Load Image
dinamalar telegram
Advertisement

ஐ.எஸ்.எல்., கால்பந்து திருவிழா * எழுச்சி பெறுமா சென்னை அணி

கொச்சி: ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடரின் 9 வது சீசன் இன்று கொச்சியில் துவங்குகிறது. முதல் போட்டியில் ஈஸ்ட் பெங்கால், கேரளா அணிகள் மோதுகின்றன. சென்னை அணி, கோல்கட்டாவை சந்திக்கிறது.

இந்தியாவில் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து (ஐ.எஸ்.எல்.,) தொடர் இந்தியாவில் நடத்தப்படுகிறது. சென்னை, கோல்கட்டா, மும்பை உட்பட 11 அணிகள் பங்கேற்கின்றன. இதன் 9 வது சீசன் இன்று கொச்சியில் துவங்குகிறது. கடந்த இரு சீசன்கள் கொரோனா காரணமாக கோவாவில் மட்டும் நடந்தன.

இம்முறை அக். 7 முதல் 2023, பிப். 26 வரை லீக் போட்டிகள் மீண்டும் உள்ளூர், வெளியூர் அடிப்படையில் நடக்க உள்ளன.

மீளுமா சென்னை

சென்னை அணி 2015, 2018 என இருமுறை கோப்பை வென்றது. கடந்த இரு சீசனில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. மொத்தம் மோதிய 40 போட்டிகளில் 8ல் மட்டும் வென்று, இரு முறையும் 8வது இடம் பிடித்தது. இம்முறை சென்னை அணி சொந்த மண்ணில் இம்முறை 10 போட்டிகளில் பங்கேற்க உள்ளதால் மீண்டு வரும் என நம்பலாம்.

முதல் போட்டியில் அக். 10ல் கோல்கட்டாவில் களமிறங்கும் சென்னை அணி, கோல்கட்டா மோகன்பகானை சந்திக்கிறது. அக்., 14ல் சென்னை அணி, சொந்தமண்ணில் பெங்களூரூவை சந்திக்கும். கேப்டனாக அனிருத் தபா தொடர்கிறார்.

பயிற்சியாளராக ஜெர்மனி முன்னாள் வீரர் தாமஸ் பிரடரிக் 47, செயல்பட உள்ளார். சமீபத்திய துாரந்த் கோப்பை தொடரில் 3 கோல் அடித்த பீட்டர் சிலிஸ்கோவிச் (குரோஷியா), கரிகாரி (கானா), ஜூலியஸ் டக்கர் (ஜெர்மனி), வாபா (ஈரான்) என வெளிநாட்டு வீரர்கள் சென்னை அணிக்கு நம்பிக்கை தரவுள்ளனர்.

ஆகாஷ் சங்வான், நின்தோயின்கன்பா மீட்டெய் என இளம் வீரர்களுடன், முகமது ரபிக், அலெக்சாண்டர் ரொமாரியோ, சவுரவ் தாஸ் அணியில் உள்ளனர்.

சுனில் செத்ரி நம்பிக்கை

இந்திய அணி கேப்டன், 'சீனியர்' சுனில் செத்ரி தலைமையில் பெங்களூரு அணி, மீண்டும் கோப்பை கனவுடன் களமிறங்குகிறது. கடந்த 2019ல் கோப்பை வென்ற இந்த அணிக்கு, சமீபத்திய துாரந்த் கோப்பை தொடரில் சாதித்தது உற்சாகம் தரும். தவிர கோல்கட்டா அணிக்காக விளையாடிய நட்சத்திர வீரர் ராய் கிருஷ்ணா, பெங்களூரு அணியில் இணைந்தது கூடுதல் பலம்.

நான்காவது கோப்பை

ஐ.எஸ்.எல்., தொடரில் அதிக கோப்பை வென்ற அணி கோல்கட்டா மோகன்பகான். 2014, 2016, 2020 என மூன்று முறை சாதித்த இந்த அணி, இம்முறை பிரீதம் கோடல் தலைமையில் களமிறங்குகிறது. இந்திய அணியின் ஆஷிக் குருனியன், கொலாக்கோவுடன், புளோரன்டின் போக்பா (கினியா), பிரான்சின் ஹியுகோ பலம் சேர்க்கின்றனர்.

தலா ஒரு கோப்பை வென்ற மும்பை, கோவா, நடப்பு சாம்பியன் ஐதராபாத் அணிகளும் கோப்பைக்கான போட்டியில் உள்ளன. தவிர மூன்று முறை பைனலுக்கு சென்ற போதும் ஒரு கோப்பை கூட கைப்பற்றாத கேரளா (2014, 2016, 2022), வடகிழக்கு யுனைடெட், ஒடிசா, புனே அணிகளும் பந்தயத்தில் உள்ளன.

கொச்சியில் நடக்கும் முதல் போட்டியில் கடந்த சீசனில் பைனலில் பங்கேற்ற கேரளா, ஈஸ்ட் பெங்கால் அணியை சந்திக்கவுள்ளது.



ரசிகர்களுக்கு அனுமதி

கொரோனா காரணமாக கடந்த இரு சீசனில் ரசிகர்கள் அனுமதிக்கப்படவில்லை. தற்போது ரசிகர்கள் வழக்கம் போல போட்டிகளை நேரில் கண்டு ரசிக்கலாம்.



இதுவரை சாம்பியன்

ஐ.எஸ்.எல்., கால்பந்து அரங்கில் கோல்கட்டா அணி அதிகபட்சமாக 3 முறை (2014, 2016, 2020) கோப்பை வென்றது.

* சென்னை அணி (2014, 2018) இரண்டு கோப்பை கைப்பற்றியது.

* பெங்களூரு (2019), மும்பை (2021), ஐதாரபாத் (2022) அணிகள் தலா ஒரு முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றின.



10 போட்டிகள்

சென்னை அணி, சொந்தமண்ணில் 10 போட்டிகளில் பங்கேற்க உள்ளது.

இதன் விபரம்:

தேதி எதிரணி

அக். 14 பெங்களூரூ

அக். 21 கோவா

நவ. 12 மும்பை

நவ. 19 ஜாம்ஷெட்பூர்

டிச. 3 ஐதராபாத்

டிச. 19 கேரளா

ஜன. 21 மோகன்பகான்

2023

பிப். 2 ஒடிசா

பிப். 12 ஈஸ்ட் பெங்கால்

பிப். 24 வடகிழக்கு யுனைடெட்



புதிய முறை

ஐ.எஸ்.எல்., கால்பந்தில் புதிய 'பிளே ஆப்' அறிமுகம் ஆகிறது. புள்ளிப் பட்டியலில் 'டாப்-2' இடம் பெறும் அணிகள் நேரடியாக அரையிறுதிக்கு முன்னேறும். 3 முதல் 6 வரையிலான அணிகள் 'எலிமினேட்டர்' போட்டியில் (3-6, 4-5வது அணிகள்) மோதும். இதில் வெல்லும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.



53

அதிக கோல் அடித்த வீரர்கள் பட்டியலில் ஐதராபாத் வீரர் ஆக்பெசே முதலிடத்தில் உள்ளார். இவர், 77 போட்டியில், 53 கோல் அடித்துள்ளார். அடுத்த இடத்தில் பெங்களூருவின் சுனில் செத்ரி (51 கோல்) உள்ளார்.



267

அதிக கோல் அடித்த அணிகளுக்கான வரிசையில் கோவா அணி தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. இதுவரை 150 போட்டியில், 267 கோல் அடித்துள்ளது. இதில் சென்னை (199 கோல்), மும்பை (198), கேரளா (178) அணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement