Load Image
dinamalar telegram
Advertisement

இந்திய அணி அசத்தல் வெற்றி: ராகுல், சூர்யகுமார் அரைசதம் விளாசல்

திருவனந்தபுரம்: முதல் 'டி-20' போட்டியில் அசத்திய இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது. அபாரமாக ஆடிய ராகுல், சூர்யகுமார் அரைசதம் விளாசினர். வேகத்தில் மிரட்டிய அர்ஷ்தீப் சிங், தீபக் சகார், ஹர்ஷல் படேல் விக்கெட் வேட்டை நடத்தினர்.

இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி, மூன்று போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்பீல்டு சர்வதேச மைதானத்தில் முதல் போட்டி நடந்தது. ஹர்திக் பாண்ட்யா, புவனேஷ்வர் குமாருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு பதிலாக ரிஷாப் பன்ட், அர்ஷ்தீப் சிங் இடம் பிடித்தனர். யுவேந்திர சகால், பும்ராவுக்கு (முதுகு வலி) பதிலாக தீபக் சகார், தமிழக 'சுழல்' வீரர் அஷ்வின் அணிக்கு திரும்பினர். 'டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா 'பீல்டிங்' தேர்வு செய்தார்.



அதிர்ச்சி துவக்கம்: முதலில் களமிறங்கிய தென் ஆப்ரிக்க அணியை இந்திய 'வேகங்கள்' போட்டுத் தாக்கினர். தீபக் சகார் 'தில்லாக' வீசிய முதல் ஓவரின் கடைசி பந்தில் கேப்டன் டெம்பா பவுமா (0) போல்டானார். அர்ஷ்தீப் சிங் வீசிய இரண்டாவது ஓவரின் 2வது பந்தில் குயின்டன் டி காக் (1) போல்டானார்.

அடுத்து வந்த மார்க்ரம், இந்த ஓவரின் 4வது பந்தை பவுண்டரிக்கு அனுப்பி தனது ரன் கணக்கை துவக்கினார். 'தீயாக' பந்துவீசிய அர்ஷ்தீப், கடைசி இரண்டு பந்தில் ரிலீ ரோசோவ் (0), டேவிட் மில்லரை (0) வெளியேற்றினார். தென் ஆப்ரிக்க அணி 9 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது.



மார்க்ரம் நிதானம்: பின் இணைந்த மார்க்ரம், பார்னெல் ஜோடி நிதானமாக விளையாடியது. தீபக் சகார், அர்ஷ்தீப் சிங் பந்தில் தலா ஒரு பவுண்டரி அடித்த மார்க்ரம், ஹர்ஷல் படேல் பந்தில் ஒரு சிக்சர் பறக்கவிட்டார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த பார்னெல், தீபக் சகார் பந்தில் ஒரு சிக்சர் விளாசினார். ஆறாவது விக்கெட்டுக்கு 32 ரன் சேர்த்த போது ஹர்ஷல் படேல் பந்தில் மார்க்ரம் (25) ஆட்டமிழந்தார்.



மஹராஜ் ஆறுதல்: ஹர்ஷல் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய கேஷவ் மஹராஜ், தீபக் சகார் பந்தில் ஒரு சிக்சர் அடித்தார். பொறுப்பாக ஆடிய பார்னெல் (24), அக்சர் படேல் 'சுழலில்' சிக்கினார். அக்சர், ஹர்ஷல் படேல் தலா ஒரு பவுண்டரி அடித்த மஹராஜ், அர்ஷ்தீப் சிங் வீசிய 19வது ஓவரில் தொடர்ச்சியாக ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசினார். எட்டாவது விக்கெட்டுக்கு 33 ரன் சேர்த்த போது ஹர்ஷல் படேல் 'வேகத்தில்' மஹராஜ் (41) போல்டானார்.



தென் ஆப்ரிக்க அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 106 ரன் எடுத்தது. ரபாடா (6), நார்ட்ஜே (2) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் அர்ஷ்தீப் சிங் 3, தீபக் சகார், ஹர்ஷல் படேல் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.



சூப்பர் ஜோடி: சுலப இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா (0), விராத் கோஹ்லி (3) ஏமாற்றினர். பின் இணைந்த லோகேஷ் ராகுல், சூர்யகுமார் யாதவ் ஜோடி தென் ஆப்ரிக்க பந்துவீச்சை எளிதாக சமாளித்தது. நார்ட்ஜே வீசிய 7வது ஓவரில் தொடர்ச்சியாக 2 சிக்சர் பறக்கவிட்ட சூர்யகுமார், மஹராஜ் பந்தில் ஒரு சிக்சர் விளாசினார். மறுமுனையில் அசத்திய ராகுல், நார்ட்ஜே, ஷாம்சி பந்துகளை சிக்சருக்கு அனுப்பினார். ரபாடா வீசிய 16வது ஓவரில் 2 பவுண்டரி விரட்டிய சூர்யகுமார், 33 பந்தில் அரைசதம் எட்டினார். ஷாம்சி பந்தை சிக்சருக்கு அனுப்பிய ராகுல், அரைசதம் கடந்து வெற்றியை உறுதி செய்தார்.



இந்திய அணி 16.4 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 110 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ராகுல் (51), சூர்யகுமார் (50) அவுட்டாகாமல் இருந்தனர். இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றது.





15 பந்து

பவுலிங்கில் அசத்திய இந்திய அணி, முதல் 15 பந்தில் (2.3 ஓவர்) தென் ஆப்ரிக்காவின் 5 விக்கெட்டை சாய்த்தது. இதன்மூலம் சர்வதேச 'டி-20' அரங்கில் எதிரணியின் முதல் 5 விக்கெட்டை குறைந்த பந்தில் கைப்பற்றியது. இதற்கு முன், 2016ல் இலங்கைக்கு எதிராக முதல் 31 பந்தில் (5.1 ஓவர்) 5 விக்கெட் சாய்த்திருந்தது.



9 ரன்

தென் ஆப்ரிக்க அணி 9 ரன்னுக்கு 5 விக்கெட்டை பறிகொடுத்தது. இதன்மூலம் சர்வதேச 'டி-20' அரங்கில் குறைந்த ரன்னில் 5 விக்கெட்டை இழந்தது. இதற்கு முன், 2007ல் போர்ட் எலிசபெத்தில் நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான போட்டியில் 10 ரன்னுக்கு 5 விக்கெட்டை பறிகொடுத்திருந்தது.



106 ரன்

பேட்டிங்கில் ஏமாற்றிய தென் ஆப்ரிக்க அணி (106/8, 20 ஓவர்), சர்வதேச 'டி-20' அரங்கில் இந்தியாவுக்கு எதிராக தனது 2வது குறைந்தபட்ச ஸ்கோரை பெற்றது. கடந்த ஜூன் 17ல் ராஜ்கோட்டில் நடந்த போட்டியில் 16.5 ஓவரில் 87 ரன்னுக்கு சுருண்டது, இந்தியாவுக்கு எதிராக தென் ஆப்ரிக்காவின் குறைந்தபட்ச ஸ்கோராக உள்ளது.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement