Load Image
dinamalar telegram
Advertisement

லக்னோ...இந்தியாவுக்கு 'நோ': சாம்சன் விளாசல் வீண்

லக்னோ: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஏமாற்றிய இந்திய அணி 9 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. கடைசி ஓவர் வரை போராடிய சஞ்சு சாம்சன் விளாசல் வீணானது.

இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. லக்னோவில் முதல் போட்டி நடந்தது. இந்திய அணியில் ருதுராஜ் கெய்க்வாட், ரவி பிஷ்னோய் அறிமுகமாகினர். மழையால், இரண்டு மணி நேரத்திற்கு மேல் போட்டி துவங்குவதில் தாமதமானது. மழை நின்ற பின், தலா 40 ஓவர் கொண்ட போட்டியாக நடத்தப்பட்டது. 'டாஸ்' வென்ற இந்திய கேப்டன் ஷிகர் தவான் 'பீல்டிங்' தேர்வு செய்தார்.



தென் ஆப்ரிக்க அணிக்கு ஜன்னேமன் மலான், குயின்டன் டி காக் ஜோடி துவக்கம் தந்தது. பிஷ்னோய் வீசிய 10வது ஓவரில் 2 பவுண்டரி அடித்தார் குயின்டன். முதல் விக்கெட்டுக்கு 49 ரன் சேர்த்த போது ஷர்துல் தாகூர் 'வேகத்தில்' மலான் (22) வெளியேறினார். அடுத்து வந்த கேப்டன் டெம்பா பவுமா (8), ஷர்துல் பந்தில் போல்டானார். குல்தீப் யாதவ் 'சுழலில்' மார்கரம் (0) சிக்கினார். நிதானமாக விளையாடிய குயின்டன் (48), பிஷ்னோயிடம் சரணடைந்தார்.



பின் இணைந்த ஹெயின்ரிச் கிளாசன், டேவிட் மில்லர் ஜோடி இந்திய பந்துவீச்சை எளிதாக சமாளித்து விக்கெட் சரிவிலிருந்து அணியை மீட்டது. குல்தீப் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய மில்லர், பிஷ்னோய் பந்தில் ஒரு சிக்சர் விளாசினார். பிஷ்னோய் பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய கிளாசன், குல்தீப் பந்தை சிக்சருக்கு பறக்கவிட்டார். இவர்களை பிரிக்க முடியாமல் இந்திய பவுலர்கள் திணறினர்.



பொறுப்பாக ஆடிய மில்லர், ஒருநாள் போட்டி அரங்கில் தனது 18வது அரைசதம் அடித்தார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த கிளாசன், ஒருநாள் போட்டியில் தனது 4வது அரைசதம் விளாசினார். அவேஷ் கான் வீசிய 38வது ஓவரில் தொடர்ச்சியாக ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசிய மில்லர், சிராஜ் வீசிய கடைசி ஓவரில் ஒரு சிக்சர் அடித்தார்.



தென் ஆப்ரிக்க அணி 40 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 249 ரன் எடுத்தது. கிளாசன் (74), மில்லர் (75) அவுட்டாகாமல் இருந்தனர்.

இந்தியா சார்பில் ஷர்துல் தாகூர் 2 விக்கெட் கைப்பற்றினார்.



ஸ்ரேயாஸ் அரைசதம்: சவாலான இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு சுப்மன் கில் (4), கேப்டன் தவான் (4) ஏமாற்றினர். ருதுராஜ் கெய்க்வாட் (19), இஷான் கிஷான் (20) நிலைக்கவில்லை. பின் இணைந்த ஸ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன் ஜோடி நிதானமாக விளையாடியது. ஷாம்சி வீசிய 21வது ஓவரில் 'ஹாட்ரிக்' பவுண்டரி அடித்த ஸ்ரேயாஸ், 33 பந்தில் அரைசதம் எட்டினார். இவர், 50 ரன்னில் ஆட்டமிழந்தார்.



சாம்சன் நம்பிக்கை: பார்னல் வீசிய 33வது ஓவரில் 2 பவுண்டரி அடித்த சாம்சன், லுங்கிடி பந்தை சிக்சருக்கு அனுப்பினார். பொறுப்பாக ஆடிய இவர், தன்பங்கிற்கு அரைசதம் அடித்தார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த ஷர்துல் தாகூர், ரபாடா வீசிய 37வது ஓவரில் 3 பவுண்டரி விளாசினார். ஆறாவது விக்கெட்டுக்கு 93 ரன் சேர்த்த போது லுங்கிடி பந்தில் ஷர்துல் (33) அவுட்டானார். அடுத்து வந்த குல்தீப் யாதவ் (0), அவேஷ் கான் (3) நிலைக்கவில்லை.



கடைசி ஓவரில் வெற்றிக்கு 30 ரன் தேவைப்பட்டன. ஷாம்சி வீசிய 40வது ஓவரில் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் உட்பட 20 ரன் மட்டும் கிடைத்தது. இந்திய அணி 40 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 240 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. சாம்சன் (86), பிஷ்னோய் (4) அவுட்டாகாமல் இருந்தனர்.





பிரிட்டோரியஸ் விலகல்

தென் ஆப்ரிக்க 'ஆல்-ரவுண்டர்' டுவைன் பிரிட்டோரியஸ். இந்தியாவுக்கு எதிரான 3வது 'டி-20' போட்டியில் பங்கேற்ற இவரது இடது கை கட்டைவிரலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனையடுத்து இந்தியாவுக்கு எதிரான ஒருநாள், ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள 'டி-20' உலக கோப்பை தொடர்களில் இருந்து விலகினார். கடந்த உலக கோப்பையில் அதிக விக்கெட் கைப்பற்றிய தென் ஆப்ரிக்க பவுலர்கள் பட்டியலில் முதலிடத்தை நார்ட்ஜேவுடன் (தலா 9 விக்கெட்) பகிர்ந்து கொண்டார். இவருக்கு பதிலாக மார்கோ ஜான்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஏற்கனவே தென் ஆப்ரிக்க 'மிடில்-ஆர்டர்' பேட்டர் வான் டெர் துசென் விரலில் ஏற்பட்ட காயத்தால் உலக கோப்பையில் இருந்து விலகினார்.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement