Load Image
Advertisement

வீணடிக்கும் ரிஷாப் பன்ட்: ஸ்ரீகாந்த் காட்டம்

புதுடில்லி: ''ரிஷாப் பன்ட், தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை வீணடிக்கிறார். இழந்த 'பார்மை' மீட்பதற்காக அடுத்து வரும் போட்டிகளில் இவருக்கு ஓய்வு வழங்கலாம்,'' என, ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி, மூன்று 'டி-20', மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. 'டி-20' தொடரை இந்தியா வென்றது. இவ்விரு தொடர்களுக்கு இந்திய அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள 'விக்கெட் கீப்பர் பேட்டர்' ரிஷாப் பன்ட் 25, பேட்டிங்கில் சொதப்பி வருகிறார். நியூசிலாந்துக்கு எதிரான 'டி-20' தொடரில் 2 போட்டியில் 17 ரன் மட்டும் எடுத்த இவர், 2 ஒருநாள் போட்டியில் 15 ரன் மட்டும் எடுத்துள்ளார். தவிர இவர், நடப்பு ஆண்டில் இதுவரை விளையாடிய 11 ஒருநாள் போட்டியில், 326 ரன் (சராசரி 40.75, 'ஸ்டிரைக் ரேட்' 98.19) மட்டும் எடுத்துள்ளார்.



ஆனால், மற்றொரு இந்திய 'விக்கெட் கீப்பர் பேட்டர்' சஞ்சு சாம்சனுக்கு போதிய வாய்ப்பு வழங்கப்படுவதில்லை என்ற புகார் எழுந்துள்ளது. இவர், இந்த ஆண்டு இதுவரை விளையாடிய 10 ஒருநாள் போட்டியில், 284 ரன் (சராசரி 71.00, 'ஸ்டிரைக் ரேட்' 105.57) எடுத்துள்ளார். சமீபத்தில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 36 ரன் (38 பந்து) விளாசினார்.\



இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் தேர்வுக்குழு தலைவர் ஸ்ரீகாந்த் கூறியது: ரிஷாப் பன்ட், தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை வீணடிப்பது ஏமாற்றமாக உள்ளது. அடுத்த ஆண்டு உலக கோப்பை தொடர் நடக்கவுள்ளது. ஏற்கனவே நிறைய பேர், பன்ட் சொதப்புகிறார் என பேசத் துவங்கிவிட்டனர். இதற்கேற்ப இவர், எரியும் தீயில் எண்ணெய் ஊற்றுவது போல செயல்படுகிறார். தனக்குத் தானே நெருக்கடி ஏற்படுத்திக் கொள்கிறார். இழந்த 'பார்மை' மீட்டு, எழுச்சி பெறுவதற்கு தேவையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இதற்காக இவர், சிறிது காலம் சர்வதேச போட்டிகளில் இருந்து விலகி இருந்தால் நல்லது. தேர்வுக்குழுவினர், அடுத்து வரும் போட்டிகளில் இவருக்கு வாய்ப்பு வழங்கிப் பார்ப்பதை விட, தற்போதே ஓய்வு வழங்கிவிடலாம்.



இவ்வாறு ஸ்ரீகாந்த் கூறினார்.

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement