புதுடில்லி: ''ஜாம்பவான் சச்சின் கூட ஆறாவது முறையாக உலக கோப்பையில் பங்கேற்றபோதுதான், பட்டம் வெல்ல முடிந்தது. இதேபோல, கேப்டன் ரோகித், கோஹ்லி விஷயத்திலும் ரசிகர்கள் பொறுமையுடன் இருக்க வேண்டும்,'' என, அஷ்வின் தெரிவித்தார்.
இந்திய மண்ணில் வரும் அக்டோபர்-நவம்பரில் உலக கோப்பை (50 ஓவர் ) தொடர் நடக்கவுள்ளது. இதில் இந்தியா, 'நடப்பு சாம்பியன்' இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட அணிகள் பங்கேற்கின்றன. இந்திய அணி கடைசியாக தோனி தலைமையில் 2011ல் கோப்பை வென்றது. இம்முறை சொந்த மண்ணில் நடப்பதால் மீண்டும் கோப்பை கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். இதற்கு கேப்டன் ரோகித், கோஹ்லி உள்ளிட்ட 'சீனியர்' வீரர்கள் கைகொடுக்க வேண்டும்.
இது குறித்து இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின் கூறுகையில்,'' தற்போதைய வீரர்களால் உலக கோப்பையை வென்று தர முடியவில்லை என எளிதாக குறை கூறலாம். ஜாம்பவான் சச்சின் ஆறாவது முறையாக உலக கோப்பையில் பங்கேற்றபோதுதான், பட்டம் வெல்ல முடிந்தது. தோனியால் எப்படி உடனடியாக கோப்பை வெல்ல முடிந்தது என விவாதம் செய்கின்றனர். இதே போல, எல்லா வீரர்களுக்கும் நடக்கும் என சொல்ல முடியாது.
நான்காவது முறை
கேப்டன் ரோகித், கோஹ்லி விஷயத்தில் ரசிகர்கள் பொறுமையுடன் இருக்க வேண்டும். கடந்த 2011ல் உலக கோப்பை, 2013ல் சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய அணியில் கோஹ்லி இடம்பெற்றிருந்தார். இவர் நான்காவது முறையாக உலக கோப்பையில் விளையாட உள்ளார். ரோகித் சர்மாவை பொறுத்தவரை சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடி இருந்தார். இவர்கள் இரு அணிகள் மோதும் தொடர், ஐ.பி.எல்., உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்று வருகின்றனர். ஐ.சி.சி., உலக கோப்பை என வரும்போதும் நிச்சயமாக சாதிப்பார்கள்,'' என்றார்.
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!