போட்செப்ஸ்ட்ரூம்: 'ஜூனியர்' உலக கோப்பை தொடரின் பைனலில் இந்தியா, இங்கிலாந்து பெண்கள் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
தென் ஆப்ரிக்காவில் 'ஜூனியர்' பெண்கள் அணிகளுக்கான (19 வயது) உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இன்று போட்செப்ஸ்ட்ரூமில் நடக்கவுள்ள பைனலில் ஷபாலி வர்மாவின் இந்திய அணி, கிரேசின் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.
இந்திய அணி லீக் சுற்றில் 3 போட்டியிலும் வென்றது. 'சூப்பர்-6' சுற்றில் ஆஸ்திரேலியாவிடம் தோற்ற போதும், இலங்கையை எளிதாக வென்று அரையிறுதிக்குள் நுழைந்தது. இதில் நியூசிலாந்து அணியை 8 விக்கெட்டில் சாய்த்து பைனலுக்கு முன்னேறியது.
ஸ்வேதா பலம்
பேட்டிங்கில் துவக்க வீராங்கனை ஸ்வேதா பலம் சேர்க்கிறார். 6 போட்டியில் 3 அரைசதம் உட்பட 292 ரன் எடுத்து, 'ஜூனியர்' உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிக ரன் குவித்த வீராங்கனைகள் வரிசையில் முதலிடத்தில் உள்ளார். இதுபோல மூன்றாவதாக உள்ள கேப்டன் ஷபாலி (157), சவுமியா, திரிஷா ரன் சேர்க்க உதவுவர். சர்வதேச அனுபவம் பெற்ற விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ், ரன் குவிப்பில் கைகொடுக்க வேண்டும்.
பந்துவீச்சில் இந்தியாவுக்கு பார்ஷவி 9, மன்னாத் காஷ்யப் 8, அர்ச்சனா 6 என பலரும் கைகொடுக்கின்றனர். தவிர சோனம் 4, திதாஸ் 4, ஷபாலி 3 விக்கெட் என நம்பிக்கை தருகின்றனர்.
இங்கிலாந்து எப்படி
இங்கிலாந்து அணி லீக் சுற்றில் 3, 'சூப்பர்-6' சுற்றில் 2 உட்பட பங்கேற்ற 7 போட்டியிலும் தோற்காமல் வலம் வருகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதியில் 99 ரன் எடுத்த போதும், பவுலிங்கில் அசத்தி வெற்றி பெற்று, பைனலுக்கு முன்னேறியது. கேப்டன் கிரேஸ் (289 ரன்), லிபர்டி (149), நியாம் பியோனா (128) என பலர் ரன்மழை பொழிகின்றனர். பந்துவீச்சில் ஹன்னா 9, கிரேஸ் 8, எல்லி 8, சோபியா 8 விக்கெட் சாய்த்து மிரட்டுகின்றனர்.
வரலாறு
பெண்கள் கிரிக்கெட்டில் இந்திய அணி இதுவரை எவ்வித உலக கோப்பையும் வென்றது இல்லை. 2005, 2017ல் ஒருநாள், 2020ல் 'டி-20' என மூன்று உலக கோப்பை, 2022 காமன்வெல்த் என நான்கு பைனலில் 'சீனியர்' இந்தியா பங்கேற்ற போதும், இரண்டாவது இடமே கிடைத்தது.
இதில் 3 பைனலில் பங்கேற்ற அனுபவம் பெற்றவர் 'ஜூனியர்' அணி கேப்டன் ஷபாலி. நேற்று 19வது பிறந்த நாள் கொண்டாடிய இவர், இன்று சிறப்பாக செயல்பட்டு வரலாறு படைக்க வேண்டும்.
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!