Load Image
dinamalar telegram
Advertisement

தாமஸ் பாட்மின்டன்: இந்தியா சரித்திர சாதனை

பாங்காக்: தாமஸ் கோப்பை பாட்மின்டனில் அசத்திய இந்திய அணி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்தது. பைனலில் 3-0 என, இந்தோனேஷியாவை வீழ்த்தியது.

தாய்லாந்தில், அணிகளுக்கு இடையிலான தாமஸ், உபர் கோப்பை பாட்மின்டன் தொடர் நடந்தது. ஆண்களுக்கான தாமஸ் கோப்பை பைனலில் இந்திய அணி, 'நடப்பு சாம்பியன்' அந்தஸ்துடன் களமிறங்கிய இந்தோனேஷியாவை எதிர்கொண்டது. இதுவரை 14 முறை கோப்பை வென்ற இந்தோனேஷியாவுக்கு எதிராக இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர்.



ஒற்றையர் பிரிவு முதல் போட்டியில் இந்தியாவின் லக்சயா சென், இந்தோனேஷியாவின் அந்தோணி சினிசுகா ஜின்டிங் மோதினர். ஒரு மணி நேரம், 5 நிமிடம் நீடித்த போட்டியில் அபாரமாக ஆடிய லக்சயா சென் 8-21, 21-17, 21-16 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.



இரட்டையர் பிரிவு முதல் போட்டியில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி 18-21, 23-21, 21-19 என, இந்தோனேஷியாவின் முகமது அஹ்சன், கெவின் சஞ்சயா சுகமுல்ஜோ ஜோடியை வீழ்த்தியது.



ஒற்றையர் பிரிவு இரண்டாவது போட்டியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், இந்தோனேஷியாவின் ஜோனாதன் கிறிஸ்டீ மோதினர். மொத்தம் 47 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய ஸ்ரீகாந்த் 21-15, 23-21 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.



இதனையடுத்து இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று, தாமஸ் கோப்பை வரலாற்றில் முதன்முறையாக தங்கம் வென்று வரலாறு படைத்தது. இது, 73 ஆண்டு கால தாமஸ் கோப்பை வரலாற்றில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் பதக்கம்.



பிரதமர் வாழ்த்து

பிரதமர் மோடி வெளியிட்ட வாழ்த்து செய்தியில், ''இந்திய பாட்மின்டன் அணி புதிய வரலாறு படைத்துள்ளது. தாமஸ் கோப்பை வென்றதன் மூலம், ஒட்டுமொத்த தேசமும் மகிழ்ச்சியில் உள்ளது. இந்திய அணியினருக்கு வாழ்த்துக்கள். அவர்களது எதிர்கால முயற்சிகளுக்கும் வாழ்த்துக்கள். இந்த வெற்றி, இளம் வீரர்களுக்கு ஊக்கமாக அமையும்,'' என, தெரிவித்திருந்தார்.



பிரபலங்கள் பாராட்டு

இந்திய பாட்மின்டன் வீராங்கனை செய்னா நேவல் வெளியிட்ட செய்தியில், ''தாமஸ் கோப்பை வென்று வரலாறு படைத்த இந்திய வீரர்களுக்கு வாழ்த்துக்கள்,'' என, தெரிவித்திருந்தார்.



இதேபோல, இந்திய கிரிக்கெட் வீரர்களான விராத் கோஹ்லி, லட்சுமண், கவுதம் காம்பிர், இந்திய கால்பந்து அணி கேப்டன் சுனில் செத்ரி, பீஜிங் ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற இந்தியாவின் அபினவ் பிந்த்ரா, மத்திய விளையாட்டு அமைச்சர் அனுராக் தாகூர், முன்னாள் மத்திய விளையாட்டு அமைச்சர் கிரண் ரிஜிஜு, இந்திய பாட்மின்டன் சங்க தலைவர் ஹிமந்தா பிஸ்வா சர்மா உள்ளிட்டோரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.



ரூ. ஒரு கோடி பரிசு

முதன்முறையாக தாமஸ் கோப்பை வென்று வரலாறு படைத்த இந்திய வீரர்களுக்கு, மத்திய விளையாட்டு துறை அமைச்சகம் சார்பில் ரூ. ஒரு கோடி பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.



Telegram Banner
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement