கொச்சி: ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடரின் 10வது சீசன் இன்று துவங்குகிறது. முதல் மோதலில் கேரளா, பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்தியாவில் ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடர் நடக்கிறது. இதன் 10 வது சீசன் இன்று கொச்சியில் துவங்குகிறது. இந்தியாவின் சென்னை, பெங்களூரு, கோல்கட்டா, மும்பை உட்பட 11 நகரங்களில் நடக்கும் இத்தொடரில் 12 அணிகள் மோதுகின்றன. கொச்சியில் இன்று நடக்கும் முதல் போட்டியில் கேரளா-பெங்களூரு அணிகள் மோதவுள்ளன.
கேரள அணி இதுவரை மூன்று முறை பைனலுக்கு முன்னேறியது. ஒருமுறை கூட கோப்பை வெல்லவில்லை. தற்போது சொந்தமண்ணில் தொடரை வெற்றியுடன் துவக்க காத்திருக்கிறது. பிரிதம் கோடல், அட்ரியன் லுனா அணிக்கு பலம் சேர்க்கலாம். பெங்களூருவை பொறுத்தவரை கேப்டன் சுனில் செத்ரி, ஆசிய விளையாட்டில் பங்கேற்பது சற்று பலவீனம். எனினும் 'பிளே ஆப்' சுற்றுக்கு முன்னேறுவது உறுதி.
சென்னை நம்பிக்கை
சென்னை அணி கடைசியாக 2017-18ல் கோப்பை வென்ற பின் 2019-20ல் பைனலுக்கு முன்னேறியது. அடுத்த சீசன்களில் பெரியளவு சாதிக்கவில்லை. செப். 23ல் தனது முதல் போட்டியில் ஒடிசா அணியை சந்திக்கவுள்ளது. நட்சத்திர வீரர் கிரிவெல்லாரோ, மீண்டும் அணிக்கு திரும்பியது நம்பிக்கை தருகிறது.
புதிய 'மோகன்'
ஐ.எஸ்.எல்., தொடரில் வெற்றிகரமான அணி கோல்கட்டா. இதுவரை 4 முறை சாம்பியன் ஆனது. சமீபத்திய துாரந்த் கோப்பை தொடரிலும் கோப்பை வென்ற இந்த அணி, இம்முறை மோகன் பகான் சூப்பர் ஜெயன்ட் என புதிய பெயரில் களமிறங்குகிறது. முன்னணி வீரர் ஆஷிக் குருனியன் இல்லாதது அணியின் திட்டமிடலை பெரிதும் பாதிக்கலாம். அனிருத் தபா, திமி பெட்ராடஸ் கைகொடுக்கலாம்.
கடந்த சீசனில் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பெற்ற மும்பை, ஐதராபாத், ஒடிஷா, கோவா, ஈஸ்ட் பெங்கால், ஜாம்ஷெட்பூர், வடகிழக்கு யுனைடெட் அணிகளுடன், பஞ்சாப் அணியும் கோப்பை போட்டியில் களமிறங்குகின்றன.
இதுவரை சாம்பியன்
ஐ.எஸ்.எல்., தொடரில் இதுவரை 9 சீசன் முடிந்தன. கோல்கட்டா மோகன்பகான் 4 (2014, 2016, 2020, 2022-23), சென்னை 2 முறை (2015, 2017-18) கோப்பை வென்றன. பெங்களூரு (2018-19), மும்பை (2020-21), ஐதராபாத் (2021-22) அணிகள் தலா ஒரு கோப்பை வென்றன.
சென்னையில் எப்போது
சென்னை அணி தனது சொந்தமண்ணில், முதல் போட்டியில் (அக். 7) மோகன் பகான் அணியை சந்திக்க உள்ளது. டிசம்பர் வரை சொந்தமண்ணில் பங்கேற்கும் 5 போட்டி விபரம்:
தேதி எதிரணி
அக். 7 மோகன் பகான்
அக். 29 பஞ்சாப்
நவ. 5 கோவா
நவ. 25 ஈஸ்ட் பெங்கால்
டிச. 13 பெங்களூரு
அசத்துவாரா சிவசக்தி
தமிழகத்தின் காரைக்குடியை சேர்ந்த சிவசக்தி நாராயணன். பெங்களூரு அணிக்காக விளையாடுகிறார். கடந்த சீசனில் சக வீரர்கள் சுனில் செத்ரி, கிருஷ்ணாவை முந்திய சிவசக்தி, 6 கோல் அடித்தார். சிறந்த வளர்ந்து வரும் வீரர் விருது வென்ற இவர், இம்முறை இரட்டை இலக்கை எட்டலாம்.
தவிர சாங்டே (மும்பை), அன்வர் அலி (மோகன் பகான்), மகேஷ் சிங் (ஈஸ்ட் பெங்கால்), பிரண்டன் பெர்ணான்டஸ் (கோவா) உள்ளிட்ட இந்திய வீரர்கள் மீதும் எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
'ஆசியா' சர்ச்சை
சீனாவில் ஆசிய விளையாட்டு நடக்கிறது. இதற்கான இந்திய கால்பந்து அணியில் இடம் பெற்ற 22 வீரர்கள், ஐ.எஸ்.எல்., தொடரில் பெங்களூரு (6 வீரர்கள்), மும்பை (3), கோவா (3), மோகன் பகான் (3), ஒடிசா (2), கேரளா (2), சென்னை (1), பஞ்சாப் (1), ஐதராபாத் (1) அணிக்காக விளையாடுகின்றனர்.
ஆனால், தேசிய அணிக்காக விளையாட, இவர்களை விடுவிக்க கிளப் அணிகள் மறுத்தது சர்ச்சை ஏற்படுத்தியது. தற்போது அனுபவமற்ற மூன்றாம் நிலை அணி தான் இந்தியாவுக்காக சீனாவில் விளையாடுகிறது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!