பாங்காக்: ஆசிய ஜூனியர் பாட்மின்டன் ஒற்றையர் பிரிவு (17 வயது) காலிறுதிக்கு இந்திய வீராங்கனை உன்னதி ஹூடா முன்னேறினார்.
தாய்லாந்தில், ஆசிய ஜூனியர் (15, 17 வயது) பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. இதில் 17 வயதுக்குட்பட்ட பெண்கள் ஒற்றையர் பிரிவு நான்காவது சுற்றில் இந்தியாவின் உன்னதி ஹூடா, தாய்லாந்தின் நட்சவீ சிட்டிதீரனன் மோதினர். முதல் செட்டை 21-11 எனக் கைப்பற்றிய உன்னதி, இரண்டாவது செட்டை 21-19 என வென்றார். மொத்தம் 29 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய உன்னதி 21-11, 21-19 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் அன்மோல் கார்ப் 17-21, 21-19, 13-21 என மலேசியாவின் டானியா சோபியாவிடம் வீழ்ந்தார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவு (17 வயது) 4வது சுற்றில் இந்தியாவின் துருவ் நேகி, இந்தோனேஷியாவின் ரியான் புட்ரா வித்யான்டோ மோதினர். இதில் ஏமாற்றிய துருவ் நேகி 16-21, 13-21 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.
கலப்பு இரட்டையர் பிரிவு (17 வயது) 2வது சுற்றில் இந்தியாவின் அருள் முருகன் ரவி, ஸ்ரீனிதி நாராயணன் ஜோடி 21-14, 21-17 என்ற நேர் செட் கணக்கில் ராச்ப்ருங் ஏகாத், ஹதைதிப் மிஜாத் ஜோடியை வீழ்த்தியது.
ஆண்கள் இரட்டையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் திவ்யம் அரோரா, மயங்க் ராணா ஜோடி 17-21, 21-11, 19-21 என இந்தோனேஷியாவின் முகமது பகீர் அல் ஹனிப், முகமது ராஜேந்திர ஹுகோ பாஸ்டா ஜோடியிடம் தோல்வியடைந்தது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!