பாங்காக்: தாய்லாந்து ஓபன் பாட்மின்டன் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு இந்திய வீராங்கனை சிந்து முன்னேறினார்.
தாய்லாந்தில், சர்வதேச பாட்மின்டன் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் சிந்து, தென் கொரியாவின் யு ஜின் சிம் மோதினர். முதல் செட்டை 21-16 எனக் கைப்பற்றிய சிந்து, இரண்டாவது செட்டை 21-13 என தன்வசப்படுத்தினார். மொத்தம் 37 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய சிந்து 21-16, 21-13 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தார். இதில், ஜப்பானின் அகானே யமாகுச்சியை எதிர்கொள்கிறார்.
மற்றொரு போட்டியில் இந்திய வீராங்கனை மாளவிகா, டென்மார்க்கின் லைன் கிறிஸ்டோர்பர்சன் மோதினர். மொத்தம் 48 நிமிடம் நீடித்த போட்டியில் ஏமாற்றிய மாளவிகா 21-16, 14-21, 14-21 என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.
ஸ்ரீகாந்த் விலகல்: ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், அயர்லாந்தின் என்ஹாட் நுயென் மோத இருந்தனர். கடைசி நேரத்தில் ஸ்ரீகாந்த் விலகினார். இதற்கான காரணம் தெரியவில்லை. இதனையடுத்து அயர்லாந்து வீரர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு காலிறுதிக்கு தகுதி பெற்றார்.
பெண்கள் இரட்டையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் அஷ்வினி பாட், ஷிகா கவுதம் ஜோடி 19-21, 16-21 என ஜப்பானின் மட்சுமோடோ, நாகாஹரா ஜோடியிடம் வீழ்ந்தது.
கலப்பு இரட்டையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் இஷான் பாட்நாகர், தனிஷா கிராஸ்டோ ஜோடி 19-21, 20-22 என, மலேசியாவின் கோ சூன், ஷெவான் ஜெமி ஜோடியிடம் தோல்வியடைந்தது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!