Load Image
Advertisement

சுழலுமா நாக்பூர் ஆடுகளம்: சவாலுக்கு தயாராகும் இந்தியா

நாக்பூர்: இந்தியா, ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் நாளை துவங்குகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு முன்னேற வேண்டிய கட்டாயத்தில் உள்ள இந்திய அணிக்கு உதவும் வகையில் ஆடுகளம் சுழலுக்கு சாதகமாக தயாராகி உள்ளது.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி நான்கு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் நாளை நாக்பூரில் துவங்குகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்திய அணியை பொறுத்தவரையில் டெஸ்ட் தொடரில் வென்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு முன்னேறுவது, தரவரிசையில் 'நம்பர்-1' இடத்தை பெறுவது என இரு லட்சியத்துடன் களமிறங்குகிறது.

இதற்காக சொந்தமண்ணில் கிடைத்த வாய்ப்பை தவறவிட விரும்பவில்லை போல. சமீப காலமாக இந்திய ஆடுகளங்கள் 'வேகத்துக்கு' கைகொடுத்து வருகின்றன. ஆனால் நாக்பூர் ஆடுகளம் சுழலுக்கு கைகொடுக்கும் வகையில் வேண்டும் என இந்திய அணி தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தற்போது ஆடுகளத்தில் லேசான புற்கள் காணப்படுகின்றன. போட்டி துவங்கும் முன் மீண்டும் புற்கள் அகற்றப்படும் எனத் தெரிகிறது. இதனால் முதல் நாளில் இருந்தே பந்தில் திருப்பத்தை எதிர்பார்க்கலாம்.

இந்திய அணி தரப்பில்,' சொந்தமண் சாதகத்தை முடிந்தளவுக்கு பயன்படுத்திக் கொள்வோம். எங்களது மிகப்பெரும் பலம் சுழற்பந்து வீச்சாளர்கள் தான். அவர்கள் விக்கெட் வீழ்த்தும் வகையில் சாதகமான ஆடுகளத்தை தர வேண்டும் என விரும்புகிறோம்,' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2015 டெஸ்டில் தென் ஆப்ரிக்காவின் 20 விக்கெட்டுகளும் சுழலில் தான் சரிந்தன. 2017ல் இலங்கைக்கு எதிராக அஷ்வின், ஜடேஜா தலா 8 விக்கெட் சாய்த்தனர். இப்போது அஷ்வின், ஜடேஜா, அக்சர், குல்தீப் என நான்கு முன்னணி சுழல் வீரர்கள் உள்ள நிலையில் இந்தியா முதல் நாளில் இருந்தே ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கலாம்.

அதேநேரம் ஆஸ்திரேலிய தரப்பில் அனுபவ லியான், ஸ்வெப்சன், ஆஸ்டன் ஏகார் என பல சுழல் வீரர்கள் இந்திய பேட்டர்களுக்கு தொல்லை தர காத்திருக்கின்றனர்.

பைனலுக்கு செல்ல...

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் பைனல் ஜூன் மாதம் லண்டனில் நடக்கவுள்ளது. தற்போது ஆஸ்திரேலியா (75.56 சதவீதம்), இந்தியா (58.93), இலங்கை (53.33), தென் ஆப்ரிக்கா (48.72) 'டாப்-4' இடத்தில் உள்ளன. வரும் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா குறைந்தபட்சம் ஒரு டெஸ்டில் 'டிரா' செய்தால் போதும், பைனலுக்கு முன்னேறலாம்.

இந்திய அணி 3-0, 3-1 என வென்றால் பைனலுக்கு செல்லலாம். மற்றபடி 2-0 என வென்றால் இலங்கை-நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா-வெஸ்ட் இண்டீஸ் தொடரின் முடிவுக்கு ஏற்ப, இந்தியாவின் பைனல் வாய்ப்பு தெரியவரும்.

கிடைக்குமா 'நம்பர்-1'

இந்திய அணி தற்போது ஒருநாள் (114 புள்ளி), 'டி-20' (267) தரவரிசையில் 'நம்பர்-1' இடத்தில் உள்ளது. டெஸ்ட் தரவரிசையில் தறபோது ஆஸ்திரேலியா (126), இந்தியா (115), இங்கிலாந்து (107) 'டாப்-3' இடத்தில் உள்ளன. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-0 அல்லது 3-1 என கைப்பற்றினால் 121 புள்ளியுடன் முதலிடத்தை பெறலாம்.

மூன்று வித கிரிக்கெட்டிலும் 'நம்பர்-1' அணி என்ற பெருமை பெறலாம்.

13

இரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரில், இந்தியாவின் தோனி அதிக முறை கேப்டனாக இருந்தார். இவர் 2008 முதல் 2014 வரையில் 13 போட்டிகளில் அணியை வழிநடத்தி உள்ளார்.

23

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் கும்ளே (111 விக்.,) முதலிடம் வகிக்கிறார். ஹர்பஜன் சிங் (95), லியான் (94), அஷ்வின் (89) அடுத்தடுத்து உள்ளனர். இத்தொடரில் அஷ்வின் 23 விக்கெட் வீழ்த்தினால் கும்ளேவை முந்தி 'நம்பர்-1' இடம் பிடிக்கலாம்.

27

இரு அணிகளும் 27 டெஸ்ட் தொடரில் பங்கேற்றன. இந்தியா 10, ஆஸ்திரேலியா 12 ல் வென்றன. ஐந்து தொடர் 'டிரா' ஆகின.

39

இரு அணிகள் மோதிய தொடரில் அதிக போட்டியில் பங்கேற்றது, அதிக ரன் எடுத்ததில் முதல்வனாக இந்திய 'ஜாம்பவான்' சச்சின் உள்ளார். 1991 முதல் 2013 வரை 39 போட்டியில் 11 சதம் உட்பட 3630 ரன்கள் குவித்துள்ளார்.

450

இந்திய அணி சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின், இதுவரை 88 டெஸ்டில் 449 விக்கெட் வீழ்த்தி உள்ளார். இன்னும் ஒரு விக்கெட் சாய்த்தால், கும்ளேவை (93ல் 450) முந்தி டெஸ்டில் அதிவேகமாக 450 விக்கெட் வீழ்த்திய இந்திய பவுலர் ஆகலாம்.

705

இரு அணிகள் இடையிலான டெஸ்டில் ஒரே இன்னிங்சில் அதிக ஸ்கோர் குவித்த அணியாக இந்தியா உள்ளது. 2004 சிட்னி போட்டியில் இந்தியா 705/7 ரன் குவித்தது.

* இரு அணிகள் இடையில் குறைந்த ஸ்கோர் எடுத்த அணியாக இந்தியா உள்ளது. 2020, அடிலெய்டு போட்டி இரண்டாவது இன்னிங்சில் இந்தியா 36 ரன்னில் சுருண்டது.





Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

+2 மாணவர்களே!
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement