dinamalar telegram
Advertisement

டிங்கோ சிங் மரணம்: குத்துச்சண்டை அரங்கில் சோகம்

Share

புதுடில்லி: இந்திய குத்துச்சண்டை ஜாம்பவான் டிங்கோ சிங், கல்லீரல் புற்றுநோயால் மரணமடைந்தார்.

இந்தியாவின் முன்னாள் குத்துச்சண்டை வீரர் டிங்கோ சிங் 42. மணிப்பூரை சேர்ந்த இவர், 1998ல் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடந்த ஆசிய விளையாட்டு குத்துச்சண்டை 54 கி.கி., எடைப்பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார். தவிர இவர், இந்திய கடற்படையில் பணியாற்றினார். இவருக்கு, நாட்டின் உயரிய அர்ஜுனா (1998), பத்ம ஸ்ரீ (2013) விருது வழங்கப்பட்டது. கடந்த 2017 முதல், கல்லீரல் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த இவருக்கு, கடந்த ஆண்டு மஞ்சள் காமாலை, கொரோனா தொற்று உறுதியானது. சிகிச்சைக்கு பின், அதிலிருந்து மீண்டார்.

இந்நிலையில் நேற்று, கல்லீரல் புற்றுநோயால் டிங்கோ சிங் காலமானார். இவருக்கு, பாபாய் நங்கோம் என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.



நட்சத்திரங்கள் இரங்கல்

டிங்கோ சிங் மறைவுக்கு இந்திய குத்துச்சண்டை நட்சத்திரங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மேரி கோம்: டிங்கோ சிங் ஒரு 'ராக்ஸ்டார்', ஒரு ஜாம்பவான். மணிப்பூரில் அவர் விளையாடுவதை பார்க்க நான் வரிசையில் காத்திருந்தது எனக்கு நினைவிருக்கிறது. என்னை ஊக்கப்படுத்திய அவர் தான் என் 'ஹீரோ'. இது மிகப் பெரிய இழப்பு. அவர் மிக விரைவில் நம்மைவிட்டுச் சென்றுவிட்டார்.



விஜேந்தர் சிங்: டிங்கோ சிங்கின் வாழ்க்கை பயணமும், போராட்டமும், அடுத்து வரவிருக்கும் தலைமுறையினருக்கு ஒரு உத்வேகமாக இருக்கட்டும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் மனவலிமை கிடைக்க வேண்டும் என்று நான் பிரார்த்தனை செய்கிறேன்.



விகாஸ் கிருஷ்ணன்: ஒரு ஜாம்பவானை இழந்துவிட்டோம்.



கிரண் ரிஜிஜு, மத்திய விளையாட்டு துறை அமைச்சர்: டிங்கோ சிங்கின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல். மிகச் சிறந்த குத்துச்சண்டை வீரர்களில் ஒருவரான இவர், 1998ல் பாங்காக் ஆசிய விளையாட்டில் தங்கம் வென்றதன்மூலம், இந்தியாவில் குத்துச்சண்டை போட்டி மீதான ஆர்வத்தை துாண்டியது.



அஜய் சிங், இந்திய குத்துச்சண்டை கூட்டமைப்பு தலைவர்: டிங்கோ சிங்கின் மறைவு, இந்திய குத்துச்சண்டை அரங்கில் நிரப்ப முடியாத வெற்றிடத்தை உருவாக்கி உள்ளது. இவரது குத்துச்சண்டை வாழ்க்கை, அடுத்து வரும் தலைமுறையினருக்கும் ஊக்கமாக இருக்கும்.



பிரதமர் இரங்கல்

பிரதமர் மோடி, 'டுவிட்டரில்' வெளியிட்ட செய்தியில், ''விளையாட்டு அரங்கில் டிங்கோ சிங் ஒரு 'சூப்பர் ஸ்டார்'. சிறந்த குத்துச்சண்டை வீரரான இவர், நிறைய விருதுகள் பெற்றுள்ளார். இந்தியாவில் குத்துச்சண்டை போட்டி பிரபலமடைய காரணமாக இருந்தார். அவரது மரணம் வருத்தம் அளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்,'' என, தெரிவித்திருந்தார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement