லக்னோ: டேவிஸ் கோப்பை டென்னிஸ் 'வேர்ல்டு குரூப்-2' போட்டியில் இந்திய அணி 4-1 என மொராக்கோவை வீழ்த்தியது.
இந்தியா, மொராக்கோ அணிகள் மோதிய டேவிஸ் கோப்பை டென்னிஸ் 'வேர்ல்டு குரூப்-2' போட்டி லக்னோவில் நடந்தது. இரண்டு ஒற்றையர் பிரிவு போட்டிகளின் முடிவில் 1-1 என சமநிலையில் இருந்தது.
இரட்டையர் பிரிவு போட்டியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, யூகி பாம்ப்ரி ஜோடி, மொராக்கோவின் எலியாட் பெஞ்செட்ரிட், யூன்ஸ் லாலமி லாரூசி ஜோடியை சந்தித்தது. ஒரு மணி நேரம், 11 நிமிடம் நீடித்த போட்டியில் அபாரமாக ஆடிய இந்திய ஜோடி 6-2, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, 2-1 என முன்னிலை பெற்றுத் தந்தது.
இதன்மூலம் இந்திய சீனியர் வீரர் போபண்ணா 43, தனது கடைசி டேவிஸ் கோப்பை போட்டியில் வெற்றியுடன் விடை பெற்றார். சமீபத்தில் இவர், டேவிஸ் கோப்பையில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். டேவிஸ் கோப்பை அரங்கில் 50வது முறையாக களமிறங்கிய இவர், 33 போட்டியில், 23ல் வெற்றி (ஒற்றையரில் 10, இரட்டையரில் 13) பெற்றுள்ளார்.
கடைசி போட்டியில் களமிறங்கிய போபண்ணாவை உற்சாகப்படுத்தும் வகையில் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் நேரடியாக போட்டியை காண லக்னோ வந்திருந்தனர். வெற்றிக்கு பின் போபண்ணா, ரசிகர்களிடம் பிரியா விடை பெற்றார்.
சுமித் அபாரம்
அடுத்து நடந்த மாற்று ஒற்றையர் பிரிவு முதல் போட்டியில் இந்தியாவின் சுமித் நாகல், மொராக்கோவின் யாசின் டிலிமி மோதினர். அபாரமாக ஆடிய சுமித் நாகல் 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். ஏற்கனவே இவர், ஒற்றையர் பிரிவில் வெற்றி பெற்றிருந்தார். இதன்மூலம் டேவிஸ் கோப்பை அரங்கில், 2வது முறையாக ஒரு அணிக்கு எதிரான ஒற்றையர், மாற்று ஒற்றையர் போட்டியில் வெற்றி கண்டார். இதற்கு முன், 2019ல் கஜகஸ்தானில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிராக ஒற்றையர், மாற்று ஒற்றையரில் வெற்றி பெற்றிருந்தார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் திக்விஜய் பிரதாப் சிங் 6-1, 5-7, 10-6 என மொராக்கோவின் வாலித் அஹவுடாவை வீழ்த்தினார்.
இதனையடுத்து, 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்ற இந்திய அணி, 'வேர்ல்டு குரூப்-1 பிளே-ஆப்' சுற்றில் விளையாட தகுதி பெற்றது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!