சென்னை: ஜெர்மனி செஸ் தொடரில் சோதனை என்ற பெயரில் இந்திய வீரர் நாராயணன், 'ஷூ' இல்லாமல் வெறுங்காலுடன் விளையாட அனுமதிக்கப்பட்டார்.
ஜெர்மனியில் பண்டஸ்லிகா செஸ் தொடர் நடக்கிறது. இந்தியா சார்பில் நாராயணன், ஹரி கிருஷ்ணா பங்கேற்கின்றனர். இதற்காக விளையாட்டு அரங்கிற்கு சென்ற போது 'மெட்டல் டிடெக்டர்' கொண்டு சோதனை செய்தனர். அப்போது 'டிடெக்டரில்' 'பீப்... பீப்.,' என சப்தம் வந்தது. இதனால் சந்தேகம் அடைந்த பாதுகாவலர்கள், நாராயணன் 'ஷூ', சாக்சை கழற்றினர். பின் வெறுங்காலுடன் போட்டியில் பங்கேற்க அனுமதித்தனர்.
ஆனால், தரையில் விரிக்கப்பட்டு இருந்த 'கார்பெட்டில்' இருந்து சப்தம் வந்தது பிறகு தான் தெரிந்தது.
இதற்கு முன்...: செஸ் போட்டியின் போது இதுபோல சோதனை நடப்பது சகஜம் தான். எனினும் 'போட்டிகளில் அமெரிக்க வீரர் ஹன்ஸ் நைமான் ஏமாற்றுகிறார் என உலக சாம்பியன் கார்ல்சன்,' தெரிவித்த பிறகு சோதனையில் தீவிரம் காட்டுகின்றனர்.
இதுகுறித்து நாராயணன் 25, கூறியது:
சோதனையின் போது சப்தம் ஏற்பட்டதால், 'ஷூக்களை' கழற்றுமாறு தெரிவித்தனர். மீண்டும் சோதித்த போது சப்தம் தர, இம்முறை 'சாக்சை' கழற்ற வேண்டும் என்றனர். மறுபடியும் சப்தம் ஏற்பட, வேறு வழியில்லாத நிலையில் உள்ளே செல்லுமாறு கூறினார். அரங்கின் மையப்பகுதியில் இப்படி நடந்ததால் அவமானமாக உணர்ந்தேன். அடுத்து வந்த வீரருக்கும் இதுபோன்ற அனுபவம் நேர்ந்தது. கடைசியில் தரை விரிப்பில் சப்தம் வர, பிறகு மன்னிப்பு கேட்டனர். போட்டி துவங்கும் சில நிமிடத்துக்கு முன் இப்படி நடந்தால் எப்படி. போட்டியில் ஏமாற்றுவதை தடுக்க, பல்வேறு கண்காணிப்புகள் தேவை தான். ஆனால் இது துல்லியமாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!