புதுடில்லி: ''ஒரே போட்டியில் ஆறு விக்கெட் வீழ்த்துவேன் என ஒருபோதும் கனவு கூட கண்டதில்லை,'' என முகமது சிராஜ் தெரிவித்தார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடந்தது. இதன் பைனலில் அசத்திய இந்தியா, 8வது முறையாக சாம்பியன் ஆனது. இத்தொடருக்கு முன் இந்திய அணி தேடிய பல்வேறு கேள்விகளுக்கு நல்ல பதில் கிடைத்துள்ளது. ரோகித், கோஹ்லி, சுப்மன் கில் பேட்டிங்கில் நம்பிக்கை தந்தனர்.
பாகிஸ்தானுக்கு எதிராக சதம் விளாசிய ராகுல் வருகையில் 'மிடில் ஆர்டரில்' பலம் அடைந்தது. ஸ்ரேயாஸ் காயத்தால் அவதிப்பட்டாலும் இளம் வீரர் இஷான் கிஷானின் பொறுப்பான ஆட்டம் நிர்வாகத்தை கவர்ந்தது.
பந்துவீச்சில் பும்ரா, சிராஜ், பாண்ட்யா கூட்டணி இந்த ஆண்டு முதன் முறையாக இணைந்து களமிறங்கியது. எதிர்பார்ப்புக்கு ஏற்ப மிரட்டலாக செயல்பட்டது, உலக கோப்பை தொடருக்கு முன் நம்பிக்கை தந்துள்ளது. இலங்கை அணிக்கு எதிரான பைனலில், 'வேகத்தில்' மிரட்டிய முகமது சிராஜ், தனது இரண்டாவது ஓவரில் 4 விக்கெட் சாய்த்தார். மொத்தம் 21 ரன்னுக்கு 6 விக்கெட் வீழ்த்தி மிரட்டினார்.
இதுகுறித்து சிராஜ் 29, கூறியது:
வெஸ்ட் இண்டீஸ் தொடரில் கிரீசை விட்டு விலகிச் செல்லும் வகையில் 'அவுட் ஸ்விங்' வகை பந்துகளை அதிகமாக வீசி பயிற்சி எடுத்தேன். இது நன்றாக கைகொடுத்தது. ஆசிய கோப்பை தொடரிலும் இதேபோல செயல்பட்டேன்.
எனது மனதில் உள்ளபடி, என்னுடைய திட்டப்படி, எல்லாம் சரியாக நடந்தது. உண்மையில் என்னைப் பொறுத்தவரையில் இது பெரிய சாதனை தான். தவிர பைனலில் இப்படி செயல்பட்டது மகிழ்ச்சியாக உள்ளது. உலக கோப்பை தொடருக்கு முன், எனது பந்துவீச்சின் முன்னேற்றம் அதிக தன்னம்பிக்கை கொடுத்துள்ளது.
அதேநேரம் எனது பந்து வீச்சு ஒரு 'மேஜிக்' போல இருந்தது. இப்படி எல்லாம் நடக்கும் என ஒரு போதும் கனவு கூட கண்டதில்லை. பைனலின் துவக்கத்தில் பந்து வீசிய போது, நன்றாக 'ஸ்விங்' செய்ய முடிந்தது. இதனால் 'ஸ்டம்சை' தகர்க்க வேண்டிய தேவை இல்லை, சரியான இடத்தில் பந்தை 'பிட்ச்' செய்தால் போதும் என உணர்ந்து, அதற்கேற்ப பந்துவீசினேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!