புதுடில்லி: ''நம்மால் முடியும் என்ற எண்ணமே இந்தியாவின் புதிய பலமாக உள்ளது,''என பிரதமர் மோடி தெரிவித்தார்.
தாய்லாந்தில் தாமஸ்(ஆண்கள்), உபர்(பெண்கள்) கோப்பைக்கான பாட்மின்டன் தொடர் நடந்தது. இதில், இந்திய பெண்கள் சோபிக்கவில்லை. அதே நேரம் தாமஸ் கோப்பை பைனலில் அசத்திய இந்திய ஆண்கள் அணி, இந்தோனேஷியாவை வீழ்த்தியது. 73 ஆண்டு கால தாமஸ் கோப்பை வரலாற்றில் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது. லக்சயா சென், ஸ்ரீகாந்த், பிரனாய், சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி உள்ளிட்ட இந்திய வீரர்கள் வரலாற்று நாயகர்களாக ஜொலித்தனர். தாயகம் திரும்பிய இவர்களை, டில்லியில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்து கவுரவப்படுத்தினார் பிரதமர் மோடி. பதக்கம் வெல்ல தவறிய வீராங்கனைகளையும் அழைத்து பாராட்டினார். பின் வீரர், வீராங்கனைகளுடன் கலந்துரையாடினார்.
இந்திய அணியை திறம்பட வழிநடத்திய ஸ்ரீகாந்தை பாராட்டிய பிரதமர் மோடி, அவரது அனுபவம் குறித்து கேட்டார். இதற்கு ஸ்ரீகாந்த்,''ஒவ்வொரு வீரரும் சிறப்பாக விளையாடியதால், கேப்டனாக எனது பணி எளிதானது. அனைவரையம் ஒருங்கிணைத்தேன். போட்டிக்கான வியூகம் பற்றி அடிக்கடி விவாதித்தோம். கோப்பை வென்ற உடன் அலைபேசி வாயிலாக பாராட்டினீர்கள். உங்களுடன் நேரில் பேசும் பாக்கியம் கிடைத்தது பெரிய கவுரவம். எங்களுக்கு பிரதமரின் ஆதரவு உள்ளது என பெருமையாக சொல்வோம்,''என்றார்.
ஹரியானாவை சேர்ந்த 14 வயது இளம் வீராங்கனை உன்னத்தி ஹூடாவிடம்,''ஹரியானா மண்ணில் என்ன விசேஷம் இருக்கிறது. தொடர்ந்து சிறந்த வீரர், வீராங்கனைகள் உருவாகின்றனரே,'' என மோடி கேட்டார். உன்னத்தி கூறுகையில்,''பதக்கம் வென்றவர், வெல்லாதவர் என நீங்கள் பாகுபாடு பார்ப்பதில்லை. அனைவரையும் அழைத்து பாராட்டுகிறீர்கள். இது என்னை மிகவும் கவர்ந்தது. அடுத்த முறை பெண்கள் அணியினரும் கோப்பை வெல்வோம்,''என்றார்.
பின் பிரதமர் மோடி கூறுகையில்,''சாதனை படைத்த இந்திய அணிக்கு தேசத்தின் சார்பில் பாராட்டு தெரிவிக்கிறேன். தாமஸ் கோப்பை வென்றது சிறிய விஷயம் அல்ல. நீங்கள் பெரிய சாதனை படைத்துள்ளீர்கள். ஒருகாலத்தில் இது போன்ற தொடர்களில் நாம் பின்தங்கியிருந்தோம். இப்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது. மனஉறுதியுடன் சாதிக்கின்றனர். 'ஆம்... நம்மால் முடியும்' என்ற எண்ணமே இந்தியாவின் புது பலமாக உள்ளது. விளையாட்டு நட்சத்திரங்களுக்கு அரசு அனைத்து உதவிகளையும் வழங்கும். ஆட்டத்தின் பல்வேறு விஷயங்களை வீரர், வீராங்கனைகள் பகிர்ந்து கொண்டனர். பாட்மின்டனை கடந்து உள்ள வாழ்க்கை பற்றியும் பேசினர். இவர்களது சாதனையை நினைத்து இந்தியா பெருமை கொள்கிறது,''என்றார்.
தொடரும் கவனம்
தேசிய பாட்மின்டன் பயிற்சியாளர் கோபிசந்த் கூறுகையில்,''கடந்த 8 ஆண்டுகளாக இந்தியா பங்கேற்கும் விளையாட்டு போட்டிகள், வீரர், வீராங்கனைகளின் செயல்பாடுகளை பிரதமர் மோடி கூர்ந்து கவனிக்கிறார். பதக்கம் வென்றவர், வெல்லாதவர் என அனைவரையும் தொடர்பு கொண்டு ஊக்கம் தருகிறார்,''என்றார்.
நீங்கா நினைவுகள்...
டென்மார்க் அணியின் முன்னாள் வீரரும் இந்திய இரட்டையர் பிரிவின் பயிற்சியாளருமான மத்தியாஸ் போ கூறுகையில்,''நான் வீரராக நிறைய பதக்கம் வென்றிருக்கிறேன். அப்போது எங்களது பிரதமர் அழைத்து பாராட்டியது கிடையாது. இந்தியாவில் பிரதமரே நேரில் அழைத்து பாராட்டுகிறார். இந்த நினைவுகள் வீரர், வீராங்கனைகளின் நெஞ்சங்களில் என்றும் நிலைத்திருக்கும். தனிப்பட்ட முறையில் பிரதமர் மோடியை சந்தித்தது சிறந்த அனுபவமாக அமைந்தது,''என்றார்.
'மிட்டாய்' பரிசு
தாமஸ் கோப்பை ஒற்றையர் பிரிவில் அசத்தியவர் லக்சயா சென். இவர் உத்தரகண்ட்டில் உள்ள அல்மோராவில் பிறந்தவர். இங்கு 'பால் மிட்டாய்' எனும் இனிப்பு வகை பிரபலம். இதனை அறிந்த பிரதமர் மோடி, தன்னை சந்திக்க 'அல்மோரா பால் மிட்டாய்' உடன் வரும்படி கேட்டுக் கொண்டார். இந்த மிட்டாயை வழங்கி, மோடியின் ஆசையை நிறைவேற்றினார் லக்சயா சென்.
இது குறித்து லக்சயா கூறுகையில்,''சின்ன சின்ன விஷயங்களில் கூட பிரதமர் மோடி கவனம் செலுத்துகிறார். எனது தாத்தா, அப்பா எல்லோரும் பாட்மின்டன் விளையாடுவதை தெரிந்து வைத்துள்ளார். தாமஸ் கோப்பை வென்றதும் அலைபேசியில் பாராட்டினார். அப்போது 'அல்மோரா பால் மிட்டாய்' வாங்கி வரும்படி கூறினார். அவருக்காக 'பால் மிட்டாய்' வாங்கி கொடுத்தேன். மீண்டும் சந்திப்பதற்காக தொடர்ந்து பதக்கம் வெல்வேன். அவருக்கு தொடர்ந்து 'பால் மிட்டாய்' வாங்கி கொடுப்பேன்,''என்றார்.
பிரதமர் மோடி கூறுகையில்,''எனது சிறிய வேண்டுகோளை மறக்காமல் நிறைவேற்றியுள்ளார் லக்சயா சென். 'பால் மிட்டாய்' வழங்கியதற்கு நன்றி,''என்றார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!