Load Image
Advertisement

இந்திய அணியில் அஷ்வின் * ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில்...

புதுடில்லி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் சேர்க்கப்பட்டார். முதல் இரு போட்டிக்கான இந்திய அணி கேப்டனாக ராகுல் செயல்பட உள்ளார்.

இந்திய மண்ணில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் அக். 5 முதல் நவ. 19 வரை நடக்கவுள்ளது. இதற்குத் தயாராகும் வகையில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மூன்று போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்க உள்ளது. இரு அணிகள் மோதும் முதல் போட்டி மொகாலியில் நடக்கவுள்ளது.

இதற்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. உலக கோப்பை தொடர் துவங்க இன்னும் 15 நாள் மட்டும் உள்ள நிலையில் இத்தொடர் நடக்கவுள்ளது. இதனால் கேப்டன் ரோகித் சர்மா, 'சீனியர்' கோஹ்லி, துணைக் கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுக்கு முதல் இரு போட்டியில் இருந்து ஓய்வு தரப்பட்டது.

அஷ்வின் வருகை

துவக்க வீரர்களாக சுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட் சேர்க்கப்பட்டனர். 'மிடில் ஆர்டரில்' திலக் வர்மா, ஸ்ரேயாஸ், சூர்யகுமார் இடம் பெற, பின் வரிசையில் ஷர்துல் தாகூர், வாஷிங்டன் சுந்தர் இடம் பெற்றனர். அக்சர் படேல் காயத்தால் விலகியதால், 20 மாத இடைவெளிக்குப் பின் இந்திய ஒருநாள் அணியில் 'சீனியர்' சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் 37, சேர்க்கப்பட்டார்.

கடைசியாக 2022ல் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் பங்கேற்றார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சஞ்சு சாம்சன், சுழற்பந்து வீச்சாளர் சகால் சேர்க்கப்படவில்லை.

ராகுல் கேப்டன்

முதல் இரண்டு போட்டிக்கான அணிக்கு லோகேஷ் ராகுல் கேப்டனாக செயல்பட உள்ளார்.

அணி விபரம்:

லோகேஷ் ராகுல் (கேப்டன்), ஜடேஜா (துணைக் கேப்டன்), ருதுராஜ், சுப்மன் கில், ஸ்ரேயாஸ், சூர்யகுமார், திலக் வர்மா, இஷான் கிஷான், ஷர்துல் தாகூர், வாஷிங்டன் சுந்தர், அஷ்வின், பும்ரா, ஷமி, சிராஜ், பிரசித் கிருஷ்ணா.

ரோகித் வருகை

மூன்றாவது போட்டிக்கான அணியில் முதல் இரு போட்டியில் ஓய்வு தரப்பட்ட ரோகித் சர்மா, கோஹ்லி, ஹர்திக் பாண்ட்யா சேர்க்கப்பட்டனர்.

அணி விபரம்:

ரோகித் சர்மா (கேப்டன்), ஹர்திக் பாண்ட்யா (துணைக் கேப்டன்), சுப்மன் கில், கோஹ்லி, ஸ்ரேயாஸ், இஷான் கிஷான், ராகுல், சூர்யகுமார், ஜடேஜா, அக்சர் படேல், ஷர்துல் தாகூர், பும்ரா, ஷமி, சிராஜ், குல்தீப், அஷ்வின், வாஷிங்டன் சுந்தர்.



அட்டவணை

தேதி போட்டி இடம்

செப். 22 முதல் ஒருநாள் மொகாலி

செப். 24 2வது ஒருநாள் இந்துார்

செப். 27 3வது ஒருநாள் ராஜ்கோட்

* போட்டிகள் மதியம் 1:30 மணிக்கு துவங்கும்.



தக்கவைப்பாரா

அஷ்வின் இதுவரை 113 ஒருநாள் போட்டியில் 151 விக்கெட் வீழ்த்தினார். பேட்டிங் செய்ய களமிறங்கிய 63 இன்னிங்சில் 707 ரன் எடுத்தார். 2017ல் வெஸ்ட் இண்டீசிற்கு எதிராக விளையாடினார். 5 ஆண்டுக்குப் பின் தென் ஆப்ரிக்க தொடரில் சேர்க்கப்பட்ட அஷ்வின் 2 போட்டியில் 1 விக்கெட் சாய்த்தார். தற்போது மீண்டும் ஒருநாள் அணிக்கு திரும்பிய இவர், சிறப்பாக செயல்பட்டால், 2011க்குப் பின் மீண்டும் உலக கோப்பை அணியில் இடம் பெறலாம்.

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement