வெலிங்டன்: இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்டில் வில்லியம்சன், நிக்கோல்ஸ் இரட்டை சதம் விளாசினர். நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 580 ரன் குவித்தது.
நியூசிலாந்து, இலங்கை அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் வெலிங்டனில் நடக்கிறது. முதல் நாள் முடிவில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 155/2 ரன் எடுத்திருந்தது. நேற்று, இரண்டாம் நாள் ஆட்டம் நடந்தது. அபாரமாக ஆடிய வில்லியம்சன், டெஸ்ட் அரங்கில் தனது 6வது இரட்டை சதம் அடித்தார். மூன்றாவது விக்கெட்டுக்கு 363 ரன் சேர்த்த போது பிரபாத் ஜெயசூர்யா பந்தில் வில்லியம்சன் (215) அவுட்டானார். டேரில் மிட்செல் (17) நிலைக்கவில்லை. பொறுப்பாக ஆடிய ஹென்றி நிக்கோல்ஸ், தனது முதல் இரட்டை சதத்தை பதிவு செய்தார்.
நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 580 ரன் எடுத்து 'டிக்ளேர்' செய்தது. நிக்கோல்ஸ் (200), பிளன்டெல் (17) அவுட்டாகாமல் இருந்தனர்.
பின் முதல் இன்னிங்சை துவக்கிய இலங்கை அணிக்கு ஒஷாடா பெர்னாண்டோ (6), குசல் மெண்டிஸ் (0) ஏமாற்றினர். ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 26/2 ரன் எடுத்திருந்தது. கேப்டன் கருணாரத்னே (16), பிரபாத் ஜெயசூர்யா (4) அவுட்டாகாமல் இருந்தனர்.
363
வில்லியம்சன், நிக்கோல்ஸ் ஜோடி 3வது விக்கெட்டுக்கு 363 ரன் சேர்த்தது. ஏற்கனவே 2021ல் கிறைஸ்ட்சர்ச்சில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் இந்த ஜோடி 4வது விக்கெட்டுக்கு 369 ரன் எடுத்திருந்தது. இதன்மூலம் டெஸ்ட் அரங்கில் இரண்டு முறை, ஒரு இன்னிங்சில் 300 ரன்களுக்கு மேல் சேர்த்த 8வது ஜோடியானது.
18
வில்லியம்சன் (215), நிக்கோல்ஸ் (200*) ஜோடி, ஒரு டெஸ்ட் இன்னிங்சில், இரட்டை சதம் விளாசிய முதல் நியூசிலாந்து ஜோடியானது. ஒட்டுமொத்தமாக இச்சாதனை படைத்த 18வது ஜோடியானது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!