ஐதராபாத்: புரோ கபடி லீக் போட்டியில் அசத்திய தமிழ் தலைவாஸ் அணி 35-30 என்ற கணக்கில் பெங்கால் அணியை வீழ்த்தியது.
இந்தியாவில், புரோ கபடி லீக் 9வது சீசன் நடக்கிறது. ஐதராபாத்தில் நடந்த லீக் போட்டியில் தமிழ் தலைவாஸ், பெங்கால் அணிகள் மோதின. துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய தமிழ் தலைவாஸ் அணியினர், பெங்கால் வீரர்களை 'ஆல்-அவுட்' செய்தனர். முதல் பாதி முடிவில் தமிழ் தலைவாஸ் அணி 21-13 என முன்னிலையில் இருந்தது.
இரண்டாவது பாதியில் பெங்கால் அணியினர் ஓரளவு எழுச்சி கண்ட போதும் வெற்றிக்கு உதவவில்லை. ஆட்டநேர முடிவில் தமிழ் தலைவாஸ் அணி 35-30 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. தமிழ் தலைவாஸ் அணிக்கு நரேந்தர் 13, அஜின்கியா பவார் 7, சாகர் 5 புள்ளி பெற்றுத் தந்தனர். பெங்கால் சார்பில் மணிந்தர் சிங் 15 புள்ளி பெற்றார்.
இதுவரை விளையாடிய 15 போட்டியில், 6 வெற்றி, 6 தோல்வி, 3 'டை' என 43 புள்ளிகளுடன் தமிழ் தலைவாஸ் அணி 8வது இடத்தில் உள்ளது. ஆறாவது தோல்வியை பெற்ற பெங்கால் அணி (7 வெற்றி, 2 'டை') 43 புள்ளிகளுடன் 7வது இடத்தில் உள்ளது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!