தேனி: மிசோரம் அணிக்கு எதிரான 'கூச் பெஹார்' டிராபி லீக் போட்டியில் அசத்திய தமிழக அணி, இன்னிங்ஸ் மற்றும் 356 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் 19 வயதுக்குட்பட்டோருக்கான 'கூச் பெஹார்' டிராபி (நான்கு நாள் போட்டி) நடக்கிறது. தேனியில் உள்ள தமிழ்நாடு கிரிக்கெட் சங்க (டி.என்.சி.ஏ.,) அகாடமி மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் தமிழகம், மிசோரம் அணிகள் மோதின. முதல் இன்னிங்சில் தமிழகம் 545/3 ('டிக்ளேர்'), மிசோரம் 103/10 ('பாலோ-ஆன்') ரன் எடுத்தன. பின், 2வது இன்னிங்சை துவக்கிய மிசோரம் அணி, இரண்டாம் நாள் முடிவில் 86/8 ரன் எடுத்திருந்தது.
மூன்றாம் நாள் ஆட்டத்தில் தமிழகத்தின் ஆகாஷ் தேவ்குமார் பந்தில் துவாடா (0), இசாக் (0) அவுட்டாகினர். மொத்தம் 4 பந்து மட்டும் வீசப்பட்ட நிலையில், இரண்டாவது இன்னிங்சில் 86 ரன்னுக்கு சுருண்ட மிசோரம் அணி, இன்னிங்ஸ் தோல்வியடைந்தது. தமிழகம் சார்பில் விக்னேஷ், ஆகாஷ் தலா 4 விக்கெட் சாய்த்தனர்.
இன்னிங்ஸ் வெற்றி பெற்ற தமிழக அணிக்கு, ஒரு போனஸ் புள்ளி உட்பட 7 புள்ளிகள் கிடைத்தன. வரும் டிச. 3-6ல் திருநெல்வேலியில் நடக்கவுள்ள கடைசி லீக் போட்டியில் தமிழக அணி, திரிபுராவை எதிர்கொள்கிறது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!