Load Image
dinamalar telegram
Advertisement

இரண்டாவது சுற்றில் சிந்து, ஸ்ரீகாந்த் * தாய்லாந்து பாட்மின்டனில்

பாங்காக்: தாய்லாந்து பாட்மின்டன் தொடரின் இரண்டாவது சுற்றுக்கு சிந்து, ஸ்ரீகாந்த் முன்னேறினர்.

தாய்லாந்தில் சர்வதேச பாட்மின்டன் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சிந்து, அமெரிக்காவின் லாரன் லாமை சந்தித்தார். முதல் செட்டை 21-19 என கைப்பற்றிய சிந்து, அடுத்த செட்டை 19-21 என இழந்தார்.

வெற்றியாளரை முடிவு செய்ய நடந்த மூன்றாவது, கடைசி செட்டை சிந்து 21-18 என வசப்படுத்தினார். முடிவில் சிந்து 21-19, 19-21, 21-18 என போராடி வென்று அடுத்த சுற்றுக்குள் நுழைந்தார்.

மற்றொரு முதல் சுற்றில் இந்தியாவின் செய்னா நேவல், 21-11, 15-21, 17-21 என்ற கணக்கில் தென் கொரியாவின் கிம் கா யுன்னிடம் தோல்வியடைந்தார்.

மற்றொரு போட்டியில் இந்தியாவின் மாளவிகா, 17-21, 21-15, 21-11 என உக்ரைனின் மரியாவை வென்றார். அஷ்மிதா, ஆகர்ஷி முதல் சுற்றில் வீழ்ந்தனர்.

ஸ்ரீகாந்த் அபாரம்

ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், பிரான்சின் பிரைஸ் லெவர்டெசை சந்தித்தார். சமீபத்திய தாமஸ் தொடரில் ஒரு போட்டியில் கூட தோற்காமல் வலம் வந்த ஸ்ரீகாந்த், இம்முறை முதல் செட்டை 18-21 என இழந்தார். பின் அடுத்த இரு செட்டையும் 21-10, 21-16 என கைப்பற்றினார். முடிவில் ஸ்ரீகாந்த் 18-21, 21-10, 21-16 என வெற்றி பெற்றார்.

தாமஸ் தொடர் காலிறுதி, அரையிறுதியில் அசத்திய இந்தியாவின் பிரனாய், 17-21, 21-15, 15-21 என மலேசியாவின் லியு டாரனிடம் வீழ்ந்தார்.

ஆண்கள் ஒற்றையரில் நடந்த மற்ற முதல் சுற்று போட்டிகளில் இந்திய வீரர்கள் சாய் பிரனீத், சவுரப் வர்மா தோல்வியடைந்தனர்.

பெண்கள் இரட்டையரில் இந்தியாவின் அஷ்வினி, ஷிகா ஜோடி, கலப்பு இரட்டையரில் இஷான், தனிஷா ஜோடி அடுத்த சுற்றுக்கு முன்னேறின.

Telegram Banner
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement