புதுடில்லி: 'வேர்ல்டு டூர் பைனல்ஸ்' பாட்மின்டன் தொடரில் இருந்து காயம் காரணமாக இந்தியாவின் சிந்து விலகினார்.
சீனாவில், வரும் டிச. 14-18ல் 'வேர்ல்டு டூர் பைனல்ஸ்' பாட்மின்டன் தொடர் நடக்க உள்ளது. உலகின் 'டாப்-8' நட்சத்திரங்கள் மட்டும் பங்கேற்கும் இத்தொடருக்கு இந்தியா சார்பில் இதுவரை சிந்து, பிரனாய் மட்டும் தகுதி பெற்றுள்ளனர்.
இந்த ஆண்டு நடந்த பர்மிங்காம் காமன்வெல்த் விளையாட்டின் போது சிந்துவின் கணுக்காலில் காயம் ஏற்பட்டது. இதனால் உலக சாம்பியன்ஷிப் உள்ளிட்ட தொடர்களில் இருந்து விலகினார். சமீபத்தில் பயிற்சியை துவக்கிய இவர், 'வேர்ல்டு டூர் பைனல்ஸ்' தொடரில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காயம் முழுமையாக குணமடையாத காரணத்தினால் இத்தொடரில் இருந்து விலகுவதாக, இந்திய பாட்மின்டன் சங்கத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
இதுகுறித்து சிந்து கூறுகையில், ''நான் பயிற்சியை துவக்கிய போதும், காயத்தில் இருந்து முழுமையாக தேறிவிட்டதாக உணரவில்லை. விரைவில் போட்டிக்கு திரும்புவதற்கான முழு உடற்தகுதி பெற்றுவிடுவேன் என நம்புகிறேன். எனது கவனம் முழுவதும், பாரிஸ் ஒலிம்பிக்கில் (2024) பங்கேற்று தங்கம் வெல்வதில் மட்டுமே உள்ளது,'' என்றார்.
சிந்து, 2018ல் முதன்முறையாக நடந்த 'வேர்ல்டு டூர் பைனல்ஸ்' தொடரில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!