dinamalar telegram
Advertisement

அரையிறுதியில் ஜோகோவிச்–நடால்: பிரெஞ்ச் ஓபனில் மோதல்

Share

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் செர்பியாவின் ஜோகோவிச், ஸ்பெயினின் நடால் மோதுகின்றனர். பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலுக்கு ரஷ்யாவின் பவ்லிசென்கோவா முன்னேறினார்.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில், பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் உலகின் 'நம்பர்-1' செர்பியாவின் நோவக் ஜோகோவிச், இத்தாலியின் மேட்டியோ பெரேட்டினி மோதினர். முதலிரண்டு செட்களை 6-3, 6-2 எனக் கைப்பற்றிய ஜோகோவிச், 'டை பிரேக்கர்' வரை சென்ற 3வது செட்டை 6-7 என இழந்தார். பின் எழுச்சி கண்ட இவர், 4வது செட்டை 7-5 என போராடி தன்வசப்படுத்தினார்.

மூன்று மணி நேரம், 28 நிமிடம் நீடித்த போட்டியின் முடிவில் ஜோகோவிச் 6-3, 6-2, 6-7, 7-5 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார். இவர், பிரெஞ்ச் ஓபனில் 11வது முறையாக அரையிறுதிக்கு முன்னேறினார். இன்று நடக்கும் அரையிறுதியில் ஜோகோவிச், 'நடப்பு சாம்பியன்' ஸ்பெயினின் ரபெல் நடாலை எதிர்கொள்கிறார். ஏ.டி.பி., அரங்கில் இவர்கள் இதுவரை 57 முறை மோதியுள்ளனர். இதில் ஜோகோவிச் 29, நடால் 28 போட்டிகளில் வெற்றி பெற்றனர். பிரெஞ்ச் ஓபனில் இவர்கள் மோதிய 8 போட்டியில் நடால் 7, ஜோகோவிச் ஒன்றில் வென்றனர். கிராண்ட்ஸ்லாம் அரங்கில் இவர்கள் 16 முறை மோதியுள்ளனர். இதில் நடால் 10, ஜோகோவிச் 6ல் வெற்றி பெற்றனர்.

பைனலில் பவ்லிசென்கோவா

பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் ரஷ்யாவின் அனஸ்டாசியா பவ்லிசென்கோவா, சுலோவாகியாவின் டமாரா ஜிடான்செக் மோதினர். முதல் செட்டை 7-5 எனக் கைப்பற்றிய பவ்லிசென்கோவா, 2வது செட்டை 6-3 என வென்றார். ஒரு மணி நேரம், 34 நிமிடம் நீடித்த போட்டியில் பவ்லிசென்கோவா 7-5, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, கிராண்ட்ஸ்லாம் அரங்கில் முதன்முறையாக பைனலுக்குள் நுழைந்தார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement