விசாகப்பட்டனம்: இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் இரண்டாவது போட்டி விசாகப்பட்டனத்தில் நடக்கிறது. இதில் இந்தியா எளிதாக வென்று, தொடரை கைப்பற்ற வேண்டுமென ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி மூன்று போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. மும்பையில் நடந்த முதல் போட்டியில் வென்ற இந்தியா, 1-0 என தொடரில் முன்னிலையில் உள்ளது. இரு அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று விசாகப்பட்டனத்தில் நடக்கிறது.
ரோகித் வருகை
இதில் வெல்லும் பட்சத்தில் இந்திய அணி தொடரை கைப்பற்றும். 'ரெகுலர்' கேப்டன் ரோகித் சர்மா அணிக்கு திரும்புவது 'டாப் ஆர்டரில்' பலம் சேர்க்கும். இவர், சுப்மன் கில்லுடன் இணைந்து துவக்கம் தருவார். 'மிடில் ஆர்டரில்' கடந்த போட்டியில் அடுத்தடுத்த பந்தில் வீழ்ந்த 'சீனியர்' கோஹ்லி, அதிரடி வீரர் சூர்யகுமார் எழுச்சி பெற்றாக வேண்டும். சூர்யகுமார் கடைசியாக விளையாடிய 10 ஒருநாள் போட்டிகளில் (0, 14, 21, 4, 6, 34, 4, 8, 9, 13 ரன்) ஒரு அரைசதம் கூட விளாசவில்லை. இம்மைதான ராசி கோஹ்லிக்கு (6 போட்டியில் 118, 117, 99, 65, 157, 0 ரன்) உதவலாம்.
நம்பிக்கை கூட்டணி
கடந்த போட்டியில் 5வதாக களமிறங்கிய ராகுல், 75 ரன் எடுத்து வெற்றிக்கு கைகொடுத்தார். இவர் மீண்டும் அசத்தலாம். முழங்கால் ஆப்பரேஷன் செய்து 8 மாதத்துக்குப் பின் ஒருநாள் போட்டியில் பங்கேற்றாலும், பேட்டிங், பீல்டிங், பவுலிங்கில் ஜடேஜா, துாள் கிளப்பியது இந்தியாவுக்கு பலம். ஹர்திக் பாண்ட்யாவும் கைகொடுக்கலாம்.
பவுலிங் எதிர்பார்ப்பு
பந்துவீச்சில் முகமது ஷமி (3 விக்.,), முகமது சிராஜ் (3) எதிர்பார்ப்புக்கு ஏற்ப சிறப்பாக செயல்படுகின்றனர். ஷர்துல் தாகூர், குல்தீப்பும் நம்பிக்கை தருகின்றனர்.
'வேகம்' பலம்
ஆஸ்திரேலிய அணி மிட்சல் மார்ஷ், ஸ்டாய்னிஸ், கேமரான் கிரீன், மேக்ஸ்வெல் என நான்கு 'ஆல் ரவுண்டர்களுடன்' களமிறங்கினாலும், இந்தியாவுக்கு தொல்லையாக அமையவில்லை. கேப்டன் ஸ்மித்துக்கு தான் சிக்கல் ஏற்படுத்தியது. 129/2 என இருந்து, கடைசியில் 188/10 என சரிந்தது. கடைசி 19 ரன்னில் 6 விக்கெட்டுகளை பறிகொடுத்தது ஆஸ்திரேலியா.
ஸ்மித், லபுசேன் தடுமாறுவது பலவீனம். வார்னருக்குப் பதில் வந்த மார்ஷ் மட்டும் ஆறுதல் தருகிறார். வேகப்பந்துவீச்சில் மிட்சல் ஸ்டார்க், சீன் அபாட், ஸ்டாய்னிஸ் மிரட்டுகின்றனர். 'சுழலில்' ஆடம் ஜாம்பா அசத்தலாம்.
7
விசாகப்பட்டனத்தில் பங்கேற்ற 9 போட்டியில் இந்தியா 7ல் வென்றது. ஒன்றில் தான் தோற்றது. ஒரு போட்டி 'டை' ஆனது.
* 2010ல் இங்கு இந்தியா (292/5), ஆஸ்திரேலிய (289/3) அணிகள் மோதின. இதில் இந்தியா 5 விக்கெட்டில் வென்றது.
ஆடுகளம் எப்படி
ஆடுகளம் பேட்டர்களுக்கு சாதகமாக இருக்கும். முதல் இன்னிங்ஸ் சராசரி ஸ்கோர் 295 ரன்னாக உள்ளது. கடைசியாக (2019) இங்கு வந்த வெஸ்ட் இண்டீசிற்கு எதிரான போட்டியில் ரோகித் (159), ராகுல் (102) சதம் விளாச, இந்தியா 387/5 ரன் குவித்தது.
மழை வருமா
விசாகப்பட்டனத்தில் இன்று காலை முதல் மதியம் 1:00 மணி வரை இடியுடன் கூடிய மழை வர 83 சதவீதம் வாய்ப்புள்ளது. போட்டி முழுமையாக நடப்பது சந்தேகம்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!