ராய்பூர்: சட்டீஸ்கர் சர்வதேச சேலஞ்ச் பாட்மின்டன் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை தஸ்னிம் மிர் சாம்பியன் பட்டம் வென்றார்.
சட்டீஸ்கரில், சர்வதேச சேலஞ்ச் பாட்மின்டன் தொடர் நடந்தது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் இந்தியாவின் தஸ்னிம் மிர், இமாத் பரூக்கி சாமியா மோதினர். முதல் செட்டை 14-21 என இழந்த தஸ்னிம், பின் எழுச்சி கண்டு இரண்டாவது செட்டை 21-17 எனக் கைப்பற்றினார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டில் மீண்டும் அசத்திய இவர், 21-11 என வென்றார். ஒரு மணி நேரம், 2 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய தஸ்னிம் மிர் 14-21, 21-17, 21-11 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் இந்தியாவின் பிரியன்ஷு ரஜாவத், சுபாங்கர் மோதினர். மொத்தம் 25 நிமிடம் நீடித்த போட்டியில் அபாரமாக ஆடிய பிரியன்ஷு 21-13, 21-11 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.
ஆண்கள் இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் இஷான் பட்னாகர், சாய் பிரதீக் ஜோடி 17-21, 21-15, 23-21 என சகநாட்டை சேர்ந்த கிருஷ்ண பிரசாத், விஷ்ணுவர்தன் பஞ்சாலா ஜோடியை வீழ்த்தியது.
கலப்பு இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் ரோஹன் கபூர், சிக்கி ரெட்டி ஜோடி 22-20, 23-21 என தாய்லாந்தின் ராட்சபோல் மக்கசாசித்தோர்ன், சாசினி கோரேபாப் ஜோடியை வென்றது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!