ஒட்டாவா: கனடா சர்வதேச 'பாரா' பாட்மின்டனில் இந்தியாவின் மானஷி, மணிஷா தங்கம் வென்றனர்.
கனடாவில், மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச 'பாரா' பாட்மின்டன் தொடர் நடந்தது. இதில் பெண்கள் ஒற்றையர் 'எஸ்.யு. 5' பைனலில் இந்தியாவின் மணிஷா ராமதாஸ், ஜப்பானின் அகிகோ சுகினோ மோதினர். அபாரமாக ஆடிய மணிஷா 27-25, 21-9 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.
பெண்கள் ஒற்றையர் 'எஸ்.எல். 3' பிரிவு லீக் சுற்றில் அசத்திய இந்தியாவின் மானஷி ஜோஷி, சகவீராங்கனை பருல் பார்மர் (21-14, 21-19), பிரான்சின் கோரலின் பெர்கெரான் (21-14, 21-17), ஜப்பானின் நோரிகோ இடோ (21-14, 21-10), உக்ரைனின் ஒக்சனா கோசினா (21-18, 15-21, 22-20) ஆகியோரை வீழ்த்தி முதலிடம் பிடித்தார். இதன்மூலம் மானஷி, இந்த சீசனில் தனது 4வது தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.
ஆண்கள் ஒற்றையர் 'எஸ்.எல். 3' பிரிவு பைனலில் இந்தியாவின் பிரமோத் பகத் 14-21, 21-9, 15-21 என பிரிட்டனின் டேனியல் பெத்தேலிடம் தோல்வியடைந்து வெள்ளி வென்றார்.
இத்தொடரில் இந்தியாவுக்கு 2 தங்கம் உட்பட 9 பதக்கம் கிடைத்தது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!