால் செல்ல, கூரேசரும் பெரிய நம்பியும் மற்ற சீடர்கள் புடைசூழ மடத்தின் முன் வாசலுக்கு வந்தார்கள்.காத்திருந்த மன்னனின் துாதுவர்
கள், கூரேசரை ஏற இறங்கப் பார்த்தார்கள். 'நீர்தான் ராமானுஜரா?''ஆம். என்ன விஷயம்?'இதோ மன்னரின் ஓலை. எங்கே உமது பதில்?' என்று நீட்ட, கூரேசர் அதை வாங்கிப் படித்துப் பார்த்தார். புன்னகை செய்தார்.'நல்லது துாதுவனே. உமது மன்னனை நான் நேரில் சந்தித்துப் பேசிக் கொள்கிறேன். கிளம்புவோமா?'கிளம்பி விட்டார்கள். சீடர்களுக்கு ஒருபுறம் நிம்மதி. மறுபுறம் பெரும் கவலை. துாதுவர்கள் ராமானுஜரை நேரில் சந்தித்ததில்லை என்பது நிச்சயமாகி விட்டது. மன்னனின் சபையில் அது ராமானுஜரல்ல; கூரேசர் என்று வெளிப்படும் வரை பிரச்னை இல்லை. ஆனால் அப்படித் தெரியவருகிற நேரம் மன்னனின் கோபம் கூரேசரை என்ன செய்யுமோ என்றும் கவலையாக இருந்தது.'விடுங்கள். பெரிய நம்பிதான் உடன் செல்கிறாரே. அவர் பார்த்துக்
கொள்வார்.' என்று ஒருவருக்கொருவர் சொல்லிக் கொண்டார்கள்.துாதுவர்களுடன் கூரேசரும் பெரிய நம்பியும் அத்துழாயுடன் கிளம்பிச் சென்ற சில நிமிடங்களில் உடையவர் குளித்துவிட்டு மடத்துக்குத் திரும்பி வந்தார்.'சுவாமி, என்னென்னவோ நடந்துவிட்டது. தாங்கள் உடனே திருவரங்கத்தை விட்டு வெளியேற வேண்டிய நேரம் இது.'திகைத்து விட்டார் ராமானுஜர்.'ஏன், என்ன ஆயிற்று?'விவரம் சொல்லப்பட்டது. சீடர்களின் கண்ணீரும் பதற்றமும் அவருக்கு மேலும் கவலையளித்தன.'என்ன அபசாரம் இது? எனக்காக கூரேசர் ஏன் அங்கு செல்ல வேண்டும்? நானே போயிருப்பேனே? மன்னனை நானே நேரில் சந்தித்துப் பேசியிருப்பேனே?''இல்லை சுவாமி. குலோத்துங்கன் ஒரு முடிவோடுதான் தங்களுக்கு ஓலை அனுப்பியிருந்தான். சிவனுக்கு மிஞ்சி வேறு தெய்வமில்லை என்று எழுதிக் கையெழுத்துப் போடச் சொல்லிக் கேட்டிருக்கிறான். தாங்கள் எப்படி அதைச் செய்வீர்கள்?''கூரேசரும் பெரிய நம்பியும்கூடத்தான் செய்ய மாட்டார்கள்.'அவர்கள் ஒரு கணம் தயங்கினார்கள். பின், 'தெரியும் சுவாமி. ஆனால் தங்களைவிட நீங்கள் பத்திரமாகவும் உயிருடனும் இருக்க வேண்டியது அவசியம் என்று கூரேசர் சொல்லச் சொன்னார். பெரிய நம்பியும் அதையேதான் சொன்னார்.'
ராமானுஜர் அதிர்ந்து போய் நின்றார். கரகரவென்று அவர் கண்களில் இருந்து நீர் சொரிந்தது.'நான் ஒருவன் உயிர்த்திருக்க, பரம பாகவதர்களான இரு ஞானிகள் தம் வாழ்வைப் பணயம் வைப்பதா? இது அடுக்கவே அடுக்காது.''இல்லை சுவாமி. வைணவ தருமம் தழைக்கத் தாங்கள் இருந்தாக வேண்டும். இத்தனைக் காலம் எத்தனையோ தடைகளைத் தாண்டி நமது தருமத்தை நாம் பரப்ப முடிந்திருக்கிறது என்றால், அதற்கு ஒரே காரணம் தங்கள் இருப்பும் செயல்பாடுகளும்தான். தங்களுக்கு ஏதேனும் ஒன்று ஆகிவிட்டால், மற்றவர்களை அடியோடு சைவத்துக்கு மாற்றிவிட மன்னனுக்குக் கணப் பொழுது போதும்.''என் உயிர் அத்தனை மேலானது இல்லையப்பா. என்னைக் காக்கத் தன்னையே கொடுக்கலாம் என்று நினைத்த கூரேசரே
மனிதரில் புனிதர்.''அவர் விருப்பத்தை நிறைவேற்றுங்கள் சுவாமி. அவரை எம்பெருமான் காப்பான்.'வேறு வழியின்றி ராமானுஜர்
தமது காவி உடையின்மீது வெள்ளை வேட்டி போர்த்திக் கொண்டு பாரம் சுமந்த இதயத்தோடு கிளம்பினார். முதலியாண்டான் உள்ளிட்ட சீடர்
கள் உடன் புறப்பட்டார்கள். ஒரு சிலரை ராமானுஜர் மடத்திலேயே இருக்கச் சொன்னார். 'கூரேசருக்கு ஒன்றும் நேரக்கூடாது. நீங்கள்
இங்கே இருங்கள். கூரேசர் திரும்பி வந்ததும் எனக்குத் தகவல் வரவேண்டும்.''ஆகட்டும் சுவாமி, நீங்கள் சீக்கிரம் புறப்படுங்கள்.'
அன்று அது நடந்தது. அரங்கனை விட்டு, அரங்கமாநகரை விட்டு, தன் பிரியத்துக்குரிய கூரேசரை விட்டு, ஆசாரியர் பெரிய நம்பியை
விட்டு, அனைத்தையும் விட்டு ராமானுஜர் வெளியேறினார். காவிரியைக் கடந்து வடதிசை நோக்கி ஓட்டமும் நடையுமாக விரையத் தொடங்கியது அத்திருக்கூட்டம்.'அழிவுக்காலம் வந்தால் மன்னர்களுக்கு இப்படித்தான் விபரீத எண்ணம் ஏற்படும். சோழன் நிச்
சயம் இதற்கு அனுபவிப்பான்!' சபித்துக் கொண்டே வந்தார்கள் சீடர்கள்.'வேண்டாம் பிள்ளைகளே. அனைவரும் கூரேசரின் நலனுக்
காகப் பிரார்த்தனை செய்யுங்கள். பெரிய நம்பியும் கூரேசரும் வைணவ தரிசனம் செழிக்க எம்பெருமான் அளித்த பெருங்கொடை. அவர்களுக்கு ஒன்றும் ஆகக்கூடாது என்று வேண்டுங்கள்.' கண்ணீருடன் கேட்டுக் கொண்டார் ராமானுஜர்.ஆனால் விதி வேறாக இருந்தது. குலோத்துங்கன் சபைக்கு கூரேசரும் பெரிய நம்பியும் வந்து
நின்றபோது நாலுாரான் குதித்தெழுந்து அலறினார்.'மன்னா, மோசம் போனோம். இவர் உடையவரல்லர்!'

(நாளை தொடரும்...)

writerpara@gmail.com
- பா.ராகவன் -

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement