ஹாங்சு: ஆசிய விளையாட்டு கால்பந்தில் இந்திய அணி, 1-5 என்ற கோல் கணக்கில் சீனாவிடம் தோல்வியடைந்தது.
ஆசிய விளையாட்டு 19 வது சீசன் சீனாவின் ஹாங்சுவில் செப். 23ல் துவங்குகிறது. கால்பந்து, கிரிக்கெட், வாலிபால், படகு போட்டிகள் முன்னதாக துவங்கின. ஆண்கள் கால்பந்தில் 24 அணிகள் பங்கேற்கின்றன. இந்திய அணி, 'ஏ' பிரிவில் வலிமையான சீனா, வங்கதேசம், மியான்மருடன் இடம் பெற்றுள்ளது.
ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் பட்டியலில் 'டாப்-2' இடம் பெறும் அணிகள் 'ரவுண்டு-16' சுற்றுக்கு முன்னேறும். நேற்று தனது முதல் போட்டியில் இந்திய அணி, சீனாவை சந்தித்தது. கேப்டனாக சுனில் செத்ரி களமிறங்கினார். போட்டியின் 17வது நிமிடத்தில் டி காவோ சீன அணிக்கு முதல் கோல் அடித்தார்.
முதல் கோல்
முதல் பாதியின் 'ஸ்டாப்பேஜ்' நேரத்தில் (45+1வது) இந்திய வீரர் ராகுல் கன்னோலி பிரவீன் ஒரு கோல் அடித்து கைகொடுக்க ஸ்கோர் 1-1 என சமன் ஆனது. ஆசிய விளையாட்டில் 2010ல் சிங்கப்பூர் அணிக்கு எதிராக இந்தியாவின் மணிஷ் கோல் அடித்தார். தற்போது 13 ஆண்டுக்குப் பின் ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்காக கோல் அடித்துள்ளார் ராகுல்.
இரண்டாவது பாதியில் சீனாவின் தய் வெய்ஜுன் தன் பங்கிற்கு ஒரு கோல் அடித்தார். இந்தியா 1-2 என பின் தங்கியது. போட்டியின் 72, 75வது நிமிடங்களில் சீன வீரர் குயாங்லாங், இரண்டு கோல் அடித்தார். இரண்டாவது பாதியின் கடைசி நேரத்தில் பங் காவோ ஒரு கோல் அடிக்க, இந்திய அணி 1-5 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.
தனது இரண்டாவது போட்டியில் இந்திய அணி, நாளை வங்கதேசத்தை சந்திக்கவுள்ளது.
பலவீனமான அணி
ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடர் நாளை துவங்குவதால், முன்னணி வீரர்களை விடுவிக்க, அந்தந்த கிளப் அணிகள் மறுத்தன. 'பிபா' அட்டவணையில் ஆசிய விளையாட்டு இல்லை என்று விளக்கம் அளித்தன. வேறு வழியில்லாத நிலையில் ஆசிய விளையாட்டுக்கு மூன்றாம் தர இந்திய அணி சென்றது. ஐ.எஸ்.எல்., அணிகளில் மாற்று வீரர்களாகக் கூட இடம் பெறாதவர்களுடன் கேப்டன் சுனில் செத்ரி மட்டும் நம்பிக்கையுடன் களமிறங்கினார்.
அவசரமாக சீனா சென்ற இந்திய அணியினர் எவ்வித பயிற்சியும் இன்றி, நேற்று போட்டியில் பங்கேற்றனர். 17 வயதுக்குட்பட்ட உலக கோப்பை தொடரில் பங்கேற்ற ராகுல் மட்டும் ஒரு கோல் அடித்தார். இனி அடுத்த போட்டிகளில் வங்கதேசம், மியான்மரை வென்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு செல்ல முடியும்.
வாலிபால்: இந்தியா வெற்றி
ஆண்களுக்கான வாலிபால் போட்டியில் 'சி' பிரிவில் இடம் பெற்ற இந்திய அணி, முதல் போட்டியில் நேற்று கம்போடியாவை சந்தித்தது. முதல் செட்டை 25-14 என வென்ற இந்தியா, அடுத்த செட்டையும் 25-13 என கைப்பற்றியது. மூன்றாவது செட்டில் முதலில் பின்தங்கிய இந்தியா, கடைசியில் 25-19 என வென்றது. முடிவில் 3-0 என்ற கணக்கில் இந்தியா வென்றது.
15 ரன்னுக்கு சுருண்ட மங்கோலியா
ஆசிய விளையாட்டு பெண்கள் கிரிக்கெட்டில் நடந்த 'ஏ' பிரிவு போட்டியில் இந்தோனேஷியா, மங்கோலியா மோதின. முதலில் களமிறங்கிய இந்தோனேஷியா, 20 ஓவரில் 187/4 ரன் எடுத்தது. 38 'வைடு' உட்பட, உதிரியாக மட்டும் 49 ரன் விட்டுக் கொடுத்தனர். பின் களமிறங்கிய மங்கோலியா அணியில் 4 பேர் மட்டும் ஒற்றை இலக்க ரன் எடுக்க, மற்றவர்கள் 'டக்' அவுட்டாகினர். 10 ஓவரில் 15 ரன்னுக்கு சுருண்டு, 172 ரன்னில் தோற்றது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!