ஜெருசலேம்: உலக செஸ் சாம்பியன்ஷிப் அரையிறுதிக்கு இந்திய அணி முன்னேறியது. காலிறுதியில் 'டை பிரேக்கரில்' பிரான்சை வென்றது.
இஸ்ரேலில், அணிகளுக்கு இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. மொத்தம் 12 அணிகள், இரு பிரிவுகளாக லீக் சுற்றில் பங்கேற்றன. இதில் இரண்டு வெற்றி, இரண்டு 'டிரா', ஒரு தோல்வி என 'பி' பிரிவில் 3வது இடம் பிடித்த இந்திய அணி காலிறுதிக்கு முன்னேறியது.
காலிறுதியில் இந்தியா, பிரான்ஸ் அணிகள் மோதின. இதன் முதல் செட்டை 3.0-1.0 எனக் கைப்பற்றிய இந்தியா, இரண்டாவது செட்டை 1.0-3.0 என இழந்தது. இதனையடுத்து வெற்றியாளரை முடிவு செய்ய போட்டி 'டை பிரேக்கருக்கு' சென்றது.
இதில் அசத்திய இந்திய அணி 2.5 - 1.5 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது. இந்தியா சார்பில் நிகால் சரின், நாராயணன் வெற்றி பெற்றனர். மற்றொரு இந்திய வீரர் விதித் சந்தோஷ் குஜ்ராத்தி, தனது ஆட்டத்தை 'டிரா' செய்தார். இந்தியாவின் சசிகிரண் தோல்வியை தழுவினார்.
மற்ற காலிறுதியில் சீனா (எதிர்: போலந்து), ஸ்பெயின் (எதிர்: அஜர்பெய்ஜான்), உஸ்பெகிஸ்தான் (எதிர்: உக்ரைன்) அணிகள் வெற்றி பெற்றன. அரையிறுதியில் இந்தியா-உஸ்பெகிஸ்தான், சீனா-ஸ்பெயின் அணிகள் மோதுகின்றன.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!