Load Image
Advertisement

இந்திய அணி 'திரில்' வெற்றி: நியூசிலாந்து ஏமாற்றம்

லக்னோ: பரபரப்பான இரண்டாவது 'டி-20' போட்டியில் இந்திய அணி கடைசி ஓவரில் 'திரில்' வெற்றி பெற்றது. சகால், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் உள்ளிட்ட சுழற்பந்துவீச்சாளர்கள் மிரட்டினர்.

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்தியா தோற்றது.

இரண்டாவது போட்டி நேற்று உ.பி., தலைநகர் லக்னோவில் நடந்தது. இந்திய அணியில் உம்ரான் மாலிக்கிற்கு பதில் சகால் இடம் பெற்றார். 'டாஸ்' வென்ற நியூசிலாந்து கேப்டன் சான்ட்னர், 'பேட்டிங்' தேர்வு செய்தார்.

திணறல் துவக்கம்

ஆடுகளம் 'சுழலுக்கு' ஒத்துழைக்க, இந்திய பவுலர்கள் பட்டையை கிளப்பினர். நியூசிலாந்தின் 'டாப்-3' பேட்டர்கள் தேவையில்லாமல் 'ரிவர்ஸ் ஸ்வீப்' செய்து, பரிதாபமாக விக்கெட்டை பறிகொடுத்தனர். முதலில் சகால் பந்தில் ஆலன்(11) போல்டானார். அடுத்து வாஷிங்டன் சுந்தர் பந்தை 'ரிவர்ஸ் ஸ்வீப்' செய்தார் கான்வே. இவரது 'கிளவ்சில்' உரசிச் சென்ற பந்தை கீப்பர் இஷான் கிஷான் துடிப்பாக பிடித்தார். அம்பயர் 'அவுட்' கொடுத்தார்.

கான்வே(11) 'ரிவியூ' கேட்டும் பலன் கிடைக்கவில்லை. தீபக் ஹூடாவிடம் கிளன் பிலிப்ஸ்(5) 'சரண்டர்' ஆக, 7 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 35 ரன் எடுத்து தத்தளித்தது. தொடர்ந்து இந்திய வீரர்கள் 'சுழல்' ஜாலம் காட்ட, நியூசிலாந்து அணியின் நிலை மோசமானது. ரன் எடுக்க முடியாமல் திணறியது.

குல்தீப் வீசிய மாயாஜால பந்தில் மிட்சல்(8) போல்டானார். இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் குல்தீப்கலக்கல் 'த்ரோ'வில் சாப்மேன்(14) ரன் அவுட்டானார். கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்தில் பிரேஸ்வெல்(14) வீழ்ந்தார். கடைசி கட்டத்தில் துல்லியமாக பந்துவீசிய அர்ஷ்தீப் 'வேகத்தில்' இஷ் சோதி(1), பெர்குசன்(0) அவுட்டாகினர். நியூசிலாந்து அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 99 ரன் மட்டும் எடுத்தது. அதிகபட்சமாக சான்ட்னர்(19), டபி(6) அவுட்டாகாமல் இருந்தனர்.

'சூப்பர்' சூர்யகுமார்

சுலப இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு சுப்மன் கில்(11) ஏமாற்றினார். இஷான் கிஷான்(19), ராகுல் திரிபாதி(13), வாஷிங்டன் சுந்தர்(10) விரைவில் வெளியேறினர். இருப்பினும் சூர்யகுமார், கேப்டன் ஹர்திக் பாண்ட்யா நம்பிக்கை தந்தனர். கடைசி ஓவரில் இந்திய வெற்றிக்கு 6 ரன்கள் தேவைப்பட்டன. டிக்னர் பந்துவீசினார். முதல் 4 பந்தில் 3 ரன் கிடைத்தன. 5வது பந்தை பவுண்டரிக்கு விரட்டிய சூர்ய குமார் வெற்றியை உறுதி செய்தார். இந்திய அணி 19.5 ஓவரில் 101 ரன்கள் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடர் 1-1 என சமநிலையை எட்டியது. சூர்யகுமார்(26), பாண்ட்யா(15) அவுட்டாகாமல் இருந்தனர்.

சகால் '91'

நேற்று ஆலனை போல்டாக்கிய சகால், சர்வதேச 'டி-20' போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய பவுலரானார். இவர், 75 போட்டிளில் 91 விக்கெட் சாய்த்துள்ளார். அடுத்த இடத்தில் புவனேஷ்வர் குமார்(87 போட்டி, 90 விக்.,) உள்ளார்.

வாஷிங்டனுக்கு என்ன...

போட்டியின் 9வது ஓவரை வீச வந்தார் வாஷிங்டன் சுந்தர். அப்போது, இவரது விரல் பகுதியில் வலிக்காக சுற்றியிருந்த 'டேப்பை' அம்பயர்கள் அகற்ற சொன்னார்கள். 'பிசியோதரபிஸ்ட்' புதிய 'டேப்' கொண்டு வந்தார். இதையடுத்து மைதானத்தை விட்டு வெளியேறினார். 9வது ஓவரை ஹூடா வீசினார். 11வது ஓவரின் போது மீண்டும் களத்திற்குள் வந்தார் வாஷிங்டன். அம்பயர்கள் அனுமதிக்க, 14வது ஓவரை கச்சிதமாக வீசினார்.

இது குறைவு

நேற்று 99 ரன்களுக்கு சுருண்ட நியூசிலாந்து அணி, சர்வதேச 'டி-20' போட்டிகளில் இந்தியாவுக்கு எதிராக தனது குறைந்த ஸ்கோரை பதிவு செய்தது. இதற்கு முன் 111 ரன்(கோல்கட்டா,ஈடன் கார்டன், 2021) எடுத்திருந்தது.

'சிக்சர்' இல்லை

நியூசிலாந்து அணி நேற்று ஒரு சிக்சர் கூட அடிக்கவில்லை. சர்வதேச 'டி-20' போட்டிகளில் இப்படி சிக்சர் அடிக்காதது இந்திய மண்ணில் மூன்றாவது முறையாக அரங்கேறியது. இதற்கு முன் இந்தியா(92 ரன்னில் ஆல் அவுட், எதிர், தென் ஆப்ரிக்கா, கட்டாக், 2015), ஹாங்காங்(116 ரன்னில் ஆல் அவுட், எதிர்-ஆப்கன், நாக்பூர், 2016) அணிகள் சிக்சர் அடிக்கவில்லை.



Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

+2 மாணவர்களே!
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement