புதுடில்லி: இந்திய ஓபன் பாட்மின்டன் தொடர் முதல் சுற்றில் 'நடப்பு சாம்பியன்' சிந்து அதிர்ச்சி தோல்வியடைந்தார்.
டில்லியில் 'இந்திய ஓபன் சூப்பர் 750' பாட்மின்டன் தொடர் நேற்று துவங்கியது. பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் உலகின் 'நம்பர்-7' வீராங்கனையான இந்தியாவின் சிந்து, 30 வது இடத்திலுள்ள தாய்லாந்தின் சுபனிதாவை சந்தித்தார். இதில் சிந்து எளிதாக வெல்வார் என நம்பப்பட்டது.
மாறாக முதல் செட்டை 14-21 என எளிதாக இழந்தார். இரண்டாவது செட் இழுபறியாக இருந்தது. ஒரு கட்டத்தில் 20-19 என முந்திய சிந்து கடைசியில் 20-22 என கோட்டை விட்டார். 45 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் சிந்து 14-21, 20-22 என நேர் செட்டில் தோற்று வெளியேறினார். சமீபத்திய மலேசிய ஓபன் முதல் சுற்றிலும் சிந்து தோல்வியடைந்து திரும்பினார்.
இந்தியாவின் செய்னா நேவல் முதல் சுற்றில் 21-17, 12-21, 21-19 என்ற செட்டில் டென் மார்க்கின் பிளிட்பெல்ட்டை வென்றார்.
பிரனாய் ஏமாற்றம்
ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் உலகத்தரவரிசையில் 8வது இடத்திலுள்ள இந்தியாவின் பிரனாய், 'நம்பர்-10' ஆக உள்ள சக வீரர் லக்சயா செனை சந்தித்தார். சமீபத்தில் நடந்த மலேசிய தொடரின் முதல் சுற்றில் பிரனாய், லக்சயாவை வீழ்த்தி இருந்தார்.
இம்முறை சுதாரித்துக் கொண்ட லக்சயா முதல் செட்டை 21-14 என கைப்பற்றினார். அடுத்த செட்டையும் 21-15 என வசப்படுத்தினார். முடிவில் லக்சயா 21-14, 21-15 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
பெண்கள் இரட்டையரில் இந்தியாவின் காயத்ரி, திரிஷா ஜோடி, பிரான்சின் லாம்பெர்ட், டிரான் ஜோடியை சந்தித்தது. இதில் இந்திய ஜோடி 22-20, 17-21, 21-18 என்ற கணக்கில் போராடி வெற்றி பெற்றது.
சாத்விக்-சிராக் அபாரம்
ஆண்கள் இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ('நம்பர்-5'), 31வது இடத்திலுள்ள டென்மார்க்கின் ஜெப்பே, லாசே ஜோடியை முதல் சுற்றில் எதிர்கொண்டது. இதில் இந்திய ஜோடி 21-13, 21-15 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றது.
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!