சாட்டோகிராம்: இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் முஷ்பிகுர் ரஹிம் சதம் விளாச, முதல் இன்னிங்சில் 465 ரன் குவித்த வங்கதேச அணி முன்னிலை பெற்றது.
வங்கதேசம் சென்றுள்ள இலங்கை அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் சாட்டோகிராமில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இலங்கை அணி 397 ரன் எடுத்தது. மூன்றாம் நாள் முடிவில், முதல் இன்னிங்சில் வங்கதேச அணி 3 விக்கெட்டுக்கு 318 ரன் எடுத்திருந்தது. முஷ்பிகுர் (53), லிட்டன் (54) அவுட்டாகாமல் இருந்தனர்.
நான்காம் நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்சை தொடர்ந்த வங்கதேச அணிக்கு முஷ்பிகுர் ரஹிம், லிட்டன் தாஸ் ஜோடி நம்பிக்கை அளித்தது. நான்காவது விக்கெட்டுக்கு 165 ரன் சேர்த்த போது லிட்டன் (88) அவுட்டானார். தசை பிடிப்பில் இருந்து மீண்ட தமிம் இக்பால் (133) நிலைக்கவில்லை. சாகிப் அல் ஹசன் (26) சோபிக்கவில்லை.
பொறுப்பாக ஆடிய முஷ்பிகுர் ரஹிம், டெஸ்ட் அரங்கில் தனது 8வது சதம் அடித்தார். இவர், 105 ரன்னில் அவுட்டானார். நயீம் இஸ்லாம் (9), தைஜுல் இஸ்லாம் (20), ஷோரிபுல் இஸ்லாம் (3) ஏமாற்றினர். முதல் இன்னிங்சில் 465 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆன வங்கதேச அணி 68 ரன் முன்னிலை பெற்றது.
பின், இரண்டாவது இன்னிங்சை துவக்கிய இலங்கை அணிக்கு ஒஷாடா பெர்ணான்டோ (19), லசித் எம்பல்டேனியா (2) ஏமாற்றினர். நான்காம் நாள் முடிவில் 2வது இன்னிங்சில் இலங்கை அணி 2 விக்கெட்டுக்கு 39 ரன் எடுத்து, 29 ரன் பின்தங்கி இருந்தது. கேப்டன் கருணாரத்னே (18) அவுட்டாகாமல் இருந்தார். வங்கதேசம் சார்பில் தைஜுல் ஒரு விக்கெட் வீழ்த்தினார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!