புவனேஸ்வர்: ஐ.எஸ்.எல்., கால்பந்தில் சென்னை அணி முதல் போட்டியில் 0-2 என ஒடிசா அணியிடம் வீழ்ந்தது.
இந்தியாவில் ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடரின் 10 வது சீசன் நடக்கிறது. ஒடிசாவில் நடந்த லீக் போட்டியில் சென்னை, ஒடிசா அணிகள் மோதின.
போட்டியின் 18 வது நிமிடத்தில் மோசமான வானிலை இடி, மின்னல், மழை என அடுத்தடுத்த ஏற்பட, காரணமாக போட்டி நிறுத்தப்பட்டது. மீண்டும் போட்டி துவங்கியதும், 45 வது நிமிடம் ஒடிசா வீரர் ஜெர்ரி, ரனவாடே கொடுத்த பந்தை, அப்படியே இடது காலால் உதைத்து கோலாக மாற்றினார்.
இரண்டாவது பாதியில் 56 வது நிமிடம் சென்னை வீரர் சர்கோவிச், தலையால் முட்டி அடித்த பந்து, கோல் போஸ்டுக்கு மேலாக சென்றது. 63வது நிமிடத்தில் ஒடிசா அணியின் டீகோ மவுரிசியோ ஒரு கோல் அடித்து கைகொடுத்தார். சென்னை தரப்பில் ஒரு கோல் கூட அடிக்கப்படவில்லை.
முடிவில் சென்னை அணி 0-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.
இனவெறி சர்ச்சை
கேரளா, பெங்களூரு அணிகள் மோதிய போட்டி கொச்சியில் நடந்தது. போட்டியின் 82 வது நிமிடத்தில் பெங்களூரு வீரர் ரியான் வில்லியம்ஸ் (ஆஸி.,), கொச்சி அணியின் அய்பன்பா டோக்லிங் (மேகாலயா) இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது. அப்போது ரியான், தனது மூக்கை பிடித்துக் கொண்டே, அய்பன்பாவை பார்த்து 'அருகில் வராதே... விலகிச் செல்' என 'சைகை' செய்தார்.
இவரது செயல் இனவெறியை துாண்டும் வகையில் அமைந்ததாக கேரள அணி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில், 'விளையாட்டில் இனவெறி, மோசமான நடத்தைகளுக்கு இடமில்லை. இதுபோன்ற அவமரியாதை செயல்களுக்கு கால்பந்தில் இடமில்லை. இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என தெரிவித்துள்ளது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!