Load Image
Advertisement

இளம் இந்தியா சாம்பியன்: பெண்கள் உலக கோப்பையில் வரலாறு

போட்செப்ஸ்ட்ரூம்: ஜூனியர் உலக கோப்பை (19 வயது) பைனலில் அசத்திய ஷபாலி வர்மா தலைமையிலான இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது. இதன்மூலம் முதன்முறையாக உலக சாம்பியன் பட்டம் வென்று புதிய வரலாறு படைத்தது.

தென் ஆப்ரிக்காவில், 19 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான ஐ.சி.சி., உலக கோப்பை கிரிக்கெட் முதல் சீசன் நடந்தது. போட்செப்ஸ்ட்ரூமில் நடந்த பைனலில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதின. இரு அணிகளிலும் மாற்றம் செய்யப்படவில்லை. 'டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் ஷபாலி வர்மா 'பீல்டிங்' தேர்வு செய்தார்.



பவுலர்கள் ஆதிக்கம்: முதலில் 'பேட்' செய்த இங்கிலாந்து அணிக்கு, இந்திய பவுலர்கள் தொல்லை தந்தனர். திதாஸ் சாது 'வேகத்தில்' லிபர்டி ஹீப் (0) வெளியேறினார். அர்ச்சனா தேவி பந்தில் நியாம் ஹாலந்து (10), கேப்டன் கிரேஸ் ஸ்கிரீவன்ஸ் (4) அவுட்டாகினர். தொடர்ந்து அசத்திய திதாஸ் பந்தில் செரன் ஸ்மால் (3) ஆட்டமிழந்தார். சாரிஸ் பாவ்லி (2), ஜோசி குரோவ்ஸ் (4), ஹன்னா பேக்கர் (0) ஏமாற்றினர்.



ரியானா மெக்டொனால்டு-கே (19), அலெக்சா ஸ்டோன்ஹவுஸ் (11), சோபியா ஸ்மால் (11) ஆறுதல் தந்தனர். இங்கிலாந்து அணி 17.1 ஓவரில் 68 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. இந்தியா சார்பில் திதாஸ், அர்ச்சனா, பார்ஷவி தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.



திரிஷா அபாரம்: சுலப இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு கேப்டன் ஷபாலி வர்மா (15) நல்ல துவக்கம் தந்தார். ஸ்வேதா ஷெராவத் (5) நிலைக்கவில்லை. பின் இணைந்த சவுமியா திவாரி, திரிஷா ஜோடி நம்பிக்கை அளித்தது. எல்லி ஆண்டர்சன் வீசிய 12வது ஓவரில் தொடர்ச்சியாக 2 பவுண்டரி அடித்தார் திரிஷா. மூன்றாவது விக்கெட்டுக்கு 46 ரன் சேர்த்த போது திரிஷா (24) அவுட்டானார். பொறுப்பாக ஆடிய சவுமியா வெற்றியை உறுதி செய்தார்.



இந்திய அணி 14 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 69 ரன் எடுத்து வெற்றி பெற்றது. சவுமியா (24), ஹரிஷிதா (1) அவுட்டாகாமல் இருந்தனர்.



முதன்முறை

பெண்கள் கிரிக்கெட்டில் இந்திய அணி இதுவரை எவ்வித உலக கோப்பையும் வென்றது இல்லை. 2005, 2017ல் ஒருநாள், 2020ல் 'டி-20' என மூன்று உலக கோப்பை தொடர்களில் பைனல் வரை சென்ற 'சீனியர்' இந்திய அணிக்கு 2வது இடமே கிடைத்தது. நேற்று, இங்கிலாந்துக்கு எதிரான பைனலில் அசத்திய ஷபாலி வர்மா தலைமையிலான இளம் இந்திய அணி (19 வயது) முதன்முறையாக உலக கோப்பை வென்று புதிய வரலாறு படைத்தது.



* தவிர இது, சமீபத்தில் 19வது பிறந்த நாள் கொண்டாடிய இந்திய அணி கேப்டன் ஷபாலி வர்மாவுக்கு பிறந்தநாள் பரிசாக அமைந்தது.



ரூ. 5 கோடி பரிசு

ஐ.சி.சி., உலக கோப்பை வென்ற இளம் இந்திய அணிக்கு ரூ. 5 கோடி பரிசு தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பி.சி.சி.ஐ., செயலர் ஜெய் ஷா கூறுகையில், ''இந்தியாவில் பெண்கள் கிரிக்கெட் வளர்ச்சி அடைந்து வருகிறது. தற்போது உலக கோப்பை வென்றதன்மூலம் நாட்டில் பெண்கள் கிரிக்கெட்டின் அந்தஸ்து பலமடங்கு உயர்ந்துள்ளது. கோப்பை வென்று வரலாறு படைத்த இந்திய அணியினருக்கு ரூ. 5 கோடி பரிசுத் தொகை அறிவிப்பதில் பெருமை கொள்கிறேன்,'' என்றார்.



Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement