புதுடில்லி: ''தாமஸ் கோப்பை வென்ற இந்தியா, பாட்மின்டன் அரங்கில் 'சூப்பர் பவராக' உருவெடுத்துள்ளது,'' என பிரகாஷ் படுகோனே தெரிவித்தார்.
தாய்லாந்தில் நடந்த தாமஸ் கோப்பை பாட்மின்டன் பைனலில் அசத்திய இந்திய ஆண்கள் அணி, இந்தோனேஷியாவை வீழ்த்தியது. 73 ஆண்டு கால தாமஸ் கோப்பை வரலாற்றில் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது. லக்சயா சென், சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி, ஸ்ரீகாந்த், பிரனாய் உள்ளிட்ட இந்திய வீரர்கள் தேசத்தின் 'ஹீரோ'க்களாக உச்சம் தொட்டனர்.
இது குறித்து 1979ல் தாமஸ் கோப்பை அரையிறுதிக்கு இந்தியாவை அழைத்து சென்றவரும், 1980ல் ஆல் இங்கிலாந்து சாம்பியன் பட்டம் வென்றவருமான ஜாம்பவான் பிரகாஷ் படுகோனே கூறியது:
இந்திய வீரர்களின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த பரிசாக தாமஸ் கோப்பை அமைந்தது. பாட்மின்டன் அரங்கில் 'சூப்பர்பவராக' உருவெடுத்துள்ளோம். இனி எதிரணிகள் நம்மை கண்டு அஞ்சும். இந்த தருணத்தை பயன்படுத்தி முன்னேறி செல்ல வேண்டும். இந்தியாவில் பாட்மின்டன் பிரபலமடையும். அதிக வளர்ச்சி காணும். நிறைய இளம் வீரர்கள் பாட்மின்டனை தேர்வு செய்வர். அரசு, 'கார்ப்பரேட்' நிறுவனங்கள் உதவ முன் வரும். ஒட்டு மொத்தமாக பாட்மின்டனின் தரம் உயரும்.
இந்திய பாட்மின்டன் கூட்டமைப்புக்கு அதிக பொறுப்பு உண்டு. தொலைநோக்கு பார்வையுடன் திட்டமிட்டு செயல்பட வேண்டும். உள்ளூர் அளவில் அரங்கம் அமைத்தல், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், கார்ப்பரேட் உதவியை பெறுதல் என அடுத்த 5-10 ஆண்டுகளை கணக்கில் கொண்டு திட்டங்களை வகுக்க வேண்டும். மாநில பாட்மின்டன் சங்கங்களும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இரட்டையர் பலம்
முன்பு இரட்டையர் பிரிவு நமது பலவீனமாக இருந்தது. தற்போது சத்விக்சாய்ராஜ், சிராக் அசத்துகின்றனர். இவர்களது ஆட்டம், இந்திய பாட்மின்டன் அரங்கில் அற்புதத்தை நிகழ்த்தியுள்ளது. உலகின் எந்த வீரர்களையும் வீழ்த்தக்கூடிய திறமை பெற்றவர்களாக உள்ளனர். இருவரையும் பார்த்து இனி இளம் வீரர்கள் இரட்டையர் பிரிவை ஆர்வத்துடன் தேர்வு செய்வர்.
இந்திய ஆண்கள் அணி வலுவாக உள்ளது. இளம் லக்சயா சென், அனுபவ ஸ்ரீகாந்த், பிரனாய் உள்ளனர். பெண்கள் அணி சற்று பலவீனமாக உள்ளது. செய்னா, சிந்து அளவுக்கு திறமையான இளம் வீராங்கனைகள் இல்லாதது கவலை அளிக்கிறது.
தாமஸ் கோப்பை வென்றது இந்தியா மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது. வரும் காலங்களில் அரையிறுதி, பைனல் வரை சென்றால் ரசிகர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டர். இதனை உணர்ந்து ஒவ்வொரு தொடரிலும் தங்கம் வென்று அசத்த வேண்டும்.
இவ்வாறு பிரகாஷ் படுகோனே கூறினார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!